பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரு விண்வெளி வீரர்கள் சீன ஸ்பேஸ் மையத்துக்கு பயணம் செய்ய சீன அரசால் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் தவிர, சீனா தனியாக தியாங்காங் (Tiangong space station ) என்ற பெயரில் விண்வெளி மையத்தை அமைத்துள்ளது. பூமியின் சுற்றுவட்ட பாதையில் 450 கி.மீ தொலைவில் இது, சுற்றி வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு முதல், இந்த மையம் செயல்பட்டு வகிறது. இது, சீன தேசிய விண்வெளி அமைப்பால் (CNSA) இயக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 3 விண்வெளி வீரர்கள் தங்கி, 6 மாதங்கள் வரை ஆய்வு செய்கிறார்கள் . அதிகபட்சமாக 6 பேர் வரை தங்கலாம். 6 மாதத்துக்கு ஒரு முறை விண்வெளி வீரர்கள் இந்த மையத்துக்கு பயணம் மேற்கொள்வார்கள்.
தற்போது, இந்த மையத்துக்கு செல்லத்தான் முகமது ஜீஷான் அலி மற்றும் குர்ரம் தாவூத் ஆகிய இரு பாகிஸ்தான் பைலட்டுகள் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் விமானப்படையில் விமானிகளாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒருவர் விண்வெளிப் பயணத்துக்கு தேர்வு செய்யப்படுவார்.
அப்படித் தேர்வு செய்யப்பட்டால், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், விண்வெளிக்குச் செல்வது இதுவே முதன்முறை. அதோடு சீன விண்வெளி மையத்துக்குச் சென்ற முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையும் கிடைக்கும். இதற்காக, பயிற்சியைத் தொடங்குவதற்காக விரைவில் இவர்கள் இருவரும் சீனாவுக்கு செல்லவுள்ளனர்.
பாகிஸ்தான் விண்வெளி வீரர்கள் சீன விண்வெளி மையத்துக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டது , அந்த நாட்டின் விண்வெளி வரலாற்றில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சீனா, தனது விண்வெளி திட்டங்களை சர்வதேசமயமாக்கவும், தொழில்நுட்ப சாதனைகளை வளர்ந்து வரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்தையும் வெளிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
இது குறித்து, பாகிஸ்தானின் விண்வெளி மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி ஆணையம் கூறுகையில், ''எங்கள் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியின் ஒரு முக்கியமான கட்டமாக இதனை பார்க்கிறோம். மனித விண்வெளிப் பயணத் திட்டத்தில் பாகிஸ்தானின் முதல் பங்களிப்பு இது. 2026-ம் ஆண்டின் பிற்பகுதியில் ஏவப்படும் விண்கலத்தில் சீன வீரர்களுடன் பாகிஸ்தான் வீரரும் செல்கிறார். சீன விண்வெளி நிலையத்தில் சக வீரர்களுடன் இணைந்து அறிவியல் சோதனைகளை மேற்கொள்வார். பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட இருவரும் சிறப்பான கல்விப் பின்னணி , உடல் வலிமை கொண்டவர்கள். அனுபவம் வாய்ந்த விமானிகள் , விண்வெளித் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்கள். ஜீஷான் அலி மற்றும் தாவூத் ஆகியோர் சீனாவில் “மாற்றுவிண்வெளி வீரர்களாக” பயிற்சி பெறுவார்கள். பயிற்சியின் போது, தியாங்காங் சர்வதேச விண்வெளி நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பயணம் செய்யும் ஷென்சோ விண்கலத்தை பற்றிய முழு அறிவையும் பெறுவார்கள். உடல் தகுதிப் பயிற்சி , விண்கல இயக்கப் பயிற்சி , புவியீர்ப்பு சக்தி இல்லாத நிலையில் உயிர்வாழும் பயிற்சி, அவசர மற்றும் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி இந்த வீரர்களுக்கு வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகளால், சீனா தனக்கென்று விண்வெளியில் தனியாக விண்வெளி மையத்தை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியத் தரப்பில் 1984ம் ஆண்டு ராகேஷ் ஷர்மா ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் விண்வெளிக்கு முதன்முறையாக பயணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.