சில ஆண்டுகளுக்கு முன்பு , கொச்சியில் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கேரள கலால் வரித்துறை ஆணையர், ரிஷிராஜ் சிங் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ''நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது. பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். ஒரு பெண்ணை வெறும் 14 விநாடிகள் ஒருவர் முறைத்துப் பார்த்தாலோ அல்லது உற்று நோக்கினாலோ அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் இருப்பதே நாட்டில் பலருக்கும் தெரியவில்லை'' என்று பேசியிருந்தார்.
ஆணையரின் இந்தப் பேச்சு ஆண்களை அச்சுறுத்தும் விதமாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து நெட்டிசன்கள் அவரிடம் சராமாரிக் கேள்விகளை எழுப்பினர். ''ஒரு பெண்ணை 13 விநாடிகள் மட்டும் பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொள்கிறோம். பின்னர் , மீண்டும் 13 விநாடிகள் பார்க்கிறோம். அப்போது. உங்கள் சட்டம் என்ன செய்யும் என்று கேள்வி எழுப்பினர். ''ஆண்கள் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்திருந்தால் எங்கே பார்க்கிறார் யாரை பார்க்கிறார் என்று எப்படி கண்டுபிடிக்க முடியும்'' என்றும் கேள்வி எழுப்பி அவரைத் திணறடித்தனர்.
ஆனால், சட்ட வல்லுநர்கள் ரிஷிராஜ்சிங்கின் கூற்றை மறுத்து, 'வெறுமனே ஒரு பெண்ணை உற்று நோக்கினால் எப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு சட்டத்தில் இடம் இல்லை. பெண்களை வார்த்தைகளால் புண்படுத்தினாலோ அவர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்தாலோ இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வழியிருக்கிறது'' என தெரிவித்தனர்.
ரிஷிராஜ்சிங்கின் கருத்து உண்மைக்கு மாறாகவே இருந்தாலும், பெண்களை உற்று நோக்கினால் கூட, தண்டனை கொடுக்க வேண்டிய காலக்கட்டம் இப்போது உருவாகியிருப்பதாக தெரிகிறது. அதை, நிரூபிக்கும் வகையில் ஓடும் ரயிலில் ஒரு சம்பவமும் நடந்துள்ளது.
போதும் நிறுத்துங்க!
கேரளாவில் பெண் ஒருவர் தனியாக ரயிலில் பயணம் செய்தபோது, சக பயணியால் ஏற்பட்ட ஒரு சங்கடமான அனுபவத்தை இன்டாகிராமில் பகிர்ந்து கொள்ள, அது விவாதத்தை கிளப்பியுள்ளது. இது, பொது இடங்களில் பெண்கள் தினமும் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதை உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது.
கடந்த மார்ச் 15ம் தேதி எலீனா எலிசபெத் குரியன் என்பவர் சங்கனாச்சேரியிலிருந்து எர்ணாகுளத்துக்கு வஞ்சிநாடு எக்ஸ்பிரஸில் தனியாகப் பயணம் செய்துகொண்டிருந்துள்ளார். அப்போது, 60 வயது மதிக்கத்தக்க சகபயணி ஒருவர், மீண்டும் மீண்டும் எலீனாவை உற்று நோக்கிப் பார்ப்பதும், தன் கையை கன்னத்தில் வைப்பதும், தகாத சைகைகளை காட்டியதாகவும் தெரிகிறது. எனவே, எலீனா அந்த பயணியின் நடத்தையை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டார்.
மேலும், ''நான் ஒரு சாதாரண ஆடை அணிந்திருந்தேன். ஒரு குர்தா. தளர்வான கால்சட்டை, முகக்கவசம் அணிந்திருந்தேன். எனவே, இது ஆடையைக் கண்டு வந்த துன்புறுத்தல் இல்லை. ஒரு பெண் தனியாக இருந்தாலே, ஆண்களின் மனநிலை மாறி விடுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, ஒரு வயதானவர் வேண்டுமென்றே தனது அந்தரங்க உறுப்பால் என்னை முறையற்ற விதத்தில் தொட்டார். அப்போது, நான் அமைதியாக இருந்தேன் . ஆனால் இனி நான் அப்படியிருக்கப் போவதில்லை.பெண்களைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள். உங்களின் கேவலமான நடத்தைக்கு நாங்கள் பலிகடா அல்ல. ஒவ்வொரு பெண்ணும், அவர் எங்கிருந்தாலும் அல்லது என்ன அணிந்திருந்தாலும், பாதுகாப்பாக உணரத் தகுதியானவர். இது என்னுடைய பிரச்னை மட்டுமல்ல . பல பெண்கள் இதனால், பாதிக்கப்பட்டு அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். அந்த மனிதர் குறித்து எர்ணாகுளம் ரயில்வே போலீசாரிடம் புகாரளித்துள்ளேன். அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளேன்'' என்றும் எலீனா அந்தp பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவை இன்று வரை, 86 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை எலீனாவுடன் பகிர்ந்துக் கொண்டனர். இப்படி, துணிச்சலாக செயல்பட்டு அந்த மனிதரின் குணத்தை அம்பலப்படுத்திய எலீனாவை ஏராளமானோர் பாராட்டியுள்ளனர்.