போர்ஷேவில் வந்து சாலையைச் சரிசெய்த தொழிலதிபர்!

பெங்களூரு நகரில் 6,000 பொத்தல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தப் பொத்தல்கள்தான் சாலை விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. பொத்தல்களால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள்.
போர்ஷேவில் வந்து சாலையைச் சரிசெய்த தொழிலதிபர்!
Published on

இந்தியாவின் I.T Hub, உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரம் என்று பல பெருமைகளை பெங்களூரு பெற்றிருந்தாலும், போக்குவரத்து நெரிசல், மோசமான சாலைகள் என்றாலே உடனே இந்த கர்நாடகத் தலைநகரம்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு இந்த நகரிலுள்ள சாலைகள் பொத்தல்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால், ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம். இது குறித்து பெங்களூர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டால், 'பெங்களூரின் நற்பெயரை கெடுக்க இதுபோன்ற பிரசாரங்கள் செய்யப்படுவதாக' சாக்கு போக்கு கூறுவார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடத்தில் உயிர் பலிகள் பற்றி கேள்வி கேட்டால், 'சாலையிலுள்ள பொத்தல்களால் விபத்து ஏற்படவில்லை. சாலை விபத்துகளால் அவர்கள் இறந்தனர்" என்று பதிலளிப்பார். ஆனாலும், சத்தமே இல்லாமல் நகரம் முழுக்க சாலைகளிலுள்ள பள்ளங்களை மூடவும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுவார்.

தென்னிந்தியாவின் மாநகரமான பெங்களூருவில் மொத்தம் 13,873 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகள் உள்ளன. பிரதான நகர்ப்புற சாலைகள் மற்றும் அதன் துணை சாலைகள் என்று பார்த்தால் 1,344 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளன. இந்த சாலைகளில் மாநகராட்சி சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, நகரில் 6,000 பொத்தல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தப் பொத்தல்கள்தான் சாலை விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. பொத்தல்களால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். மாருதி கார் முதல் ரோல்ஸ் ராய்ஸ் காரில் செல்பவர்கள் வரை, விதிவிலக்கு இல்லாமல் பாதிப்படைகின்றனர். இதனால், பொத்தல்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிலதிபர் ஒருவர், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Akil Hemadri
Akil Hemadri

பெங்களூருவைச் சேர்ந்தவர் அகில் ஹேமத்ரி (Akil Hemadri). பெரும் தொழிலதிபர். பல விலையுயர்ந்த கார்கள் இவரிடத்தில் உள்ளன. பெங்களூரு நகரின் பொத்தல்கள் நிறைந்த சாலையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். இதனால், ஒரு வித்தியாசமான செயலை செய்து நகரின் முக்கிய அதிகாரிகளுக்கு பொத்தல்களால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்க முடிவு செய்தார். தன்னிடத்தில் இருந்த விலையுயர்ந்த போர்ஷே காரில் சிமெண்ட் மூட்டை, ஜல்லிகற்கள் , தண்ணீர் போன்றவற்றை ஏற்றிக் கொண்டார். பின்னர், நகரின் பொத்தல்கள் நிறைந்த சாலைக்கு சென்றார். காரை விட்டு இறங்கிய அவர், தனது மேல் கோட்டை கழற்றி உதவியாளரிடம் கொடுத்தார். தனது காரின் பானட் மீது, சிமெண்ட் , ஜல்லிகற்களை போட்டு கலவையை தயார் செய்தார். தொடர்ந்து, சாலைகளிலுள்ள பொத்தலில் சிமெண்ட் கலவையை போட்டு சரி செய்ய தொடங்கினார். இந்தப் பணிகளை முடித்து விட்டு காரில் ஏறி கிளம்பிச் சென்றார். இதை, வீடியோவாக எடுத்து இணையத்திலும் பதிவிட்டார். இந்த வீடியோ செம வைரல்.

இது குறித்து அகில் ஹேமத்ரி கூறுகையில், ''ஒவ்வொரு மனிதருக்கும் தனது சுற்றுப்புறத்தை சுத்தமாக, அழகுற வைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது. நமது நாடு அதிக மக்கள் தொகை கொண்டது. அரசு அதிகாரிகளால் மட்டுமே, மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியாது. நமக்குள் இருந்துதான் மாற்றம் தொடங்க வேண்டும். நம் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும். இதனால்தான், எனது விலையுயர்ந்த காரை விட மக்களின் உயிர் முக்கியம் என்பதை உணர்த்தவே இதை நான் செய்தேன். நமக்கு சொந்தமானவற்றை நாம்தான் பாதுகாக்க வேண்டும். நாம் பொறுப்புடன் நடந்து கொண்டால், நமது நாடும் முன்னேறும் '' என்றார்.

நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Puthuyugam
www.puthuyugam.com