முதல்வரான விஜய்... கூகுள் தேடலில் 'முத்துப்பேட்டை'... என்ன காரணம்?

நடிகர் விஜய் முதல்வரானதும், முத்துப்பேட்டை என்ற சிறிய கிராமத்தைநெட்டிசன்கள் தேடத் தொடங்கினர். முத்துப்பேட்டையில் அப்படி என்ன உள்ளது?
Vijay as CM In Tamilnadu Assembly
Vijay as CM In Tamilnadu Assembly
Published on

நடிகர் விஜய் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுள்ளார். சட்டசபையில் கோட், சூட் போட்ட முதல்வரை, தமிழக மக்கள் பார்த்து ரசித்தனர். அதே நேரத்தில், முத்துப்பேட்டை என்ற கிராமத்தை கூகுளில் லட்சக்கணக்கானோர் தேடத் தொடங்கினர். நடிகர் விஜய் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள முத்துப்பேட்டை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். அதேவேளையில், பலரும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைதான் விஜய்யின் சொந்த ஊர் என கருதத் தொடங்கியுள்ளனர்.

தமிழக முதல்வர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டையில்தான் பிறந்தார். விஜய்யின் தாத்தா சேனாதிபதி ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விஜய்யின் பாட்டி, அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இந்த ஊரிலுள்ள அரசுப்பள்ளியில்தான் படித்தார். பின்னர், சினிமா வாய்ப்புத் தேடி சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

விஜய்யின் தாத்தா சேனாதிபதியின் கல்லறை முத்துப்பேட்டையில் இப்போதும் உள்ளது. எஸ்.ஏ. சந்திரசேகர் அடிக்கடி இங்கு வந்து தந்தையின் கல்லறைக்கு மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்துள்ளது. சமீபத்தில், தந்தையின் கல்லறையை எஸ்.ஏ. சந்திரசேகர் புதுப்பித்துள்ளார். அப்போது, முத்துப்பேட்டை மக்களுக்கு அன்னதானமும் செய்தார். விஜய் சிறு வயதில் தனது தந்தையுடன் இந்த கிராமத்துக்கு வந்து சென்றுள்ளார்.

விஜய் முதல்வரானதும், அவரது பூர்வீகமான முத்துப்பேட்டையை மக்கள் தேடிய காரணத்தால், திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டைக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது. இங்குள்ள, மாங்குரோவ் காடுகளும் இந்திய அளவில் பிரபலமாகியுள்ளது. இந்த முத்துப்பேட்டையிலுள்ள மாங்குரோவ் காடுகளில் ஸ்பெஷல் என்ன?

mangrove forest
mangrove forest

திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை கிராமம் பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இங்கு, ஆசியாவிலேயே மிகப்பெரிய சதுப்புநிலக் காடு இருக்கிறது. சுமார் 120 ச.கி.மீ பரப்பளவில் பரவி கிடக்கும் இந்த அலையாத்திக்காடுகள் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபூமி ஆகும். படகுச் சவாரி மூலம் இந்தக் காடுகளின் இயற்கை அழகை ரசிக்கலாம். இங்கு சைபீரியா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து 80-க்கும் மேற்பட்ட வகையான இடம் பெயர் பறவைகள் வருவதும் உண்டு. மேலும், பூநாரை, செங்கால் நாரை, நீர்க்காகம், கொக்கு, மீன்கொத்தி, நாரை போன்ற பறைவகளும் இங்கு வசிக்கின்றன. காட்டுப் பூனைகள், வெளவால்களும் காணப்படுகின்றன.

தமிழகத்தில் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள்தான் பிரசித்தமானது. ஆனால், முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளைவிட 10 மடங்கு பெரியது. ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் சேறு கலந்த சதுப்பு நிலங்களில் அலையாத்தி காடுகள் அடர்த்தியாக வளர்கின்றன. கோரையாறு, பாமணி ஆறு உள்ளிட்ட ஏராளமான சிற்றாறுகள் முத்துப்பேட்டையில் கடலில் கலக்கின்றன. இதனால், கழுதை முள்ளி, நரிக்கண்டல், வெண்கடல் போன்ற பல வகை மரங்கள் இங்கு செழித்து வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம்வரை பூத்துக் குலுங்கும். வேர்கள் மூலம் சுவாசிக்கும் அவி, சென்னியா, மெனரனா எனப்படும் தாவரங்களும் இந்த சதுப்பு நிலக்காடுகளில் காணப்படுகின்றன.

இந்தியாவிலுள்ள அலையாத்தி காடுகளில் 60 சதவீதம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் 29,713 ஏக்கரில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு ஆற்றில் செல்லும்போது, இருபுறமும் காணப்படும் அலையாத்திக் காடுகள் கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும். சுனாமி பேரலையில் இருந்து முத்துப்பேட்டையை காப்பாற்றியதும் இந்த அலையாத்தி காடுகள்தான். திருவாரூர் மாவட்டத்தை இயற்கைச் சீற்றங்களில் இருந்து காக்கக் கூடிய அரணாகவும் அலையாத்திக் காடுகள் விளங்குகிறது.

எது எப்படியோ... முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளும் முதல்வர் விஜய்யால் இப்போது, பாப்புலராகியுள்ளது. இதனால், இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Puthuyugam
www.puthuyugam.com