

குடும்பத்திலிருக்கும் ஒரு 19 வயது பையனுக்கு முடி கொட்டும் பிரச்சினை. அவனது தாத்தாவுக்கு 70 வயது வரை அடர்த்தியாக முடி இருந்தது. அவனது அப்பாவும் 50 வயதை நெருங்கப்போகிறார், அவருக்கும் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இன்னும் முடி இருக்கத்தான் செய்கிறது. தள்ளிப்போடாமல், மருத்துவமனைக்குப் போய் சோதனைகள் செய்து பார்த்ததில், கடைசியில் வைட்டமின்–டி குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முடியிழப்புக்கு பல காரணங்கள் இருப்பினும், இவனது கதையில் வேறு பிரச்சினைகள் இல்லாததால் அது வைட்டமின்-டி குறைபாடாக இருக்கவே வாய்ப்பு அதிகமாகயிருந்தது. நம் உடலுக்குத் தேவையான சத்துகள் அனைத்தும் உணவிலிருந்து கிடைத்துவிடுவதாக நாம் கருதுகிறோம். ஆனால், சில குறிப்பிட்ட கேஸ்களின் கதை வேறாக இருக்கிறது. குறிப்பாக வைட்டமின்-டி நம் அன்றாட உணவான அரிசி, கோதுமை, காய்கறிகள், கீரைகளில் இல்லை. அரிதான சில மீன்கள், காளான்களில் கிடைக்கின்றன. முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. இவற்றை நாம் தினமும் உணவில் எடுத்துக்கொள்வோமா என்பது சந்தேகமே! மேலும், அப்படியே எடுத்துக்கொண்டாலும் அவை போதுமான அளவிலும் கிடைப்பதில்லை. மாறாக 90% வைட்டமின் –டி நமக்கு காலைவேளை சூரியஒளியிலிருந்துதான் கிடைக்கிறது, கிடைத்தாக வேண்டும். ஆனால், நிஜம் எப்படி இருக்கிறது? பிள்ளைகளை வெயில், புழுதிபடாமல் வளர்த்துக்கொண்டிருக்கிறோம் நாம். பள்ளி, கல்லூரி விடுமுறை தினங்களிலாவது பிள்ளைகளை காலை, மாலை இளவெயிலில் சிறிது நேரம் விளையாடச் செய்வதுதான் இதற்கான ஒரே தீர்வு.
இந்த வேகமான டிஜிட்டல் உலகில், படிப்பு, போட்டிகள், தேர்வுகள், பொழுதுபோக்கு என எல்லாமே பிள்ளைகளுக்கு அழுத்தம் தருவதாக அமைந்திருக்கின்றன. மன அழுத்தமே பல உடல்கோளாறுகளுக்கான தொடக்கமாக இருக்கிறது. கூடவே உணவுப் பழக்கம், உடல் பற்றிய அறிவுப் போதாமை எல்லாம் சேர்ந்துகொண்டால் இப்படி நிகழ்வதைத் தவிர்க்க இயலாது. அறிவு, திறமை, உழைப்பு இத்தோடு உடல் ஆரோக்கியமும் சேர்ந்தால்தான், வாழ்க்கையில் நாம் வெற்றியாளராகத் திகழமுடியும். உடல்நலத்தைச் சரியாகப் பேணிட உணவு, உறக்கம், உடற்பயிற்சி எனும் ஆரோக்கிய முக்கோணம் (Health Trinity) அவசியப்படுகிறது. இது குறித்தச் சின்னப் புரிதலும், விழிப்புணர்வும் நம் வாழ்க்கையின் மிகப்பெரிய சிக்கல்களிலிருந்து நம்மைக் காக்கலாம்.
1. சமச்சீர் உணவு (Diet)
நமது உடல் நாம் தினமும் சாப்பிடும் உணவால்தான் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. உணவே உடலை உருவாக்கும் மூலப்பொருள். உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு போன்ற வளர்ச்சிக்கான முக்கிய சத்துக்கள் நாம் உண்ணும் உணவிலிருந்துதான் கிடைக்கின்றன. இது எனக்குப் பிடிக்காது, அது எனக்குப் பிடிக்காது என்று சுவைக்கு முன்னுரிமை தராமல், காய்கறிகளை, பழங்களை, முட்டை -மீன் –இறைச்சி போன்ற புலால் உணவுகளையும், சரியான அளவில் எடுத்துக்கொள்ளப் பழகிட வேண்டும். அரிசி முதலான தானியங்கள், சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றின் அளவுகளை நம் வயதுக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். நம் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு சக்தியையும், உள்ளுறுப்புகளின் இயக்கங்களையும் பாதுகாக்கக்கூடிய, வைட்டமின்கள், மினரல்கள் போன்றவையும் பெருமளவு உணவிலிருந்து கிடைக்கின்றன. போலவே உடலுக்குத் தீங்கான உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். வலிந்து நோய்களை வரவழைத்துக்கொள்கிற புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
2. உடற்பயிற்சி (Workout)
வைட்டமின்கள், மினரல்கள் போன்றவை பெருமளவு உணவிலிருந்தே கிடைக்கின்றன என்றால், உணவிலிருந்து மட்டுமே எல்லாம் கிடைத்துவிடுவதில்லை என்றும் பொருள்படுகிறது. உடல் என்பது நிழலில், அசைவின்றி, பாதுகாப்பாக பணத்தைப் போல பத்திரப்படுத்தி வைக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. இயக்கம்தான் உடலின் ஆதாரம். நடக்கவும், ஓடவும், வெயிலில் சற்று ஓடியாடி விளையாடுவதுமே நம் ஆரோக்கியத்துக்கான முதல் படி. நேரமின்மை, சோம்பல், வேலைப்பளு என எந்தக் காரணங்களால் நாம் உடற்பயிற்சியைத் தவிர்த்தாலும், முடி கொட்டுவது போன்ற பிரச்சினைகள் மட்டுமின்றி, 40 வயது எனும் நுழைவாயிலில் நமக்காகக் காத்திருக்கும் தவிர்க்க முடியாத நோய்களின் பட்டியல் நாம் நினைப்பதை விட மிக அதிகமாக இருக்கும். உடற்பயிற்சியின் பலன், உடல்நலம் மட்டுமல்ல, இன்றைய நமது நவீன வாழ்க்கை முறையினால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து, தன்னம்பிக்கையையும் அது இரட்டிப்பாக்குகிறது.
3. தூக்கம் (Sleep)
"இரவெல்லாம் ஸ்க்ரோலிங், பகலெல்லாம் சோர்வு" என்பது பல இளைஞர்களின் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், போனுக்கு எப்படி 'சார்ஜிங்' முக்கியமோ, அப்படி உடம்புக்குத் தூக்கம் மிக முக்கியம். தினமும் 7 முதல் 8 மணி நேரச் சீரான தூக்கம் என்பது ஆடம்பரம் அல்ல; அது உடலின் அடிப்படைத் தேவை. போதுமான உணவுக்கும், உழைப்புக்கும் பின்னர் இரவு நேரத்தில், சரியான தூக்கம் மட்டுமே மூளையின் கூர்மையையும், நாள் முழுவதற்கும் தேவையான புத்துணர்ச்சியையும் தக்கவைக்கும்.
இவற்றோடு சேர்த்து, உடல் குறித்த அறிவு (Knowledge over Body), தனிநபர் சுத்தம் (Personal Hygiene) போன்ற விசயங்களிலும் நம் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு அவசியம். அடிப்படை உடலியக்கம் (Basic Physiology), பருவமாற்றங்கள் மற்றும் பால் வேறுபாடுகள் (Puberty & Reproductive Health), ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பொதுவான நோய்கள், வைட்டமின் மற்றும் சத்துக்குறைபாடுகளின் விளைவுகள், உடல் தரும் நோய்க்குறிகளை அடையாளம் காணுதல், முதலுதவி, எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்ற புரிதல் –இவையெல்லாற்றையும் குறித்த அறிமுகம் ஒவ்வொரு இளைஞனுக்கும் தேவை. போலவே, ஆடம்பரமான ஆடைகள் அல்ல; சுத்தமான நகங்கள், நறுமணம், சீரான தலைமுடி மற்றும் நேர்த்தியான தோற்றம் ஆகியவைதான் மற்றவர்களிடம் நமக்கான முதல் நன்மதிப்பையும், நம் ஆரோக்கியத்தையும் பேணுகிறது. சுத்தம் என்பது பிறருக்காக அல்ல; அது நமக்கு நாமே கொடுத்துக்கொள்ள வேண்டிய மரியாதையும் கூட!