'மகிழ்ச்சியான நாடு' என்பதற்கான அளவுகோல்கள் என்னென்ன? #HappiestCountry

மகிழ்ச்சியை அப்படி எதைக் கொண்டுதான் அளவிடுகிறார்கள்? ஒரு நாடு மகிழ்ச்சியாக இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க ஐநா சபை, ஆறு முக்கிய அளவுகோல்களைப் பயன்படுத்துகிறது...
Happiest Countries
Happiest Countries
Published on

இந்த மகிழ்ச்சி என்ற சொல்லுக்கு அத்தனை எளிதாக யாரும் பொருள் விளக்கம் சொல்லிவிட முடியாது. எனது அகராதியில் அதற்கு ஓர் அர்த்தம் இருக்கும். உங்களுடைய அகராதியில் அதற்கு வேறு விதமான அர்த்தம் இருக்கலாம்.

நாளையைப் பற்றிய பொருளாதாரக் கவலை இல்லாதவர்களைக் கேட்டால், மழை பெய்யும் நேரத்தில், சூடாக மிளகாய் பஜ்ஜி, ஒரு கப் டீயுடன் இளையராஜாவின் இசை கிடைத்தால் போதும், ‘டிவைன்’ என்பார்கள். பொருளாதாரச் சிக்கல் இருப்போருக்கு, பணத்தைப் போல மகிழ்ச்சி தரும் இன்னொரு விசயம் வேறு இருக்க முடியாது. மகிழ்ச்சியை நாம் இப்படி பொருளாதாரத்தோடேயே பெரும்பாலும் பொருத்திப் பார்த்துக்கொள்கிறோம். அது சரியானதுதானா?

2026 ஆம் ஆண்டின் ஐநா அறிக்கையின்படி உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், முதல் 5 நாடுகளாக, பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து ஆகியவை இடம் பிடித்திருக்கின்றன. பின்லாந்து இந்த முதலிடத்தைத் தொடர்ந்து 9வது ஆண்டாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. உலகின் பணக்கார நாடுகள் வரிசையில் பின்லாந்து முதல் 20 இடங்கள் கூட இல்லை! அப்படியானால், பின்லாந்துக்கு இது எப்படி சாத்தியமாகிறது? 

முதலாவதாக, மகிழ்ச்சியை அப்படி எதைக் கொண்டுதான் அளவிடுகிறார்கள்?

ஒரு நாடு மகிழ்ச்சியாக இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க ஐநா சபை, ஆறு முக்கிய அளவுகோல்களைப் பயன்படுத்துகிறது:

1. சமூகப் பிணைப்பு (Social Support): சமூகத்தின் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் ’எனக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடி வர, தோள் கொடுக்க உறவுகளும், நண்பர்களும் இருக்கிறார்கள்’ எனும் நம்பிக்கை.


2. பொருளாதாரப் பாதுகாப்பு (GDP): நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான அவர்களின் வாங்கும் சக்தி, அதை உறுதி செய்ய அவசியமான சரியான வருமானம்!

3. ஆரோக்கியம் மற்றும் ஆயுள் (Life Expectancy): வெறும் வாழ்நாளை மட்டும் கணக்கிடாமல், மக்கள் எவ்வளவு காலம் நோயற்ற, ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள் எனும் கணக்கெடுப்பு.

4. சுதந்திரம் (Freedom): ஒரு தனி மனிதன் தனது கல்வி, வேலை மற்றும் வாழ்க்கை முறையை எவ்விதமான புற அழுத்தமும், கட்டாயமும் இன்றித் தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரம்.

5. உதவும் மனப்பாங்கு (Generosity): எப்போதும் சக மனிதர்களுக்கு உதவத் தயாராக இருக்கும் பொது சமூக மனப்பான்மை மற்றும் ஈகைக் குணம்.

6. நேர்மை (Corruption free): ஊழலற்ற, சுரண்டலற்ற அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆட்சியமைப்புகள். அவற்றின் மீது மக்களுக்கு இருக்கும் முழுமையான நம்பிக்கை.

இவை அனைத்திலும் பின்லாந்து எப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், எப்படி?

Finland world's happiest country
Finland world's happiest country

* இயற்கையுடன் ஒன்றிணைந்த வாழ்வு: பின்லாந்தின் 75% நிலப்பரப்பு காடுகளால் ஆனது. ’இயற்கை அனைவருக்குமானது’ எனும் கொள்கைப்படி, எவரும் எங்கும் சென்று இயற்கையை ரசிக்க முடியும். இது அவர்களின் மன அழுத்தத்தைப் பெருமளவு குறைக்கிறது.

* சமத்துவக் கல்வி: ஏழை வீட்டுப் பிள்ளைக்கும், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வி இலவசமாகக் கிடைக்கிறது. போட்டி இல்லாத கல்வி முறை அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது.

* கடவுள் மறுப்பு: பின்லாந்து மக்களில் 40 சதவீதத்தினர் கடவுள் நம்பிக்கையில்லாதிருக்கின்றனர். சக மனிதனை எவ்வகையிலும் ஏற்றத்தாழ்வு பார்க்காதவர்களாக இருக்கிறார்கள்.

பின்லாந்து மக்கள் பின்பற்றும் 'சிசு' (Sisu) எனும் வாழ்க்கை முறையையும் நாம் கவனிக்கலாம். இந்த சிசு எனும் தத்துவம், வாழ்க்கை எப்போதும் வசதியானதாகவே மட்டும் இருந்துவிடுவதில்லை. கடும் குளிரும், சவால்களும் வரும்போது அதைக் கண்டு ஓடாமல், மன உறுதியுடன், விடாமுயற்சியுடன் எதிர்கொள்ள வேண்டுமென்பதை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்கிறது. மகிழ்ச்சி என்பது கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை அல்ல, மாறாக கஷ்டங்களை வெல்லும் மனத்துணிவும், நம்பிக்கையும்தான் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் இல்லையா?

இந்தியா இந்தப் பட்டியலில், பொதுவாக 110க்குப் பிறகான ஏதாவது  (2025-ல் 118-வது இடம்) இடத்தில்தான் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் நாம் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்தாலும், சாதி மத மாச்சரியங்களால் ஏற்படும் சமூகப் பிணைப்பின்மை மற்றும் பாதிப்புக்குள்ளாகும் தனிநபர் சுதந்திரம் போன்ற காரணிகளில் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம். மகிழ்ச்சி என்பது அதிகப்படியான பணம் அல்லது சொகுசு வாழ்க்கையில் இல்லை. அது நாம் வாழும் சமூகத்தின் பாதுகாப்பு, நேர்மையான நிர்வாகம் மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மையில்தான் ஒளிந்திருக்கிறது.

Puthuyugam
www.puthuyugam.com