

’வெங்காயம் காலியாயிடுச்சு, காய்கறிக் கடைக்குப் போகணும்ங்க, கிளம்புங்க’ என்று என் மனைவி சொன்னால், அடுத்த நொடி என் வாயில் வரும் வார்த்தைகள், ‘சாய்ங்காலம் போகலாம்’. அவர் அதை மாலையில் கேட்டிருந்தால், நிச்சயமாக, ‘மறுநாள் காலை போய்க்கலாம்’ என்றுதான் சொல்லியிருப்பேன். இதுதான் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கான முக்கியக் காரணமாகவும் கூட இருக்கிறது. அப்படி அவர் கேட்கும் நேரத்தில், உடனே என்னைக் கிளம்பவிடாமல் தடுப்பது எது? Procrastination!
தள்ளிப்போடுதல் (Procrastination) என்பது சோம்பேறித்தனம் அல்ல, அது ஒரு உளவியல் சிக்கல் என்கிறார்கள். நாம் ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்று விரும்பினாலும் கூட, ஏன் அதை முடிந்தவரைத் தள்ளிப் போடுகிறோம்?
1. உணர்வுகளின் கட்டுப்பாடு (Emotional Regulation)
நாம் ஒரு வேலையைத் தள்ளிப்போடுகிறோம் என்றால், அந்த வேலை நமக்கு ஒருவிதமான சலிப்பையோ அல்லது பதற்றத்தையோ தருகிறது என்று அர்த்தம். நமது மூளை அந்த 'நெகட்டிவ்' உணர்வுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்க, தற்காலிக மகிழ்ச்சி தரும் டிவி, செல்போன் போன்ற விஷயங்களை நோக்கி நம்மைத் திருப்புகிறது.
2. மூளைக்குள் விவாதம் (Limbic System vs Prefrontal Cortex)
நமது மூளையின் லிம்பிக் சிஸ்டம் மற்றும் ப்ரிஃப்ரண்டல் கார்டெக்ஸ் எனும் இரண்டு பகுதிகளும் முட்டிக் கொள்கின்றன. லிம்பிக் சிஸ்டம், உடனடி மகிழ்ச்சியைத் தேடும் பகுதி. ’இப்போது ஜாலியாக இருப்போம்’ என்று இது சொல்லுகிறது. ப்ரீஃபிரண்டல் கார்டெக்ஸ் என்பது திட்டமிடும் பகுதி. ’இந்த வேலையை முடித்தால்தான் எதிர்காலம் நன்றாக இருக்கும்’ என்று இது சொல்லுகிறது. பெரும்பாலும் வலிமையான லிம்பிக் சிஸ்டமே வெற்றி பெறுகிறது.
3. பூரணத்துவம் (Perfectionism)
’இந்த வேலையைச் செய்தால் மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும், இல்லையென்றால் செய்யவே கூடாது’ என்ற எண்ணம் பலரை வேலையைத் தொடங்கவிடாமல் தடுத்து விடுகிறது. தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம், முழுமையை நோக்கிய எதிர்பார்ப்பு இங்கே முக்கியக் காரணியாக இருக்கிறது.
இப்படிப் பல காரணங்கள், நம்மை ஒரு பணியைச் செய்யவிடாமல் தடுத்து, நம்மை மேலும் பலவீனமாக்குகின்றன. இவற்றை நாம் எப்படி எதிர்கொள்வது?
5 நிமிட விதி (The 5-Minute Rule)
ஒரு வேலையைத் தொடங்கவே பயமாக இருந்தால், "வெறும் 5 நிமிடம் மட்டும் இந்த வேலையைச் செய்வோம், அப்புறம் நிறுத்திவிடலாம்" என்று உங்கள் மூளையை ஏமாற்றுங்கள். ஒரு பெரிய நாவல் எழுதவேண்டும் எனும் பிரம்மாண்டம் உங்களைப் பயமுறுத்தினால், ’இன்று ஒரு அத்தியாயத்தை மட்டும் எழுதுவோம்’ என்று முடிவு செய்து தொடங்குங்கள். பெரும்பாலும், வேலையைத் தொடங்கிவிட்டால் அந்தத் தடை உடைந்துவிடும்.
2-நிமிட விதி (2-Minute Rule)
எந்த ஒரு வேலை இரண்டு நிமிடங்களுக்குள் முடியுமோ (உதாரணம்: மெயில் அனுப்புதல், புத்தகத்தை அடுக்குதல், மனைவிக்கு காய்கறியை நறுக்கித் தருதல்), அதையெல்லாம் யோசிக்காமல் உடனே செய்துவிடுங்கள்.
வேலையைப் பிரித்தல் (Breaking it down)
வீட்டுக்கு ஒட்டடை அடிக்கும் பெரிய தேவை வந்தால், அதைத் தள்ளிபோடாமல், ஒரு நாளைக்கு ஒரு அறை என்று சின்னச் சின்னதாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.
உங்களை நீங்களே மன்னியுங்கள் (Forgive yourself)
நேற்று வேலையைத் தள்ளிப்போட்டுவிட்டோமே என்று வருத்தப்படுவது, மீண்டும் உங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி இன்றைய வேலையையும் தள்ளிப்போட வைக்கும். அதனால், ‘பரவாயில்லை, இன்று புதிதாகத் தொடங்குவோம்’ என்று உங்களை நீங்களே மன்னிப்பது ஒரு மிகச்சிறந்த தீர்வு. ஒரு வேலையைச் செய்ய, சின்னச்சின்ன பரிசுகளை எடுத்துக்கொள்ளுங்கள். மனைவியை காய்கறி வாங்க அழைத்துப்போனால், காய்கறிக்கடைக்கு அருகே இருக்கும் ஹோட்டலில் கிடைக்கும் சுவையான ‘முட்டைப் பொடிமாஸ்’ உங்களுக்கான பரிசாகட்டும் (Reward yourself).
தள்ளிப்போடுதல் என்பது ஒரு சிறிய பழக்கம் மட்டுமே, அதை உங்களின் அடையாளமாக மாற விடாதீர்கள். இலக்கு பெரிதாக இருக்கலாம், யார் வேண்டுமானாலும் அப்படியொன்றை அமைத்துக்கொள்ள முடியும். ஆனால், அதை நோக்கிய முதல் அடிதான் அதைவிட மிகப்பெரிது, அதைத்தான் பலராலும் செய்ய முடிவதில்லை!