சில நாட்களுக்கு முன்னால் கேரளாவில் ஒரு பச்சிளம் குழந்தை, பெற்ற தாய் மற்றும் அவரது நண்பராலேயே கொல்லப்பட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால் கோவையில் சின்னக்குழந்தை ஒன்று பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறது. இது போன்ற குரூரமான குற்றங்களைக் கேள்வியுறும்போதெல்லாம் மனிதர்கள் மீதான நமது நம்பிக்கை அற்றுப்போகிறது. அந்தக் குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் இரக்கமின்றிக் கொல்லப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், கொந்தளித்துப் போகிறோம்.
ஆனால், இந்த எண்ணம் சரியானதா?
தமிழகத்தில் சென்ற ஆண்டு 3 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உத்திரபிரதேசத்தில் இந்த எண்ணிக்கை நாட்டிலேயே உச்சமாக 48 ஆக இருக்கிறது. காவல்துறை என்கவுண்டரில் ஒரு கொடூரமான குற்றவாளியோ அல்லது ஒரு பாலியல் வன்கொடுமைக் குற்றவாளியோ சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வரும்போது, சமூக ஊடகங்கள் கொண்டாடுகின்றன. ’சரியான தண்டனை’ என்று நாமும் உற்சாகமடைகிறோம். ஆனால், சற்றே நிதானித்துச் சிந்தித்தால், இந்த உடனடி நீதியின் பின்னால் ஒளிந்திருக்கும் விபரீதங்களும், சட்டச் சிக்கல்களும் எத்தகைய ஆபத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன என்பது புரியும். இப்படிக் கொல்லப்படும் நபர்கள் உண்மையாக குற்றவாளிகள்தனா எனும் முதல் கேள்விதான் நம்மைப் பதற வைக்கிறது!
தற்காப்பு என்னும் கேடயம்
சட்டப்படி காவல் துறைக்கு யாரையும் சுட்டுக் கொல்லும் அதிகாரம் நேரடியாக வழங்கப்படவில்லை. இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவுகள் 96-106 (Right of Private Defense) பொதுமக்களுக்கு வழங்கும் ’தற்காப்பு உரிமை’யைப் பயன்படுத்தியே பெரும்பாலான போலீஸ் என்கவுண்டர்களும் நடத்தப்படுகின்றன. ’குற்றவாளி போலீசாரின் துப்பாக்கியைப் பறித்துச் சுட முயன்றார், அதனால் தற்காப்பிற்காகச் சுட்டோம்’ என்ற ஒரே ஒரு பொதுவான திரைக்கதைதான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா என்கவுண்டர்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆயுதம் தாங்கிய, பயிற்சி பெற்ற பல போலீசார் சூழ்ந்திருக்கும்போது, கைகளில் விலங்கிடப்பட்ட ஒரு குற்றவாளி எப்படித் துப்பாக்கியைப் பறிக்க முடியும் என்ற எளிய கேள்வியிலேயே இதிலிருக்கும் அபத்தம் வெளிப்பட்டுவிடுகிறது.
பொதுமக்களுக்கு நீதிமன்றங்களின் மீது இருக்கும் அதிருப்தியும், வழக்குகள் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படுவதால் ஏற்படும் சலிப்புமே இப்படி என்கவுண்டர்களைக் கொண்டாட வைக்கிறது. ஆனால், என்கவுண்டர் என்பது நீதி அல்ல; அது இன்னொரு குற்றம். நீதிமன்றங்கள் மட்டுமே ஆதாரங்கள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளிக்குத் தண்டனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்ய முடியும்.
குற்ற அரசியல்
பல நேரங்களில் என்கவுண்டர்கள் என்பது குற்றத்தை ஒழிப்பதற்காக நடப்பதில்லை; மாறாக, குற்றத்தின் பின்னணியில் இருக்கும் உண்மையை மறைப்பதற்காகவும், பெரும் புள்ளிகளைக் காப்பாற்றுவதற்காகவும், பொதுசமூக திருப்தியை ஏற்படுத்துவதற்காகவுமே நடத்தப்படுகிறது. ஒரு குற்றவாளி உயிரோடு இருக்கும் வரைதான் அவனிடம் விசாரணை நடத்த முடியும். அவனுக்கு யாருடன் தொடர்பு இருந்தது, யார் அவனைப் பயன்படுத்தினார்கள், யார் அவனைப் பாதுகாத்தார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம். ஆனால், அவன் இறந்துவிட்டால், அந்தக் கேள்விகளும் அவனோடு ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றன. மேலும், என்கவுண்டர்கள் மூலமாகக் குற்றங்களைக் குறைத்துவிடலாம் என்பது ஒரு மிகப்பெரிய மாயை. அதற்கு மேலே சொன்ன உத்திரப்பிரதேச என்கவுண்டர் எண்ணிக்கையே சாட்சி. ஒவ்வொரு ஆண்டும் அங்கே என்கவுண்டர்கள் குறைவதாகவும் தெரியவில்லை, குற்றங்கள் குறைவதாகவும் தெரியவில்லை. வன்முறை மூலம் வன்முறையை ஒடுக்க நினைப்பது, ஒருபோதும் நிரந்தரப் பயனைத் தராது. ஒரு குற்றவாளியைச் சுட்டுக் கொல்வதால், அந்தக் குற்றம் உருவாவதற்கான சமூக, பொருளாதாரக் காரணங்கள் மறைந்துவிடுவதில்லை. உதாரணத்திற்கு, பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துவிடுமா என்றால், குறையாது என்பதே கசப்பான உண்மை.
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், ஆரம்பத்தில் ரவுடிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட இப்படியான சர்வாதிகாரங்கள், பின்னர் அரசியல் எதிரிகளுக்கும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராக பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் உணரமுடியும். அதிகாரம் எல்லை மீற அனுமதிக்கப்பட்டால், அது எங்கே போய் நிற்கும் என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது. என்கவுண்டர் என்பது சில நேரங்களில் உண்மையான குற்றவாளிக்கான சரியான தண்டனையாகக் கூட இருக்கலாம். ஆனால், அந்த வழிமுறையை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டால், அதன் அடுத்தடுத்த பலிகள் குற்றவாளிகளாகவே இருக்க வேண்டும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால்தான் என்கவுண்டர் என்பது ஜனநாயகத்தின் எல்லைகளைச் சோதிக்கும் ஆபத்தான அரசியல் எனப்படுகிறது.