கடந்த 1925-ம் ஆண்டு மும்பையின் தானே பகுதியில் தொடங்கப்பட்ட ரேமண்ட் நிறுவனம் 100 ஆண்டுகளை நிறைவு செய்து வெற்றிக்கரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சிறிய டெக்ஸ்டைல் ஷோரூமாக இருந்த ரேமண்ட் நிறுவனத்தை, 1944ம் ஆண்டு விஜய்பட் சிங்கானியாவின் தந்தை லாலா கைலாஷ்பட் சிங்கானி வாங்கினார். 1980ம் ஆண்டு ரேமண்ட் நிறுவனத்தின் தலைவரானார் விஜய்பட் சிங்கானியா. பின்னர், உலகின் `நம்பர் 1' ஆடைத் தயாரிப்பு நிறுவனமாக ரேமாண்டை மாற்றிக் காட்டினார் .
அதுமட்டுமல்ல, 1990ம் ஆண்டு விஜய்பட் சிங்கானியா இந்தியாவிற்கு வெளியே முதல் ரேமண்ட் நிறுவனத்தின் ஷோரூமைத் தொடங்கினார். 'பார்க் அவென்யூ ' என்ற மற்றொரு பிராண்டை உருவாக்கினார். ரேமண்ட் நிறுவனம் உருவாக்கிய 'தி கம்ப்ளீட் மேன்' என்ற ஸ்லோகனும் உலகளவில் பிரபலமானது. தற்போது, உலகின் 55 நாடுகளுக்கு ரேமண்ட் நிறுவனம் துணிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இப்படி , மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய விஜய்பட் சிங்கானியா, மகனின் செயல்பாடு காரணமாக தனது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் மிகுந்த மன வேதனைக்குள்ளானார்.
வயது மூப்பு காரணமாக தனது 78-வது வயதில் அதாவது, 2015-ம் ஆண்டில் தன் வசம் இருந்த பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரேமண்ட் நிறுவனப் பங்குகள் அனைத்தையும் தனது இளைய மகன் கெளதம் சிங்கானியா வசம் ஒப்படைத்தார். தற்போது , ரேமண்ட் நிறுவனத்தின் மதிப்பு 12 ஆயிரம் கோடி ஆகும். தெற்கு மும்பையிலுள்ள ஜே.கே.ஹவுஸ் என்ற 36 அடுக்கு மாடிகள் கொண்ட குடியிருப்பில் விஜய்பட் சிங்கானியா வசித்தார். முகேஷ் அம்பானியின் 'அன்ட்லியா' வீட்டுக்கு அடுத்ததாக மும்பையில் அதிக விலை மதிப்பு கொண்ட வீடு இதுதான். இந்த வீட்டில் சிங்கானியா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினர் தனித்தனியாக வசித்துவந்தனர். ஒப்பந்தப்படி, 7,100 கோடி மதிப்பு கொண்ட இந்த வீட்டில் 600 கோடி மதிப்பில் ஒரு அபார்ட்மென்ட்டை விஜய்பட் சிங்கானியாவுக்கு மகன் வழங்க வேண்டும். ஆனால், கௌதம் சிங்கானியா எதையும் கொடுக்கவில்லை; மறுத்து விட்டார்.
அதோடு, குடும்பப் பிரச்னை காரணமாக ஜே. கே. ஹவுசில் இருந்து விஜய்பட் சிங்கானியா மகன் கௌதம் சிங்கானியாவால் வெளியேற்றப்பட்டார். பின்னர், அவர், 7 லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு தனியாக ஒரு வீட்டில் வசித்தார். இந்த வீட்டுக்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் திணறி வந்தார். ''வீட்டு வாடகையை ரேமண்ட் நிறுவனம் கொடுக்க வேண்டும், தனது ஜே.கே.ஹவுஸ் உரிமையை மீட்டுத் தர வேண்டும் '' என்றும் விஜய்பட் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். ''என் மகனை நம்பி தனது சொத்துகள் அனைத்தையும் கைமாற்றி கொடுத்துவிட்டேன். பெற்றோர் தங்கள் சேமிப்பு முழுவதையும் பிள்ளைகளுக்குக் கொடுத்து விட்டால் கடைசிக்காலத்தில் தெருவுக்கு தள்ளப்படுவீர்கள். இதற்கு நானே உதாரணம் '' என்று இந்தியப் பெற்றோரை விஜய்பட் சிங்கானியா எச்சரிக்கவும் செய்தார்.
இத்தகைய மன வேதனைக்கிடையே, விஜய்பட் சிங்கானியா, தனது 87-வது வயதில் மும்பையில் மார்ச் 28ம் தேதி காலமானார். அவரது, மகன் கௌதம் சிங்கானியா, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி" என்ற சுருக்கமாக தெரிவித்துள்ளார்.
ரேமண்ட் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்ம பூஷன் விருது பெற்றவரும், ரேமண்ட் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பம்பாய் நகரின் முன்னாள் ஷெரிஃப்புமான விஜய்பட் சிங்கானியா மார்ச் 28ம் தேதி மும்பையில் அமைதியாகக் காலமானார். நாங்கள் அனைவரும் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறோம், அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு இந்திய அரசும் விஜய் பட் சிங்கானியாவுக்கு பத்மபூஷண் விருது அளித்து கௌரவித்தது. இவருக்கு, ஆஷாதேவி என்ற மனைவியும் மதுபதி சிங்கானியா, கௌதம் சிங்கானியா என இரு மகன்களும் ஷெபாலியா ரூயா என்ற மகளும் உண்டு. இதில், மூத்த மகன் மதுபதி சிங்கானியா ரேம்ண்ட் குழுமத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக குடும்பத்துடன் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டார்.