மக்கர் செய்யும் ரூ.190 கோடி மதிப்புள்ள டாய்லெட்! #Artemis-II

பல ஆண்டு காலமாக நாசாவில் இந்த கழிவறை சோதனை செய்து பார்க்கப்பட்ட பின்னரே, விண்கலத்தில் பெருத்தப்பட்டது. எனினும், முறையாக இயங்கவில்லை.
 Artemis II toilet
Artemis II toilet X page
Published on

சுமார் 53 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, மனிதர்களை மீண்டும் நிலவுக்கு கொண்டு செல்ல 'ஆர்டெமிஸ்-2’ விண்கலத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக கடந்த 2-ம் தேதி விண்ணில் செலுத்தியது. ஃபுளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, ஆர்டெமிஸ்- 2 விண்ணை நோக்கி பாய்ந்தது. இதில், அமெரிக்காவைச் சோ்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா கோச் கனடாவைச் சேர்ந்த ஜெர்மி ஹேன்சன் ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். சுமாா் 4 லட்சம் கி.மீ. தூரத்தை விண்வெளியில் இந்த விண்கலம் கடந்து செல்லவுள்ளது. இந்த பயணத்தின் போது, வீரர்கள் யாரும் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். 8 நாள்கள் விண்வெளி வீரா்கள் நிலவைச் சுற்றி வந்து, அதன் சுற்றுப்பாதையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். ஏப்ரல் 10ம் தேதி இவர்கள் மீண்டும் பூமி திரும்புவார்கள்.

1972-ம் ஆண்டு அப்பல்லோ 2 விண்கலத்துக்குப் பிறகு, பூமியின் சுற்றுப்பாதையைத் தாண்டி தொலைதூர விண்வெளிப் பகுதிக்கு மனிதர்கள் செல்வது இதுவே முதல்முறை. ஏப்ரல் 7ம் தேதி முதல் நிலவை ஆா்டெமிஸ்-2’ சுற்றி வரத் தொடங்கும். ஏப்ரல் 7ம் தேதி மதியம் 12.15 முதல் நள்ளிரவு 1.20 மணி வரை நிலவைச் சுற்றி வரும். இந்த நிகழ்வை நாசா இணையதளம், நெட்பிளிக்ஸ், அமேசான் தளங்கள் நேரடியாக ஒளிபரப்புகின்றன.

நிலவில் நிரந்தரமாக மனித குடியிருப்புகளை ஏற்படுத்த முதல் படியாகவும் இந்த பயணம் பார்க்கப்படுகிறது. வரும் 2028-ஆம் ஆண்டில் நிலவின் தென்துருவத்தில் மனிதா்களைத் தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபல தொழிலதிபா்களான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் போன்ற நிறுவனங்களும் நிலவில் தரையிறங்கும் விண்கலன்களை உருவாக்கி கொண்டிருக்கின்றன. இதற்கான, நாசாவுடன் கைகோத்தும் கொண்டுள்ளன.

முன்னதாக, ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள டாய்லெட் ஒழுங்காக வேலை செய்யவில்வலை என்கிற தகவல் வெளியாகியிருந்தது.

பூமியைப் பொறுத்த வரை தரையில் பள்ளம் தோண்டி கழிவை வெளியேற்றினாலும் சரி... ஆடம்பரமான தங்க முலாம் பூசப்பட்ட கழிப்பறையைப் பயன்படுத்தினாலும் சரி, பூமியில், புவியீர்ப்பு விசை உங்கள் கழிவுகளைக் கீழ்நோக்கி தள்ளி விடும். ஆனால், விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால், கழிவறையிலிருந்து சொட்டும் துளிகளோ அல்லது சிதறல்களோ வெளியே மிதந்து வந்து விடக் கூடும். இது விண்வெளி வீரர்களின் உடல்நலத்திற்கும், விண்கலத்திலுள்ள தொழில்நுட்பக் கருவிகளுக்கும் நல்லதல்ல. அதனால், மிக நுட்பமான தொழில்நுட்பத்தோடு விண்லங்களில் கழிவறை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகள் செய்து இந்தக் கழிவறையை நாசா உருவாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘ஆர்டெமிஸ்-2’ விண்கலத்தில் சுமார் 190 கோடி மதிப்புள்ள கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை, upper waste management system என்று கூறுகிறார்கள். இது பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 1992ம் ஆண்டு என்டோவர் விண்கலத்தில் கிட்டத்தட்ட 240 கோடி செலவில் கழிவறை பொருத்தப்பட்டிருந்தது. இதுதான், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகத்திலேயே விலையுயர்ந்த கழிவறை ஆகும்.

விண்கலன்களில் அமைக்கப்படும் கழிவறையில் கழிவுகளை வெளியேற்ற காற்று உறிஞ்சும் விசை பயன்படுத்தப்படுகிறது. சிறுநீர் ஒரு குழாய் வழியாக உறிஞ்சப்பட்டு சேகரிக்கப்படுகிறது. திடமான கழிவுக்கு வலுவான இழுவைத் திறனுடன் ஒரு சிறப்பு இருக்கை உள்ளது. அது, திடக்கழிவை இழுத்து ஒரு தனி கொள்கலனில் சேகரித்து வைத்துக் கொள்கிறது. இதுபோன்ற, உபகரணங்களால் மலம் காற்றில் மிதந்து விடாமல் தடுக்கப்படுகிறது. கழிப்பறையை வீரர்கள் பயன்படுத்தும் போது மிதக்காமல் இருக்கும் வகையில் , பிணைத்துக்கொள்ள சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. விண்வெளிப் பயணம் எப்படி, அசாதாரமாணதோ... அதேபோல, இங்கு கழிவை வெளியேற்றுவதற்கும் தனி பயிற்சி தேவை. தற்போது, இந்த கழிவறைதான் முறையாக இயங்காமல் மக்கர் செய்வதாக ஆர்மெடிஸ் விண்வெளி வீரர்கள் குறை கூறியுள்ளனர். எனினும், இந்தப் பிரச்னை 6 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டு விட்டதாகவும், வீரர்கள் கழிப்பறை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்'' என்றும் நாசா தெரிவித்துள்ளது.

அப்பல்லோ விண்கலங்கள் நிலவுக்கு பயணித்த காலத்தில், விண்கலத்தில் கழிவறை இல்லை. விண்வெளி வீரர்கள் கழிவுகளை பிளாஸ்டிக் பையில்தான் சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Puthuyugam
www.puthuyugam.com