அணுசக்தி சரக்குக் கப்பல்: சீனாவின் முயற்சி சாத்தியமா?

அணுசக்தியில் இயங்கும் பிரமாண்ட சரக்குக் கப்பலை கட்டப் போவதாக சீனா அறிவித்துள்ளது.
Cargo Ship
Cargo ShipFreepik
Published on

உலகளவில் கப்பல் கட்டும் தொழிலில் சீனா முதலிடத்தில் உள்ளது. சரக்குக் கப்பல் தயாரிப்பில் கிட்டத்தட்ட 59 சதவிகித சந்தை மதிப்பை இந்த நாடு கொண்டுள்ளது. சரக்குக் கப்பல் கட்டுமானத்தில் சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள்தான் உலகளவில் முன்னிலையில் உள்ளன. இந்த நிலையில், சீனா முதன்முறையாக அணுசக்தியில் இயங்கும் சரக்குக் கப்பலை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, நீர்மூழ்கி கப்பல்கள், விமானம்தாங்கிக் கப்பல்கள் அணுசக்தியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில்தான், சீன அரசுக்கு சொந்தமான ஷாங்காய் நகரிலுள்ள Jiangnan கப்பல் கட்டும் நிறுவனம் அணுசக்தியில் இயங்கும் பிரமாண்ட சரக்கு கப்பலை 10 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க போவதாக தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலில் 25 ஆயிரம் கண்டெய்னர்களை ஒரே சமயத்தில் ஏற்றிச் செல்ல முடியும். இந்தக் கப்பல் சுமார் 40 ஆண்டுகள் இயங்கும். சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ரக கப்பல்கள் மிக விரைவாக செல்லக் கூடியவை. டீசல் கப்பல்களை விட குறைந்த செலவே ஆகும். இதனால் நேரமும், எரிபொருள் செலவும் மிச்சமாகும். சரக்குகளை விரைவாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்ல முடியும். எரிபொருளுக்காக எந்தத் துறைமுகத்துக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நிற்காமலேயே நீண்ட தொலைவு பயணிக்க கூடிய திறன் படைத்தவை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

China State Shipbuilding Corp என்பதுதான் ஜியான்கன் கப்பல் கட்டும் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆகும். 1865ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய கப்பல் கட்டும் நிறுவனம் இதுவாகும். சீனாவின் 3வது விமானம்தாங்கி கப்பலான ஃபூஜான் இங்குதான் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

NS_Savannah - first nuclear-powered merchant ship
NS_Savannah - first nuclear-powered merchant shipElton Lord/Atomic Energy Commission

ஆனால், உலகத்தில் அணுசக்தியில் இயங்கும் சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வரவேற்பை பெறவில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. இதற்கு முன்னதாக, அமெரிக்கா 1959ம் ஆண்டு என்.எஸ். சவான்னா என்ற பெயரில் அணுசக்தியில் ஓடும் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பலை தயாரித்தது. 1964ம் ஆண்டு 'ஓட்டோ ஹான் 'என்ற பெயரில் ஜெர்மனி அணு சக்தி கப்பலை தயாரித்தது. 1969ம் ஆண்டு ஜப்பான் 'முட்சு' என்ற பெயரில் அணுசக்தி சரக்கு கப்பலை உருவாக்கியது. 1986ம் ஆண்டு ரஷ்யா 'சேல்மார்பட்' என்ற பெயரில் சரக்குக் கப்பலை இயக்கியது. இது தவிர கடலில் பனிக்கட்டிகளை உடைக்கும் கப்பல்களிலும் ரஷ்யா அணு சக்தியை பயன்படுத்தி வருகிறது. ஆனால், அணுசக்திக் கப்பல்களுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் கைவிடப்பட்டன. அதோடு, துறைமுகங்களிலும் சிறப்பு அனுமதியின் பெயரில்தான் இந்தக் கப்பல்கள் அனுமதிக்கப்பட்டன. பொருளாதாரரீதியாக இவற்றை இயக்குவதிலும் செலவு அதிகம் என்றும் கூறப்பட்டது.

அதோடு, கடலில் சென்று கொண்டிருக்கும் போதும் சரி... துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட போதும் சரி... சோமாலியக் கொள்ளையர்கள் போன்ற கடற் கொள்ளையர்களின் டார்கெட்டாக அணுசக்தி சரக்குக் கப்பல்கள் இருந்துள்ளன. இதனால், இவற்றைப் பாதுகாப்பதே மிகப் பெரிய சவாலான காரியமாக இருந்துள்ளது. பல துறைமுகங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை காரணம் காட்டி இந்தக் கப்பல்களுக்கு அனுமதியும் மறுத்துள்ளன. அதனால் அணுசக்தியில் இயங்கும் சரக்குக் கப்பல்கள் தயாரிப்பது ஒரு மோசமான ஐடியா என்றே கூறுகிறார்கள். இப்போது, சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், சில கப்பல்கள் மட்டுமே தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு கட்டத்தில், இந்தத் திட்டம் கை விட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Puthuyugam
www.puthuyugam.com