'நிம்மதி ரொம்ப முக்கியம்பா'- ஐ.டி ஊழியர்கள் எடுக்கும் வித்தியாசமான முடிவுகள்!

'சம்பளம் அதிகம் இருந்தாலும், பணி நிமித்தம் காரணமாக ஐ.டிஊழியர்கள் கடுமையான மனஅழுத்தத்துக்கு உள்ளாவதும் வாடிக்கையாக உள்ளது. வேலை பாதுகாப்பும் இல்லை'
snehapriya
snehapriyaInstagram/@snehapriya9955
Published on

ஐ.டி. வேலையில் கை நிறையச் சம்பளம். இதனால், இளைஞர்கள், இளைஞிகள் ஐ.டி வேலைக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்த காலக்கட்டம் உண்டு. இந்தியாவில் பெங்களூரு, ஹைதரபாத், சென்னை , குர்கான், புனே போன்ற நகரங்களை ஐ.டி ஹப் என்றே சொல்லலாம். இந்த நகரங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஐ.டி நிறுவனங்களில் வேலைகளில் உள்ளனர். சம்பளம் அதிகம் இருந்தாலும், பணி நிமித்தம் காரணமாக ஐ.டி. ஊழியர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாவதும் வாடிக்கையாக உள்ளது. அதோடு, 'எப்போது வேண்டுமானாலும் வேலை போகலாம்' என்கிற பணிப்பாதுகாப்பு சூழல் இல்லாததும் ஐ.டி துறையின் முக்கியமான குறையாகப் பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பெண் ஊழியர் ஒருவர், வேலையை ராஜினாமா செய்து விட்டு, ஆட்டோ ஒட்டும் செய்தி பற்றிக் கேள்விப்பட்டோம். 'ஆட்டோ ஓட்டி மாதம் 60 ஆயிரம் சம்பாதிப்பதாகவும் முன்பு எப்போதுமில்லாத அளவுக்கு மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருப்பதாக'வும் அந்தப் பெண் பேட்டியளித்திருந்தார். இந்தச் செய்தி இணையத்தில் வெகு வேகமாகப் பரவியது. பலரும் அந்தப் பெண்ணின் முடிவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். 'நேர்மையாக உழைத்து வருவாய் ஈட்டுவது மட்டுமே முக்கியம். நாம் என்ன வேலை பார்க்கிறோம் என்பது விஷயமே அல்ல ' என ஏராளமானோர் அந்தப் பெண்ணின் முடிவுக்குப் பாராட்டுத் தெரிவித்திருந்தனர். அந்த வரிசையில், பெங்களூருவைச் சேர்ந்த ஸ்னேஹப்பிரியா என்ற மற்றொரு ஐ.டி ஊழியர் எடுத்த துணிச்சலான முடிவும் இணையத்தில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இவர், ஐஐடி ரூர்கியில் (IIT Roorkee) படித்து விட்டு, பெங்களூருவில் டேட்டா சயின்டிஸ்டாகப் பணி புரிபவர். தற்போது, குர்கானில் (Delhi NCR) ஆண்டுக்கு 32 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. ஆனால், அந்த வேலையில் சேர ஸ்னேஹப்பிரியா மறுத்து விட்டார். இது குறித்து இன்ஸ்டா பக்ககத்தில் அவர் கூறியுள்ளதாவது,

''என்னைப் பொறுத்த வரை, அதிக ஊதியத்தைவிட மன அமைதிக்கே முன்னுரிமை கொடுக்கிறேன். குர்கானுக்குக் குடிபெயர்வதற்குப் பதிலாக பெங்களூருவிலேயே வசிக்க முடிவு செய்துள்ளேன். இந்த நகரத்தின் அன்பான சூழல், இந்த நகரம் தரும் பாதுகாப்பு உணர்வு, சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு அங்கு கிடைக்காது. சிறந்த வேலைவாய்ப்பு அதிக சம்பளத்தை விடவும் மன நிம்மதிதான் எனக்கு முக்கியமானதாகத் தோன்றுகிறது. டெல்லி-என்சிஆர் (Delhi-NCR) பகுதிக்கு இதற்கு முன்பு , நான் சென்றபோது, ஏராளமான கசப்பான அனுபவங்களைச் சந்தித்தேன். இதனால் எனக்கு அந்த நகரத்தில் குடியேற ஒரு வித தயக்கம் இருக்கிறது. ஐஐடி ரூர்க்கியில் படித்துக் கொண்டிருந்த போதும் டெல்லிக்குச் சென்றுள்ளேன். அந்தப் பயணங்கள் எனக்கு மிகுந்த தயக்கத்தையும் கவலையையும் ஏற்படுத்தின. ஆனால், பெங்களூரில் அன்பும் கனிவும் கொட்டிக் கிடக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

சம்பளம் மட்டுமே சிறந்த பணி சார்ந்த முடிவை எடுக்கத் தூண்டும் காரணி அல்ல ... இப்போது, பாதுகாப்பு, மன நிம்மதியும் கூட பணி சார்ந்த முடிகளை எடுக்க வைக்கிறது என்பதற்கு ஸ்னேஹப்பிரியாவின் இந்தப் பதிவு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பு, மனநலம், ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரம் ஆகியவை நிதிசார்ந்த ஆதாயங்களை விட முக்கியமானவை என்பதை இளம் ஊழியர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

Puthuyugam
www.puthuyugam.com