கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் காந்தளூர் கிராமம் அமைந்துள்ளது. இது . வித்தியாசமான சீதோஷ்ண நிலை கொண்ட கிராமம். கேரளாவின் மற்ற பகுதிகளில் விளையாத பழங்கள் இங்கே விளைகின்றன. இயற்கை முறையில் இங்கு தக்காளி, முட்டைக்கோஸ், காலிப்ஃப்ளவர், கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் செழிப்பாக விளைவிக்கப்படுகின்றன. இஞ்சி, கடுகு, பூண்டு, கொத்தமல்லி போன்றவையும் இங்கு விளைகின்றன. ஆப்பிளும் விளைவிக்கப்படுகிறது. எனவே இந்த கிராமத்தை 'ஆப்பிள் கிராமம் ' என்றும் அழைப்பார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் இங்கு பூத்து குலுங்குவது உண்டு. 62 மர வகைகளும், 174 செடி வகைகளும், 39 கொடி வகைகளும், 13 வகை பறவைகள், 100 வகை பட்டாம்பூச்சிகள் என இயற்கை சூழலோடு இருக்கிறது காந்தளூர் கிராமம். காந்தளூர் தமிழக எல்லையின் அருகிலுள்ள மறையூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. மறையூரில் இருந்து காந்தளூர் செல்லும் சாலையில் வழி நெடுகிலும் சந்தன மரங்கள் உண்டு. இதனால், வாகனத்தில் போகும்போதே சந்தன வாசம் மூக்கைத் துளைக்கத் தொடங்கி விடும்.
உடுமலைப்பேட்டையில் இருந்து மூணார் செல்லும் சாலையில் கேரள எல்லைக்குள் சிறிது தொலைவு சென்றாலே மறையூர் கிராமம் வந்து விடும். மறையூரில் புகழ் பெற்ற தூவானம் அருவி அமைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகளின் மனம் மயக்கும் அருவி இது. மறையூரும் காந்தளூரும் தமிழக சுற்றுலாப்பயணிகளின் மனதுக்கு மிக நெருக்கமான கிராமங்கள் ஆகும்.
இந்த மறையூரும், காந்தளூரும் மற்றொரு விஷயத்துக்கும் பிரபலமானது. வழக்கமாக, தக்காளிகள் செடிகளில்தானே விளையும். ஆனால், இந்த கிராமங்களில் மரத்தில் விளையும் தக்காளிகளைக் காண முடியும். இந்தியாவில் சில இடங்களில் மட்டும்தான் மரத்தில் தக்காளி விளைகிறது. 4 முதல் 20 டிகிரி செல்சியஸ் சீதோஷ்ண நிலையில், இந்தத் தக்காளி விளைகிறது. 15 மீட்டர் உயரத்துக்கு இந்த மரம் வளர்கிறது. இந்த மரத்தை நடவு செய்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு விளைச்சல் கிடைக்கத் தொடங்கும். ஒரு மரத்தில் ஆண்டுக்கு 20 கிலோ வரை தக்காளி கிடைக்கிறது. மறையூர், காந்தளூர் பகுதியில் ஆண்டுக்கு ஒரு டன் மரத்தக்காளி விளைகிறது. 12 ஆண்டுகள் இந்த மரம் விளைச்சலை கொடுக்கிறது.
தற்போது, மரத்தக்காளி சீசன் தொடங்கியிருப்பதால் பெருமலை, புத்தூர், குகநாதபுரம், கீழந்தூர் பகுதிகளில் மரங்களில் தக்காளிகள் விளைந்து தொங்குவதைக் காண முடிகிறது. மரத்தக்காளி கிலோ 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரு நாட்டில் இருந்து இந்த கிராமங்களுக்கு வந்து , தங்கியிருந்த ஐரோப்பியர்கள் மரத்தக்காளியை முதன் முதலில் நட்டு பயிரிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் உள்பகுதி கத்தரிக்காய் போன்று காணப்படும். இதனால், புளிச்சக்கத்தரி , சீமக்கத்தரி என்றும் இதனை குறிப்பிடுவார்கள். சட்னி, துவையல் , ஊறுகாய்செய்யலாம். பச்சையாகவும் சாப்பிடலாம்.
மரத்தக்காளி தக்காளி குடும்பத்தைச் சேர்ந்தது . இந்தத் தக்காளி சற்று வித்தியாசமான வடிவில் இருக்கும். பெரு நாட்டின் மலை கிராமங்களில் இந்த தக்காளி அதிகமாகப் பயிரிடப்பட்டுள்ளது. அங்கு , சுற்றுலா சென்ற ஐரோப்பியர்கள் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை , பிரேசில் போன்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அசாம், நாகலாந்து, அருணாசலப் பிரதேசம் தமிழகத்தில் சிறுமலை, கொல்லி மலை போன்ற மலைப்பிரதேசங்களில் இது விளைகிறது. தக்காளியைப் போன்றே இதன் சுவை இருக்கும். சாதாரணத் தக்காளி சீக்கிரமே அழுகி விடும். ஆனால், மரத்தக்காளி சாதாரணமாக 7 நாட்கள் வரை அழுகாமல் இருப்பது தனி சிறப்பு ஆகும்.