டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யமுடியுமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய அங்குள்ள மேலவை உறுப்பினர்கள் ஒன்று திரள்கிறார்கள் என்ற செய்திகள் வருகின்றன. ஆனால், இது சாத்தியமானதா?
Donald Trump
Donald Trump
Published on

sஅமெரிக்கா-ஈரான் போரில் கடந்த சில நாட்களாக தீவிரமான பதற்ற நிலை நிலவுகிறது. உலகின் பல நாடுகளும், அமெரிக்காவின் இந்த எதேச்சதிகாரப்போக்கை வன்மையாக கண்டித்து வருகின்றன. இந்தியா, அமெரிக்கா போன்ற ஜனநாயக அமைப்பை அடிப்படையாக் கொண்ட நாடுகளில், அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள் கூட சட்டத்தின் கீழ் சாதாரணமானவர்களாக இருக்க வேண்டும் என்பதே மக்களாட்சியின் அடிப்படை கோட்பாடு. அதன்படி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய அங்குள்ள மேலவை உறுப்பினர்கள் ஒன்று திரள்கிறார்கள் என்ற செய்திகள் வருகின்றன. ஆனால், இது சாத்தியமானதா?

இந்தியாவில் மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அவைகள் ஆட்சி செய்வதைப் போலவே, அமெரிக்காவிலும் 435 உறுப்பினர்கள் கொண்ட ஹவுஸ்- கீழவை (United States House of Representatives) என்றும், 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட்-மேலவை (United States Senate) என்று இரு அவைகள் உள்ளன. இப்படி ஓர் இக்கட்டான அரசியல் சூழல் ஏற்பட்டால், முதலில் ஹவுஸ், அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டைக் (Impeachment) கொண்டு வரும். அதில் மெஜாரிட்டி (50%+1), அதாவது 218 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால், அந்தக் குற்றச்சாட்டு அமலுக்கு வந்து மேலவை விசாரணைக்குக் கொண்டு செல்லப்படும். அங்கே குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 67 உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்தால், அதிபர் பதவி நீக்கம் செய்யப்படுவார். இதுவே நடைமுறை. 

Trump
Trump

அமெரிக்க வரலாற்றில் சில அதிபர்கள் கீழவையின் Impeachment நடவடிக்கைக்குக் ஆளாக்கப் பட்டுள்ளார்கள். ஆண்ட்ரூ ஜான்ஸன் (Andrew Johnson -1868), பில் கிளிண்டன் (Bill Clinton -1998) ஆகியோர் கீழவையின் குற்றச்சாட்டுக்கு ஆளானாலும், மேலவையில் அவர்களுக்கு எதிராக வாக்குகள் கிடைக்கவில்லை. போலவே வரலாற்றில் இரண்டு முறை இப்படியான குற்றச்சாட்டுக்கு ஆளானவர், இப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump -2019 & 2021) மட்டும்தான். அவரும் மேலவையின் ஒத்துழைப்பால் பதவியிழக்காமல் தப்பிவிட்டார். தற்போது நடக்கும் இந்தப் போர்ச் சூழலில், மீண்டும் ஒருமுறை அவர் 'Impeachment' நடவடிக்கையை எதிர்கொண்டால், அது அமெரிக்க வரலாற்றில் மூன்று முறை இத்தகைய விசாரணைக்கு உள்ளானவர் எனும் மோசமான சாதனையாகக் கருத்தப்படும். ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக, ரிச்சர்ட் நிக்ஸன் (Richard Nixon- 1974), வாட்டர்கேட் ஊழல் காரணமாக Impeachment உறுதியான நிலையில் இருந்தபோது, அதற்கு முன்பே தார்மீக அடிப்படையில் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். 

வரலாற்றில் இதுவரை எந்தவொரு அமெரிக்க அதிபரும் மேலவையால் பதவி நீக்கம் செய்யப்பட்டதில்லை. தற்போதைய சூழலில், அதிபர் டிரம்ப் மீது போர் தொடர்பான அதிருப்தி நிலவினாலும், மேலவையில் அவருடைய ஆளும் கட்சிக்கு இருக்கும் பெரும்பான்மை பலம் அவரை மீண்டும் ஒருமுறை பாதுகாக்கும் என்பதுதான் நிதர்சனம். ஜனநாயகம் என்பது மக்களைப் பாதுகாக்கும் கருவி என்று நினைக்கிறோம், ஆனால், ஜனநாயகத்திலும் அதிகாரக் குவிப்பு இருக்கிறது. ஜனநாயகம் எனும் பெயரில் நம்மைப் பாதுகாக்கும் ஆயுதத்தை தனிநபரின் கையில் கொடுத்துவிட்டால், அதை அவன் நம்மீதே பாய்ச்சிவிடும் ஆபத்தும் இருக்கத்தான் செய்கிறது என்பதுதான் கசப்பான உண்மை!

Puthuyugam
www.puthuyugam.com