ரெண்டே நிமிசம்ங்க!

மதுரையில் சொல்லப்பட்டாலும் சரி, மெல்போர்னில் சொல்லப்பட்டாலும் சரி, ஒருபோதும் உண்மையான ரெண்டு நிமிசத்தைக் குறிப்பதே இல்லை. ஏனெனில், இந்த ரெண்டு நிமிசம் என்பது நேரத்தை அளவிடும் அலகு அல்ல; அது ஓர் உணர்ச்சி, ஒரு நம்பிக்கை, ஒரு தற்காப்புப் பொய்!
Two minutes!
Two minutes!Chat GPT AI Image
Published on

இயற்பியலில் ஒளியின் வேகம், ஒலியின் வேகத்தையெல்லாம் விஞ்ஞானிகள் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால், மனித வரலாற்றில் இவற்றையெல்லாம் விட அதிவேகமாக, அதே சமயம் அசாத்திய நெகிழ்வுத்தன்மையோடு நகர்வது "இன்னும் ரெண்டே நிமிசம்ங்க" என்ற சொற்றொடர் மட்டும்தான்.

குளித்துக்கொண்டிருக்கும் போது சொன்னால் பரவாயில்லை. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சொன்னால் பரவாயில்லை. நேற்று ’ரயிலுக்கு நேரமாச்சு, கிளம்பணும். சீக்கிரம் வாங்கப்பா’ என்று கூப்பிட்டதற்கு, 5 கிமீ-க்கு அப்பால் இருக்கும் அத்தை வீட்டிலிருந்துகொண்டு டீ குடித்தபடி அப்பா சொன்னது இது, ‘பொறுங்கடா, ரெண்டே நிமிசத்துல வந்துருவேன்’. இதையெல்லாம் என்னவென்று சொல்வது? 

கடிகாரத்தில் இருக்கும் இரண்டு நிமிடங்கள் என்பது அறுபது அறுபதாக நூற்று இருபது நொடிகள். ஆனால், மனிதர்கள் சொல்லும் இரண்டு நிமிடம் என்பது… அது மதுரையில் சொல்லப்பட்டாலும் சரி, மெல்போர்னில் சொல்லப்பட்டாலும் சரி, ஒருபோதும் உண்மையான ரெண்டு நிமிசத்தைக் குறிப்பதே இல்லை. ஏனெனில், இந்த ரெண்டு நிமிசம் என்பது நேரத்தை அளவிடும் அலகு அல்ல; அது ஓர் உணர்ச்சி, ஒரு நம்பிக்கை, ஒரு தற்காப்புப் பொய், பல நேரங்களில் ஓர் இக்கட்டான பேச்சுவார்த்தை!

"ஏண்டா, அடுத்த வாரம் எக்ஸாம் வச்சுக்கிட்டு இன்னும் என்ன பண்ற? படிக்க ஆரம்பிச்சிட்டியா?" என்ற அம்மாவின் அதட்டலுக்கு, போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கும் மகனின் பதில்: "இன்னும் ரெண்டு நிமிசம்மா!" இந்த ரெண்டு நிமிசம் என்பது காலவெளியில் ரப்பர் போல நீளக்கூடியது. சில நேரங்களில் அது 20 நிமிசமல்ல, 200 நிமிசமாகக் கூட மாறலாம். அப்படியே நீண்டு, அந்த அறியாப்பருவத்தின் அரியர்ஸாகக் கூட மாறிவிடலாம். "பங்ஷனுக்கு நேரமாச்சு, கிளம்பிட்டியாம்மா?" என்று கணவன் வாசலில் செருப்பை மாட்டிக் கொண்டு நின்றபடி கேட்கும்போது, உள்ளிருந்து மனைவி சொல்லும் அந்த ’ரெண்டு நிமிசம்ங்க’ என்பது ஓர் ஊரறிந்த சம்பவம். அந்த இரண்டு நிமிசத்திற்குள் உடை மாற்றுவார்கள், கூந்தல் அலங்காரம் செய்வார்கள். ஆனால், அதெல்லாம் ரெண்டு நிமிசங்களில் ஆக்கூடிய விசயங்களா என்ன? அது பரவாயில்லை, ஆனால் மாலை வந்து செய்துகொள்ள வேண்டிய அத்தனை வீட்டு வேலைகளையும், இப்போதே செய்துமுடித்துவிட்டுத்தான் கிளம்ப வேண்டும் எனும் தாகம் எப்படித்தான் அவர்களுக்கு அந்நேரத்தில் வந்து தொலையுமோ தெரியாது. சமயங்களில், அது அவர்கள் பக்கத்து உறவினர் விழாவாக இல்லாமலிருந்தால், 'அப்படி அந்த பங்ஷனுக்கு நாம போய்த்தான் ஆகணுமா?' எனும் நிலைமையே கூட ஏற்பட்டுவிடும்.

இங்கே நாம் ஒரு முக்கியமான விசயத்தை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். "இன்னும் ரெண்டு நிமிசம்" என்று சொல்பவர்கள், யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அப்படிச் சொல்வதில்லை. அவர்கள் நோக்கம் அதுவல்ல. "நான் நினைத்தால் அடுத்த இரண்டு நிமிசத்தில், எதையெல்லாமோ செய்து விடுவேன்! இந்த சப்பை விஷயத்தை முடிக்க மாட்டேனா?" என்ற மாயையில் இருக்கிறார்கள். மனிதர்கள் எப்போதும் நிகழ்காலத்தைவிடத் தங்களின் எதிர்காலத் திறமையை அதிகமாக மதிப்பிடுகிறார்கள். ’நாளையிலிருந்து கன்ஃபார்மா டயட்!’, ’அடுத்த மாதத்திலிருந்து கண்டிப்பா சேமிப்பு!’, ’இந்த ஒரு வீடியோ பாத்துட்டுத் தூங்கிருவேன்!’. இவை எல்லாமே அந்த ”ரெண்டு நிமிசம்" சிக்கலின் உடன்பிறவாச் சகோதரர்கள்தான். மொத்தத்தில் தள்ளிப்போடுதல் (Procrastination) என்னும் மனித இயல்பின் ஒரு குட்டி வெர்ஷன்தான் இந்த ரெண்டு நிமிசங்கள்.

இந்தக் கட்டுரையின் அடிக்குறிப்பு கூட ரெண்டு நிமிசத்தில் வாசித்துவிடலாம் என்று சொல்லித்தான் உங்களை அழைத்திருக்கும். ஆனால், நடுவில் இந்தக் கருத்தைப் பற்றி ஏதாவது சிந்தித்துக்கொண்டும், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில், ‘தோ கிலோமீட்டர்’ என்று கூறி அழைத்துச் செல்லும் பெரியவர் போல யாரையாவது நினைத்துச் சிரித்துக்கொண்டும், நீங்கள் இதை வாசித்து முடித்திருந்தால் எவ்வளவு நேரமாகியிருக்கும் என்பது தெரியாது. ஆனால், எதுவும் எங்கும் ஓடிப்போய்விடப் போவதில்லை. அத்தியாவசியங்களைத் தவிர்த்த நிதானம் என்பது தவறில்லை, அது மனித இயல்பின் இன்னொரு அழகுதான்!

Puthuyugam
www.puthuyugam.com