யானைகள் சண்டையில் பலியான பெண்.. நமக்கான பாடம் என்ன?

வனவிலங்குகள் எவ்வளவுதான் பழக்கப்படுத்தப்பட்டாலும், அவற்றின் குணத்தைக் கணிக்க முடியாது. இதுதான் கர்நாடகத்தில் சென்னைப் பெண் பலியாகக் காரணமாக அமைந்து விட்டது.
Dubare Elephant Camp
Dubare Elephant Camp
Published on

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் துபாரே யானைகள் முகாம் (Dubare Elephant Camp) உள்ளது. காவிரி நதிக்கரையிலுள்ள இந்த முகாமில், யானைகள் ஆற்றில் குளிக்கும் காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடுவார்கள். இரு நாட்களுக்கு முன்பு, காவிரியில் யானைகளை பாகன்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். சுற்றுலாப் பயணிகளும் யானைகளின் மிக அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தனர். புகைப்படம், செல்ஃபி எடுத்து மகிழ்ந்துக் கொண்டிருந்தனர்.

இந்தத் தருணத்தில்தான், அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. குளித்துக்கொண்டிருந்த 26 வயதான கஞ்சன் என்ற யானை திடீரென கோபமடைந்து, அருகில் இருந்த 36 வயதான மார்த்தாண்டா என்ற யானையை கடுமையாகத் தாக்கத் தொடங்கியது. தந்தத்தால் குத்திக் கொண்டே இருந்தது. இந்தத் தாக்குதலில் மார்த்தாண்டா யானை சரிந்து ஆற்றில் விழுந்தது. அப்போது, இந்த யானைக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ஜியுனேஷ் (Jyunesh) என்ற பெண் சிக்கிக் கொண்டார்.

கிட்டத்தட்ட 4 ,500 கிலோ எடை கொண்ட யானை மனிதர்கள் மேல் விழுந்தால் என்னவாகும்? ஜியுனேஷ் நசுங்கியே போனார். மனைவியைக் காப்பாற்ற அவரின் கணவர் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு, போராடிய வீடியோ இணையத்தில் வெளியாகி கதிகலங்க வைத்தது. முடிவில், உடல் நசுங்கி அந்தப் பெண்மணி பலியாகிப் போனார். இந்தச் சம்பவம் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இத்தகைய, வேதனையான சூழலிலும், பலியான மனைவியின் கண்களை தானம் செய்ய அவரின் கணவர் முன்வந்தார். பிற உள்ளுறுப்புகள் அனைத்தும் சேதமடைந்து விட்டதால், தானம் வழங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதுமட்டுமல்ல, கஞ்சன் யானையால் தாக்கப்பட்ட மார்த்தாண்டா யானையும் சிகிச்சை பலனில்லாமல் இறந்து விட்டது. இந்த சோகமான சம்பவம் நமக்கு உணர்த்தும் பாடம்தான் என்ன?

Kanjan attacks  Marthanda
Kanjan attacks Marthanda

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் முதுமலை யானைகள் முகாம் உள்ளது. இந்தியாவிலேயே பழமையான புகழ்வாய்ந்த முகாம் இது. இங்கு, 'கும்கி' யானைகள் வளர்க்கப்படுகின்றன. இந்த யானைகளும் மாயாற்றில் குளியல் போடும். ஆனால், ஒரு போதும் யானைகள் குளிக்கும் போது, சுற்றுலாப் பயணிகளை அருகில் அனுமதிக்க மாட்டார்கள். பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடுகள் நேர்த்தியாக கடைபிடிக்கப்படும்.

ஆனால், துபாரே யானைகள் முகாமில் யானைகள் குளிக்கும் போது, சுற்றுலாப்பயணிகள் யானைகளுடன் சேர்ந்து குளிக்கின்றனர். யானையையும் குளிப்பாட்டுகின்றனர். அதன் உடலைத் தொட்டுப்பார்க்கின்றனர். நெருக்கமாக அமர்ந்து புகைப்படம் , செல்ஃபி எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

அவ்வளவு ஏன்... குழந்தைகளைக் கூட யானையின் தந்தங்களை தொட அனுமதிக்கின்றனர்.யானைகளுக்கு அதன் தந்தத்தை அறிமுகம் இல்லாதவர்கள் தொட்டால் பிடிக்கவே பிடிக்காது. தலைமை பாகன், உதவி பாகன்களை மட்டுமே யானைகள் தந்தத்தைத் தொட அனுமதிக்கும்.

ஆனால், 'சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கிறோம்' என்ற பெயரில் இத்தகைய நடவடிக்கைகைளை பாகன்களே அனுமதிக்கின்றனர். யானைகள் மிகவும் சென்சிடிவானவை. எவ்வளவுதான் பழக்கப்படுத்தியிருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் ஆக்ரோஷம் அடையக்கூடியவை. மனிதர்களின் குணத்தையே கணிக்க முடியாத போது, விலங்குகளின் குணத்தை கணிக்க முடியுமா? அதோடு, யானைகளுக்கு அருகில் சென்று புகைப்படம் எடுப்பது எல்லாம் அவற்றுக்கு மன அழுத்தத்தைத் தரக் கூடியது என்பதையும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாகவே, கஞ்சன் யானை மிரண்டு போய் மார்த்தாண்டா யானையைத் தாக்கியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தற்போது, கர்நாடக வனத்துறை அமைச்சகம் துபாரே யானைகள் முகாமில் யானைகளை நெருங்க சுற்றுலாபயணிகளுக்கு தடை விதித்துள்ளது.

1. யானைகளை 100 அடி தூரத்தில் இருந்துதான் பார்க்க வேண்டும்.

2. யானைகள் அருகில் சென்று, புகைப்படங்கள் / செல்ஃபி எடுக்கக் கூடாது.

3. எக்காரணத்தைக் கொண்டும் யானைகளின் தந்தங்களை தொட, பாகன்கள் அனுமதிக்கக்கூடாது.

4. பாகன்களுடன் சேர்ந்து சுற்றுலா பயணிகள் யானைகளைக் குளிப்பாட்ட அனுமதிக்கக் கூடாது.

5. யானைகளுக்கு பழங்கள், வெல்லம் போன்ற உணவுகள் வழங்க கூடாது.

என ஐந்து முக்கிய தடைகளை கர்நாடக வனத்துறை அமைச்சகம் விதித்துள்ளது.

யானை என்றில்லை, எந்த விலங்குகளையும் அதன் குணமறியாமல் மனிதர்கள் நெருங்குவதும், தொட்டு விளையாடுவதும் அறவே தவிர்க்க வேண்டும்.

Puthuyugam
www.puthuyugam.com