21 நாட்களில் உடல் எடையை குறைக்க முடியுமா? நடிகர் மாதவன் தரும் டிப்ஸ்!

நடிகர் மாதவன் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர். 56 வயதிலும் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பவர். கேரக்டருக்கு ஏற்றார் போல, உடல் எடையைக் கூட்டிக்கொண்டும் குறைத்துக்கொண்டும் நடிப்பதில் கெட்டிக்காரர்.
actor madavan
actor madavan
Published on

நடிகர் மாதவனுக்கு இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ வழங்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வந்த மாதவனுக்கு 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' படம் சமீபத்தில் திருப்புமுனையாக அமைந்தது. சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றது. 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' (Rocketry: The Nambi Effect) திரைப்படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் போல உருவத்தை மாற்ற வேண்டிய அவசியம் மாதவனுக்கு இருந்தது. இதற்காக, உடல் எடையை வெறும் 21 நாட்களில் நடிகர் மாதவன் கூட்டினார். வயிறு தொப்பை போட்டது போன்று மாறியது. இதற்காக, அவர் சத்து மாத்திரைகள் எதையும் பயன்படுத்தப்படவில்லை .

உணவுப் பழக்க வழக்கத்தின் மூலமாகவே உடல் எடையை அதிகரிக்கவும் குறைக்கவும் முடியுமென்று மாதவன் நம்புகிறார். இது குறித்து 'கர்லி டேல்ஸ்'  (Curly Tales) இதழுக்கு மாதவன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, ''தொடர்ச்சியாக 5 நாட்கள் கலோரி குறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வேன். இரு நாட்கள் முற்றிலும் உண்ணாவிரதம் இருப்பேன். இது அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்டவர்களின் மிதமான எடை இழப்புக்கு உதவும். உணவை விழுங்குவதற்கு முன் நன்றாக மெல்ல வேண்டும். சாப்பிடும் உணவைக் குடிப்பது போல மென்று பழகுங்கள். லேட் நைட்டில் சாப்பிடவே கூடாது. இரவு உணவு 7 மணிக்கு முன்னதாக முடிந்துவிட வேண்டும்.

மதியத்திற்குப் பிறகு சமைத்த உணவை மட்டுமே எடுத்துக் கொள்வேன். சமைத்த உணவுகள் எளிதில் செரிமானமாகி விடும். நாள் முழுவதும் அவ்வப்போது சிற்றுண்டிகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பழக்கம் நமது உடல் எடையை அதிகரித்து விடும். எனவே, அவற்றை தவிர்க்க வேண்டும்.

நடைப்பயிற்சி மேற்கொள்வது எனது முக்கியமான காலை வாடிக்கையாகும். ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களும் நடைபயிற்சியும் நல்ல பலனைத் தரும். உடலில் அதிக கலோரி செலவாகும். இதய ஆரோக்கியத்தை பராமரிக்க நடைப்பயிற்சி உதவியாக அமையும்.

Titan Nebula Jalsa Flying Tourbillon
Titan Nebula Jalsa Flying Tourbillon

இரவில், சீக்கிரமாக உறங்கச் சென்று விட வேண்டும். தரமான உறக்கத்தைப் பெறுவதும் முக்கியமானது. போதுமான தூக்கமின்மைக்கும் உடல் எடை அதிகரிப்பு மற்றும் பசி அதிகரிப்பதற்கும் தொடர்பு இருப்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உறக்கம் இல்லாமை பசியைக் கட்டுப்படுத்தும் கிரெலின்( ghrelin) லெப்டின் (leptin) போன்ற ஹார்மோன்களைப் பாதிக்கக்கூடும். இதனால், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது கடினமாகிறது. உறங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு செல்போன், தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிருங்கள். அவற்றில் இருந்து வெளிப்படும் நீல ஒளி, மெலடோனின் (melatonin ) உற்பத்தியைப் பாதித்து, தூக்கம் வருவதைத் தாமதப்படுத்தலாம்.

நல்லதொரு தூக்கம் காலப்போக்கில் பசியைக் கட்டுப்படுத்தும் திறனை மேம்படுத்துவதற்கும், உடல் எடை ஆரோக்கியமாக வைப்பதற்கும் வழிவகுக்கிறது. அடிக்கடி தண்ணீர், ஜூஸ் போன்ற திரவ உணவுகள் அருந்துவது நல்லது. இது, உடலில் நீர்சத்து அதிகரிக்க உதவும். மேலும், வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்துவதன் மூலம் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சில சமயங்களில், தாகத்தைக் கூட பசி என்றும் தவறாகப் புரிந்து கொண்டு, தேவையற்ற சிற்றுண்டிகளைச் சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

பச்சைக் காய்கறிகளில் இயற்கையாகவே கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளன. அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகள், வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இவை, உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் தருகின்றன. உடலுக்குத் தேவையான சத்தான எளிய உணவுகளை மட்டுமே சாப்பிட்டேன். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுக்கு முன்னுரிமை அளித்தேன். எண்ணெயில் பொரித்த உணவுகள் பக்கம் கூடப் போகமாட்டேன். பொதுவாக ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கத்தைப் பின்பற்றுதல், சுறுசுறுப்பாக இருத்தல், போதுமான அளவில் உறங்குவது மற்றும் நீண்ட காலத்திற்குத் அவற்றை பின்பற்றுவது மட்டுமே உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்'' என்கிறார்.

நடிகர் மாதவன் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர். 56 வயதானாலும் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பவர். கேரக்டருக்கு ஏற்றார் போல ,உடல் எடையை கூட்டி குறைத்துக் கொண்டு நடிப்பதில் கெட்டிக்காரர்.

கடந்த செவ்வாய்கிழமையன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் பெற வந்தபோது கூட ஹீரோ போலவே காட்சியளித்தார். அப்போது, அவர் கையில் அணிந்திருந்த  Titan Nebula Jalsa Flying Tourbillon ரக வாட்ச்சை அணிந்திருந்தார். இந்த வாட்ச்சின் விலை 40 லட்சமாகும்.

Puthuyugam
www.puthuyugam.com