கர்ப்பமடைந்தது போல நடிக்கும் பாண்டா கரடிகளின் சேட்டை... காரணம் என்ன?

பாண்டா கரடிகள் மிகுந்த சேட்டை செய்பவை. புத்திசாலித்தனத்துடன் தந்திரமும் மிகுந்தவை. பாண்டா கரடிகள் பெரும்பாலும் ஒரு குட்டியைத்தான் பெற்றெடுக்கும். சில சமயங்களில் இரண்டு குட்டிகள் பெற்றால், ஒன்றைத் தாய் பாண்டாதான் அதை வளர்க்கும்.
Panda
Panda
Published on

பாண்டா கரடி சீனாவின் தேசிய விலங்கு. சீன நாட்டில் மட்டுமே பாண்டா கரடிகள் வாழ்கின்றன. நட்பின் அடிப்படையில் சில நாடுகளுக்கு பாண்டா கரடிகளை சீனா பரிசாக வழங்கியுள்ளது. இந்தக் கரடிகளை குறிப்பிட்ட காலம் வரை, அந்த நாடுகள் வளர்க்கலாம். பின்னர், அவற்றை மீண்டும் சீனாவுக்கு அனுப்பி விட வேண்டும். இந்த பாண்டாக்களின் குட்டிகளையும் சீனாவிடமே தந்துவிட வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு பாண்டா கரடிகளை சீனா பரிசாக வழங்குகிறது. பாண்டா கரடிகள் அழிவின் விளிம்பில் இருந்தன. சீனாவில் செங்குடு என்ற நகரத்தில் பிரமாண்டமான பாண்டா ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மையத்தை (Chengdu Research Base of Giant Panda Breeding) உருவாக்கி பாண்டா கரடிகளை பாதுகாக்கும் முயற்சியில் சீன அரசு ஈடுபட்டது. இதனால், சீனாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாண்டா கரடிகள் பெருகியுள்ளன. இவற்றில்,1600 கரடிகள் மத்திய சீனாவிலும் 400 கரடிகள் பாதுகாப்பு மையத்திலும் வசிக்கின்றன. இதனால், சீன அரசு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. பாண்டா கரடிகளின் முக்கிய உணவு மூங்கில்தான். இந்த மரத்தின் குருத்துக்களைதான் பாண்டா கரடிகள் விரும்பி உண்ணும்.

எனவே, சீனா முழுவதும் பரவலாக மூங்கில் மரங்களை வளர்க்க சீன அரசு உத்தரவிட்டது. பராமரிப்பு மையத்திலுள்ள பாண்டா கரடிகளுக்கு பயிற்சி கொடுத்து, காட்டில் சுதந்திரமாக வாழவும் பாண்டா கரடிகள் அனுமதிக்கப்படுகின்றன. பாண்டா கரடிகளைக் காண உலகம் முழுக்கவிருந்து சுற்றுலாப்பயணிகளும் சீனாவுக்கு வருகை தருகின்றனர். பாண்டா கரடிகள் சீன நாட்டின் தேசியச் சொத்து.

பாண்டா கரடிகள் மிகுந்த சேட்டை செய்பவை. புத்திசாலித்தனத்துடன் தந்திரமும் மிகுந்தவை. பாண்டா கரடிகள் பெரும்பாலும் ஒரு குட்டியைத்தான் பெற்றெடுக்கும். சில சமயங்களில் இரண்டு குட்டிகள் பெற்றால், ஒன்றைத் தாய் பாண்டாதான் அதை வளர்க்கும் . மற்றொன்று பராமரிப்பாளர்கள் கையில் இருக்கும். இவர்கள், தாயிடம் குட்டியை மாற்றி மாற்றிக் கொடுத்து தாய்ப்பால் கொடுக்க வைப்பார்கள். மேலும், பாண்டா கரடிகளுக்கு கர்ப்ப காலமும் குட்டிகள் பிறப்பும் மிக முக்கியமானது. ஏனென்றால், ஆய்வு மையத்திலுள்ள 24 சதவிகித பெண் பாண்டாக்கள்தான் குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. ஸ்பெஷல் உணவை பெறவும் , சலுகைகள் பெறவும் பெண் பாண்டா கரடிகள் கர்ப்பமானது போல நடிக்கவும் செய்வது உண்டு.

கடந்த 2014ம் ஆண்டு செங்குடு பாண்டா பராமரிப்பு மையத்தில் 6 வயதான ஐ ஹின் (Ai Hin) என்ற பாண்டா கரடி கர்ப்பமனது. பசியில் இல்லாமல், நகர முடியாமல் கர்ப்பமைடைந்தது போல அறிகுறிகளைக் காட்டியது. இதனால், பராமரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அதற்குத் தேவயான அளவை விட அதிக மூங்கில் குருத்துக்கள், உணவு, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை வழங்கத் தொடங்கினர். இந்தப் பாண்டாவை தனி ஏசி அறையில் வைத்து நல்ல வசதிகளை செய்து கொடுத்தனர். இதையடுத்து ஐ ஹின் உணவுகளை வெட்டத் தொடங்கியது. கேட்கக் கேட்க உணவுகள் தரப்பட்டன. உற்சாகமாக சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருந்தது.

ஐ ஹின் குழந்தை பெற்றெடுப்பதை லைவ் நிகழ்ச்சியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதைக் காணவும் சீன மக்கள் ஆவலுடன் இருந்தனர். பாண்டாவுக்கு கர்ப்ப காலம் 200 நாட்கள். ஆனால் இரு மாதங்களிலேயே ஐ ஹின் கர்ப்பம் இல்லாதது போல நார்மல் வாழ்க்கைக்கு வந்து விட்டது. இது, சீன ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆராய்ச்சியில் இறங்கிய போதுதான் அதிக மூங்கில் குருத்துக்கள், உணவுக்கு ஆசைப்பட்டு பாண்டா கரடிகள் கர்ப்பமானது போல நடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பராமரிப்பு மையத்தில் மட்டுமல்ல, காடுகளில் வசிக்கும் பெண் பாண்டாக்களும் அதிக மூங்கில் குருத்துக்கள் சாப்பிட வேண்டுமென்பதற்காக கர்ப்பமடைந்தது போல நடிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் ரொம்பத்தான் ஓவரு பாண்டா இதெல்லாம்!

Puthuyugam
www.puthuyugam.com