அஞ்சலி: காலத்தின் கலைஞன் ரகு ராய் 

ராய் வெறும் ஒரு புகைப்படக் கலைஞர் மட்டுமல்ல; இந்தியாவின் ஆன்மாவையும், மனித உணர்வுகளையும், வரலாற்றின் முக்கியத் தருணங்களையும் தன் கேமராவின் வழியாகப் பதிந்து வைத்த ஒரு பெரும் கலைஞர்.
Raghu Rai
Raghu RaiVIKRAMJIT KAKATI INDIA
Published on

1984 டிசம்பரில்தான் உலகையே அதிரவைத்த அந்த விஷவாயுக் கசிவு விபத்து போபாலில் நடந்தது. இது போன்ற நிகழ்வுகளில், இறந்தது எத்தனை பேர் என்பதை வைத்துத்தான் இந்த உலகம் அவர்களுக்கான கண்ணீரின் அளவை, துக்கத்தின் அளவைத் தீர்மானிக்கும். சுமார் 3000 பேர்களின் உடனடி மரணம் என்பது உலகின் மனசாட்சியைப் புரட்டிப்போட்டது. ஆயினும் அந்நேரத்து உணர்ச்சிக் கொந்தளிப்பை அடக்க அரசாங்கங்களும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் நிகழ்வின் வீரியத்தை மறைக்க முயற்சி செய்துகொண்டிருந்தன. ஆனால், அந்த விபத்தில் இறந்து போன தன் குழந்தையை புதைத்துக்கொண்டிருந்த ஒரு தகப்பனின் கைகளோடு, புதையுண்டு கொண்டிருந்த அந்தக் குழந்தையையும் படமெடுத்தான் ஒரு புகைப்படக்காரன். அந்தப் புகைப்படம்தான் போபாலின் நிஜமான துயரை உலகுக்கு அறிவித்து, அத்தனை பேரின் மனசாட்சியையும் உலுக்கியது. உலகளாவிய அளவில் போபால் துயரத்திற்கு ஆதரவும், நீதிக்கான குரல் ஒலிக்கவும் அதுவும் ஒரு முக்கியக் காரணியாக அமைந்தது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்த எவராலும் அந்தத் துயரத்தை எளிதில் கடந்து சென்றுவிட முடியவில்லை. 

அந்தப் படத்தை எடுத்தவர், இந்தியப் புகைப்படக் கலையின் முகமாகத் திகழ்ந்த, உலகப்புகழ் பெற்ற புகைப்படக் கலைஞரான ரகு ராய் (Raghu Rai)! ஒரு கலைஞன் தனது கலையை எவ்வளவு தூரம், சமூகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்த முடியும் என்பதற்கு, போபால் துயரம் குறித்த அந்தப் படமும், ரகு ராயின் போபால் குறித்தத் தொகுப்புப் படங்களும், உதாரணமாக அமைந்தன.

1942ல், இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய பஞ்சாபில் பிறந்த ரகு ராய், 2026, ஏப்ரலில் தனது 83வது வயதில் காலமாகியிருக்கிறார். தன் இளம் வயதிலேயே சிறந்த புகைப்படக்கலைஞராக விளங்கிய ராய், முதலில் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, 1976லிருந்து சுயாதீன புகைப்படக்கலைஞராக இயங்க ஆரம்பித்தார். இடையில், அவர் இந்தியா டுடே நிறுவனத்தின், புகைப்படப் பிரிவு எடிட்டராக 1982லிருந்து 1992 வரையிலான காலட்டத்தில் பணிபுரிந்தாலும், பின்னர் மீண்டும் தனது சுயாதீனப் புகைப்படப் பணியைத் தொடர்ந்தார்.

A shot by Raghu Rai
A shot by Raghu RaiRaghu Rai - Magnum Photos

ராய் வெறும் ஒரு புகைப்படக் கலைஞர் மட்டுமல்ல; இந்தியாவின் ஆன்மாவையும், மனித உணர்வுகளையும், வரலாற்றின் முக்கியத் தருணங்களையும் தன் கேமராவின் வழியாகப் பதிந்து வைத்த ஒரு பெரும் கலைஞர். அன்றாட வாழ்க்கையின் சாதாரண கணங்களுக்குள்ளிருக்கும், அசாதாரணமான அழகைக் கண்டறிவதுதான், ரகு ராயின் மிகப்பெரிய பலமாக இருந்தது. ஒரு குழந்தையின் புன்னகையில், ஒரு முதியவரின் முகச் சுருக்கத்தில், சாலையோரத்தில் நடக்கும் ஒரு சிறிய நிகழ்விலிருக்கும், மனிதகுலத்திற்கான மிகப்பெரிய செய்திகளைப் படம்பிடித்துக் காட்டுவதில் அவர் நிகரற்றவராக இருந்தார். அவருடைய கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் மௌனமொழி பேசும் கவிதைகளாக இருந்தன. ஒளி மற்றும் நிழலின் விளையாட்டைக் கொண்டு, காட்சிகளை வரலாற்றுத் ஆவணங்களாக அவர் மாற்றிய விதம் வியக்கத்தக்கது.

இவரது புகைப்படங்கள், ஏராளமான தொகுப்பு நூல்களாக வெளியாகியிருக்கின்றன. ரகு ராயின் டெல்லி, கஜுராஹோ, தாஜ்மகால், மதர் தெரசா (Raghu Rai's Delhi, Khajuraho, Taj Mahal, Mother Teresa) போன்ற படைப்புகள் காலத்தால் அழிக்க முடியாதவை. ரகு ராய் சமகால இந்திய வரலாற்றின் நேரடிச் சாட்சியாக வாழ்ந்தவர். இந்திரா காந்தி, மதர் தெரசா, தலாய் லாமா முதல் பல முக்கிய ஆளுமைகளின் வாழ்க்கையை மிக நெருக்கமாகப் படம் பிடித்தவர் அவர். டைம்ஸ் (Times), நியூயார்க்கர் (New Yorker), லைஃப் (Life), ஜியோ (Geo) போன்ற உலகளாவிய அளவில் புகழ்பெற்ற இதழ்களில் அவரது புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கின்றன.

சர்வதேச அளவில், பல விருதுகளை குவித்திருக்கும் ரகு ராய், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது மற்றும், வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் பெற்றிருக்கிறார். ’புகைப்படம் எடுப்பது என்பது ஒரு கலை மட்டுமல்ல, அது ஒரு தவம்’- என்று சொன்ன ரகு ராய், புகைப்படக் கலைக்குத் தொழில்நுட்பத்தை விட, 'பொருள் பொதிந்த பார்வை' (Vision) எவ்வளவு முக்கியம் என்பதை இளைய தலைமுறைக்குக் கற்றுக்கொடுத்தார். 

ரகு ராய் இன்று நம்மிடையே இல்லை. ஆனால், அவர் இந்தியாவைப் பற்றி, இந்தியர்களைப் பற்றி, மனிதர்களைப் பற்றி எடுத்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், வரும் காலங்களிலும் நமது வரலாற்றைச் சொல்லிக்கொண்டே இருக்கும். ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதன் உள்ளே ஒளிந்திருக்கும் உணர்வுகளைத் தேடிய அவரது குணம், வருங்காலப் புகைப்படக் கலைஞர்களைப் பாதித்துக்கொண்டே இருக்கும்.

Puthuyugam
www.puthuyugam.com