நகரும் இலக்குகள் #ShiftingGoalposts

நாமும் ஏதோவொன்றுக்கு ஆசைப்படுகிறோம். அதை அடைய மிகப் பிரயத்தனம் செய்கிறோம். ஆனால், அதை அடைந்தவுடன் அது சாதாரணமாகிவிடுகிறது.
Changing Goalposts
Changing Goalposts
Published on: 

ஒருநாள் என் மனைவியுடைய ஸ்மார்ட்போனில் டச்ஸ்கிரீன் வேலை செய்யவில்லை. இதைப்போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் சர்வரோக நிவாரணி ஐடியா என்பது ரீஸ்டார்ட் செய்துபார்ப்பதுதான். அதைச் செய்ததும் அது சரியாகிவிட்டது. ஆனால், அவருக்கோ தமது போன் பழசாகிவிட்டது என்ற எண்ணம் ஏற்பட்டு, புதிது வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார். நம்மைப்போல அதோடு 24 மணி நேரமும் அவர் குடும்பம் நடத்தினாலும் பரவாயில்லை. அவர் கேட்பதிலொரு நியாயம் இருக்கிறது. அவரோ எண்களைச் சுழற்றிப் போன் செய்யும் அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் காலத்துப் போனைப் போலத்தான் அவரது ஸ்மார்ட்போனையும் பயன்படுத்துகிறவர். ஆனால், மனைவி கேட்டு மறுக்க முடியுமா? புதிதாக ஒன்றை வாங்கினோம். இரண்டு நாட்கள் பார்க்க வேண்டுமே, புதிய கவர் போடுவதென்ன, புதிய ஸ்க்ரீன் பிக்சர் வைப்பதென்ன, புதிய புதிய ஆப்களை இறக்கி இன்ஸ்டால் செய்வதென்ன… பிசியாக அதனோடு நேரம் செலவிட்டார். மூன்றாம் நாள் மீண்டும் அது கிரகாம்பெல் காலத்துப் போனாக மேஜைக்கே போய்விட்டது.

நாமும் அவரைப் போலத்தான். ஏதோவொன்றுக்கு ஆசைப்படுகிறோம். அதை அடைய மிகப் பிரயத்தனம் செய்கிறோம். ஆனால், அதை அடைந்தவுடன் அது சாதாரணமாகிவிடுகிறது. நமது ஆர்வம் திசை திரும்பிவிடுகிறது, இலக்கு மாறிப்போய்விடுகிறது, வேலை, கார், வீடு, சமூக அந்தஸ்து என நம் வாழ்வின் அத்தனை இலக்குகளுக்கும் இதுதான் விதி. ஒரு காரை வாங்கினாலும், கொஞ்ச நாட்களிலேயே இதைவிட சிறப்பான ஒன்றை வாங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு வீட்டை கஷ்டப்பட்டு வாங்கினப்பிறகு, இன்னும் கொஞ்சம் சிட்டிக்கு அருகே வாங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இவைதான்  நகரும் இலக்குகள் (Shifting Goalposts) எனப்படுகின்றன. நாம் இலக்கை நோக்கி ஓடி முடிப்பதற்குள், எல்லைக்கோடு இன்னும் சற்று தூரம் நகர்த்தி வைக்கப்பட்டுவிடுகிறது.

இப்படி அடைந்த இலக்குகளில் திருப்தியடையாமல் அடுத்ததை நோக்கி ஓடுவதை, சிலர் பேராசை என்றோ, ’கிடைச்சதை வச்சு சந்தோஷப்படத் தெரியாதவன்’ என்றோ நினைப்பதுண்டு. ஆனால், சற்று ஆழ்ந்து பார்த்தால் இது பேராசையல்ல; இதுவே மனித இயல்பு. நமக்கு இலக்கு கை கூடும்போது, ஏற்படும் மகிழ்ச்சி தற்காலிகமானது. அது தீர்ந்ததும், மீண்டும் அதே போன்றதொரு பரவசத்தைத் தேடத் தொடங்குகிறோம். விளைவு? அடுத்த இலக்கு முளைக்கிறது. ஆனால், இங்கே நாம் இன்னும் கவனமாக நம்மையே எடை போட்டுக்கொள்ள வேண்டும்.

வளர்ச்சிக்கான இலக்குகள் என்பன வேறு, நுகர்வுக்கான இலக்குகள் என்பன வேறு.

கல்வியில் இலக்குகள் உயர்ந்துகொண்டே போகலாம். வேலையில், தொழிலில் இலக்குகள் உயர்ந்துகொண்டே போகலாம். சிந்தனையில் உயர்ந்துகொண்டே போகலாம். ஆனால், ஒரு வீட்டை வாங்குவதில், ஒரு காரை வாங்குவதில், ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவதில் நாம் நமது இலக்குகள் நகர்ந்துகொண்டே போவதை அனுமதிக்கக்கூடாது. ஒரு வீட்டைவிட இன்னொன்று சிறப்பானதாக இருந்துகொண்டேதான் இருக்கும். ஒரு ஸ்மார்ட்போன் அடுத்த மாதமே புதிதாக வரும் ஒரு மாடலுக்கு இணையில்லாமல் போய்விடும். அவற்றைத் துரத்திக்கொண்டே இருந்தால் நிம்மதி இருக்காது. இவையெல்லாம் நுகர்வுக்கான ஆசைகள். இவை நகர்வதில் பயனில்லை. இவற்றைப் பொருத்தவரை நாம் இருப்பதைக்கொண்டு நிறைவு காணத் தெரியவேண்டும்.

அறிவார்ந்த இலக்குகள் நகர்வதும், உயர்வதும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நல்லதுதான் என்றாலும், நுகர்வு சார்ந்த விசயங்களில் நாம் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், வாழ்க்கை ஒரு தீராத ஓட்டமாக மாறி, நம்மை மன அழுத்தத்துக்குக் கொண்டுபோய்விடும். அடுத்த இலக்கை நோக்கி நகரத் தொடங்குவதற்கு முன், இப்போது நீங்கள் அடைந்திருக்கும் வெற்றியைச் சற்று நின்று நிதானமாகக் கொண்டாடுங்கள் (Celebrate the Wins). கடந்த காலங்களில் நீங்கள் எதை அடையத் துடித்தீர்களோ, அந்த இடத்தில்தான் இன்று நின்று கொண்டிருக்கிறீர்கள், அதை அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் (Enjoy the Process).

நம் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிப்பது நாம் அடையும் இலக்குகளின் எண்ணிக்கை அல்ல; எந்த இலக்குகளைத் தொடர்ந்து துரத்துவது, எந்த இடத்தில் நின்று ரசிப்பது என்பதைத் தெரிந்துகொள்ளும் முதிர்ச்சிதான். அந்தத் தெளிவு வந்துவிட்டால், முன்னேற்றமும் இருக்கும்; மனநிறைவும் இருக்கும்.