திருக்குறளில் வாழ்க்கைத் தத்துவங்கள் மட்டுமல்லாது, மேலாண்மைக் கருத்துகளும் நிறைந்துள்ளன என்பது நாமறிந்ததே! இந்தத் தேர்தல் நேரத்துக்கு, அரசியல்வாதிகளுக்கு அவசியப்படுகிற மாதிரி சில குறட்பாக்களைத் தேடிப் பார்த்தேன். எப்படி இல்லாது போகும்? முக்கியமான மூன்று கருத்துகளைப் பார்ப்போம்.
முதலாவது, Positioning! அதாவது, காலமறிந்து தம்மை நிலைநாட்டிக்கொள்ளும் தன்மை. ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க் கட்சியாக இருந்தாலும், புதிய கட்சிகளாக இருந்தாலும் ஐந்து ஆண்டுகளும் சிறப்பான முறையில் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால், அது மட்டுமே போதாது, தேர்தல் நெருங்கி, வேட்புமனு தாக்கல் செய்தபின்னர், கிடைக்கக்கூடிய இரண்டு மூன்று வாரங்கள் என்பன மிகவும் முக்கியமான நாட்களாகும். இவ்வமயத்தில், மக்களைச் சந்தித்து இதுவரை இந்தச் சமூகத்துக்கு நீவிர் என்னவெல்லாம் செய்தீர்கள், இனி என்னவெல்லாம் செய்யவிருக்கிறீர்கள் என்பதை எடுத்துச் சொல்லவேண்டும். மாதக்கணக்காக உழைத்து உருவாக்கிய விவசாயப் விளைபொருளை அறுவடை செய்யும் நேரத்துக்கு ஒப்பானது இந்த முக்கியமான நேரம். இதில் சுணக்கம் இருந்தால் அறுவடை சொதப்புவது மட்டுமல்ல, விளைபொருளே வீணாகி முதலுக்கே மோசமாகிவிடக்கூடும். இதில் சரியாக செயல்பட்டால், புதிய கட்சியாக இருந்தாலும் கூட ஆட்சியையே பிடிக்க முடியும் (ஞாலமே கைகூடும்) என்கிறது இந்தக் குறள்.
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்" (குறள் 484)
பொருள்: ஒரு செயலை செய்து முடிப்பதற்கு ஏற்ற, சரியான காலம் அமைகையில், திட்டமிட்டுச் செயல்பட்டு, கடுமையாக உழைத்தால் (Positioning), உலகையே வெல்ல நினைத்தாலும் அது சாத்தியம்தான் என்கிறது இந்த வள்ளுவத்துளி.
அடுத்தது Accessibility! அதாவது, ஒரு தலைவன் என்பவன் தன் தன் குழுவிடமும், மக்களிடமும் எவ்வளவு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது இந்தக் குறள். தலைமை செயற்குழு மட்டும்தான் தலைவரை சந்திக்க முடியும், அதுவும் வாரத்துக்கு ஓரிரு நாட்கள், ஓரிரு மணி நேரம் மட்டும்தான் அவருடன் பேச முடியும் என்றில்லாமல், கட்சியின் அனைத்து மட்டத்திலும் இருக்கும் நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவருக்கும் எப்போதும் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். போலவே, தன்னைக் காண்பதே மக்களுக்கு ஓர் அரிதான செயல் என்றில்லாது, 234 தொகுதிகளிலும் கிராமம் கிராமமாக சுற்றுப் பயணம் செய்து, நீங்கள் என்னைப் பார்ப்பதும், நான் உங்களைப் பார்ப்பதும் சாதாரணமான ஒரு செயல் என்ற நினைப்பை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். ஒரு தலைவர் தன்னை ஒரு மேடையில் ஏற்றித் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், களத்தில் இறங்கி மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதே வெற்றிக்கான முதல் படி என்கிறது இக்குறள்.
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்" (குறள் 386)
பொருள்: ஒரு தலைவன் என்பவன் தன்னைச் சந்திக்க வரும், ஆட்சிக்குழு மற்றும் மக்களை எளிதாக சந்திக்கும் வண்ணம் எப்போதும் தயாராக (Accessibility) இருக்க வேண்டும். அவர்களுடன் விவாதமேற்பட்டால், கடுஞ்சொல்லால் அல்லாமல் இனிய பேச்சின் மூலமாகவே காரியத்தைச் சாதிக்கும் வல்லமை வேண்டும். அப்படிப்பட்ட அரசனின் நாட்டை, உலகம் மற்ற நாடுகளை விட சிறந்தது எனப் போற்றிப் புகழும்.
இறுதியாக Personality! அதாவது ஆளுமைத்திறன். தேர்தல் நேரத்தில் ஒரு தலைவர் மிக அதிகமாக மக்களோடு உரையாட வேண்டியிருக்கிறது. அதிகம் பேசுவது எப்படி நம்முடைய அறிவையும், பண்பையும், திறமையையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையுமோ, அதேபோல நம்முடைய அறியாமையும், வெளிப்படுத்தக்கூடிய ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிடும். ஆகவே, மக்கள் மன்றத்தில் பேச வேண்டிய ஒவ்வொரு கருத்துகளையும் ஆய்ந்து, பொருளறிந்து கவனமாகப் பேசவேண்டும். எதிராளிகளின் தவறான செயல்பாடுகளை நிச்சயமாக சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால், அது தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், கண்ணியமான முறையில் அமைய வேண்டும். போலவே எதிராளிகளின் மீது மட்டுமே பழிசுமத்திக் கொண்டிருப்பது நம்மீதான ஒரு நல்ல நம்பிக்கையை உருவாக்காது. இத்தகைய சிக்கல்களுக்கு நம்மிடம் எத்தகைய தீர்வுகள் இருக்கின்றன என்பதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல் (குறள் 200)
தேவையில்லாத செய்திகளையும், பயனற்ற சொற்களையும் தவிர்த்து, பேசும் ஒவ்வொரு பேச்சும் பொருளோடும், மக்களுக்குப் பயன் இருக்குமாறும் இருக்க வேண்டும். அப்படிப் பேசுவது ஒரு தலைவனின் ஆளுமையை (Personality) காண்பிக்கும் என்பது இந்தக் குறளின் பொருள்.