காலம் வரும் வரை காத்திருங்கள்! #Motivation

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் 25 வயதிலேயே காரும், பங்களாவுமாக செட்டில் ஆகிவிட்டார்களே என்று பார்த்து அவசரப்படாதீர்கள். நீங்களோ, உங்கள் பிள்ளைகளோ தயாராவதற்கான கால அவகாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
Early Bloomers VS Late Bloomers
Early Bloomers VS Late Bloomers
Published on

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளை, செமஸ்டர் லீவில் வீட்டுக்கு வந்தால் நம்மால் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. ’என் நண்பர்களின் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா, ராஜனின் பையன் லண்டனில் லா படிக்கிறான், வெங்கட்டின் மகள் ஐஐடி, காரக்பூரில் சிஎஸ்இ முடித்துவிட்டு கூகுளில் சேர்ந்துவிட்டாள்’ என்று எதையாவது உளறிக்கொண்டிருக்கிறோம். அதெல்லாம் அவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று நாம் நினைத்துக்கொண்டால் ஆயிற்றா? நாம் தருவது மறைமுக அழுத்தம்தான் என்பது சற்று நிதானித்தாலே புரிந்துபோய்விடுமே! ஏனிப்படி அழுத்தம் கொடுக்கிறோம்? விரைவான வெற்றி! நம் கண்முன்னே அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நம் இளைஞர்களின் மீது 23 வயதுக்குள் படிப்பை முடித்துவிட வேண்டும், 25 வயதில் கைநிறையச் சம்பளத்துடன் வேலை, 27 வயதில் சொந்த வீடு, 29 வயதில் கல்யாணம் என்று ஓர் அழுத்தமான காலக்கெடுவை திணித்து வைத்திருக்கிறோம். 

போர்ப்ஸ் போன்ற பத்திரிகைகள் வருடாவருடம் ’போர்ப்ஸ் இந்தியா 30 அண்டர் 30’ (Forbes India 30 Under 30) போன்ற பட்டியல்களை வெளியிட்டுக் கொண்டாடுகின்றன. தொழில், தொழில்நுட்பம், வியாபாரம், கலை, விளையாட்டு என 30 வயதுக்குள்ளாகவே உச்சம் தொட்டவர்களைப் பட்டியலிடுகிறார்கள். மிக இள வயதிலேயே சாதிப்பவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்தான் (Early Bloomers). ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தப் பட்டியல்கள், முப்பது வயதைக் கடந்தும் தங்களின் அடையாளத்தைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, குறிப்பிடத்தக்க இடத்தை அடைய முடியாதவர்களுக்கு ஒருவிதமான குற்ற உணர்ச்சியையும், தாழ்வுமனப்பான்மையையும் கொடுத்துவிடுகின்றன. ’நம்மோடு படித்தவர்கள், நம்மோடு வேலையைத் தொடங்கியவர்கள் எல்லாம் எங்கேயோ போய்விட்டார்கள், நாம் இன்னும் இப்படியே இருக்கிறோமே’ என்ற சந்தேகம் (Comparison Anxiety) அவர்களை வாட்டுகிறது.

ஆனால், வாழ்க்கை என்பது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல; அது ஒரு மாரத்தான் (Marathon). எல்லா விதைகளும் ஒரே நேரத்தில் முளைப்பதில்லை. சில விதைகள் தாமதமாக, பல பருவகால மாற்றங்களை எதிர்கொண்டு, பெரும் அனுபவத்தோடு, ஆழமாக வேர்விட்டுத்தான் முளைக்கும். அவர்களைத்தான் உலகம் 'Late Bloomers' (தாமதமாக மலர்பவர்கள்) என்று அழைக்கிறது.

Grandma moses art
Grandma moses art

இளம் வயதிலேயே ஒரு துறையில் சாதிப்பவர்களுக்குத் தங்களின் இலக்கு என்ன என்பது மிக ஆரம்பத்திலேயே தெரிந்திருக்கும். ஆனால், தாமதமாக மலர்பவர்களின் உலகம் வேறு மாதிரியானது. அவர்கள் தங்களுக்கு என்ன வரும், தங்களின் உண்மையான ஆர்வம் எது என்பதைக் கண்டறியவே சில தசாப்தங்களைச் செலவிடுகிறார்கள் (Self-Discovery).  உடல் மற்றும் மனக்கூறுகளின் படியே கூட ஒருவர், தன் சுயத்தைக் கண்டறிய எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் என்பது அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மேலும், பலருக்கும் சரியான சூழல் அமையாததாலும் வெற்றி தாமதமாகலாம். தாமதமாக வெற்றியடைபவர்களிடம் ஒரு முக்கியமான கூடுதல் ஆயுதம் இருக்கிறது, அது 'அனுபவம்'. அவர்கள் தங்களின் இருபதுகளில் பல தோல்விகளையும், நிராகரிப்புகளையும், ஏமாற்றங்களையும் கடந்து வந்திருப்பார்கள். இதனால், அவர்களுக்கு வாழ்க்கையின் மீதான பயம் குறைவாகவும், துணிவு அதிகமாகவும் இருக்கும். இள வயதில் கிடைக்கும் வெற்றி சில நேரங்களில் தலைக்கனத்தைத் தந்துவிடலாம்; ஆனால், பல வலிகளுக்குப் பின் தாமதமாகக் கிடைக்கும் வெற்றியை மனிதன் மிகவும் நிதானத்துடனும், முதிர்ச்சியுடனும் (Resilience) கையாள்வான்.

இன்றைய உலக வரலாற்றை அசைத்துப் பார்த்த பல ஆளுமைகள், தங்களின் இளமைக் காலத்தில் 'ஒன்றுமே இல்லாதவர்களாக' இருந்தவர்கள்தான். 52 வயது வரை பால் கலவை இயந்திரங்களை விற்கும் ஒரு சாதாரண விற்பனையாளராக இருந்த ரே க்ராக் (Ray Kroc) அவரது 50களின் பாதியில்தான் 'மெக்டொனால்ட்ஸ்' (McDonald's) எனும் நிறுவனத்தின் கிளைகளை உலகளாவிய அளவில் நிறுவும் பணியைத் தொடங்கி வெற்றியை ஈட்டினார். தனது வாழ்நாளின் பெரும்பகுதியை ஒரு சாதாரண விவசாயக் குடும்பப் பெண்ணாகவே கழித்த அன்னா மோசஸ் (Anna Mary Robertson Moses) எனும் அமெரிக்கப் பெண், 70 வயதுக்குப் பின்னரே ஓவியம் வரையத் தொடங்கி, அவரது ஓவியங்கள் மூலமாக உலகப் புகழ்பெற்றார்.

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் 25 வயதிலேயே காரும், பங்களாவுமாக செட்டில் ஆகிவிட்டார்களே என்று பார்த்து அவசரப்படாதீர்கள். நீங்களோ, உங்கள் பிள்ளைகளோ தயாராவதற்கான கால அவகாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை வைத்து, உங்கள் பாதையில் தொடர்ந்து பயணியுங்கள். உங்களுக்கான காலம் வரும்போது, நீங்களே வியக்கும்படி மிக அழகாய் மலர்வீர்கள்! உங்களின் கடிகாரமும், மற்றவர்களின் கடிகாரமும் ஒரே நேரத்தைக் காட்டுவதில்லை. உங்களுக்கான காலம் இன்னும் வரவில்லை, அவ்வளவே!

Puthuyugam
www.puthuyugam.com