கணவனையும், மனைவியையும் கடைசிவரை பிரிந்துவிடாமல் கட்டி வைத்திருக்கும் ஒரு கயிறுதான் காமம் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், சமீபத்தில் 50 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் சொன்ன ஒரு விஷயம் அதற்கு நேர் மாறானதாக இருந்தது. ’மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளால் நாங்கள் இருவரும் இப்போது, உடலுறவை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டோம். ஆனால், இப்போதுதான் முன்னெப்போதையும் விட நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக எனக்குத் தோன்றுகிறது’ என்று சொன்னார்.
’எங்களுக்குள் எதுவுமேயில்லை, காதல் கசந்துவிட்டது. இனி சேர்ந்து வாழ்ந்து பயனில்லை’ — இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றப்படிகளில் ஏறும் பெரும்பாலான தம்பதியர் சொல்லும் ஒற்றைக் காரணம் இதுவாகத்தான் இருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது நியாயமான காரணமாகத் தோன்றலாம். நாமுமே, மனம் ஒவ்வாமல் வாழ்ந்து ஒருவரை ஒருவர் காயப்படுத்திக்கொள்வதை விட கண்ணியமாய்ப் பிரிதல் சரியானது என்றேக் கருதுகிறோம். ஆனால், மனித உறவுகளை ஆய்ந்துபார்க்கும் உளவியலாளர்கள் (Relationship Psychologists) சிலர் இதற்குப் பின்னால் இருக்கும் இன்னொன்றைச் சொல்கிறார்கள்.
திருமண வாழ்க்கை என்பது ஓர் இலக்கல்ல, அதுவொரு பயணம். அந்தப் பயணத்தில் வெவ்வேறு வடிவங்களைக் கொண்ட பல படிநிலைகள் இருக்கின்றன. இந்தஎதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாததால்தான் பல திருமணங்கள் முறிந்து போகின்றன. அதென்ன அப்படியான படிநிலைகள்?
தேனிலவு (The Honeymoon Stage)
இதுதான் பயணத்தின் தொடக்கம். காதலின் வசீகரம், உற்சாகம் எல்லாம் உச்சத்தில் இருக்கும். குறிப்பாக காமம் எனும் எக்ஸ்டஸியின் மயக்கநிலையில் எல்லாமே அழகாகத் தெரியும். துணையின் குறைகள் எதுவுமே புத்திக்கு உறைக்காது. மூளையில் டோபமைன், ஆக்ஸிடாசின் போன்ற ரசாயனங்கள் வெள்ளமாய் ஓடும். ’நீயே என் உலகம், உனக்காக எதையும் செய்வேன்’ என்ற உணர்ச்சி மட்டுமே மேலோங்கி நிற்கும். அவருக்குப் பிடித்த இளநீர் ஐஸ்க்ரீமை வாங்கிக்கொண்டு அலுவலகத்திலிருந்து எப்போது வீட்டுக்கு ஓடுவோம் என்று பரபரப்பார்கள். அறிவுக்கு இடமற்ற கற்பனையில் திளைக்கும் வண்ணமயமான நிலை இது.
எதார்த்தம் (The Reality Stage)
தேனிலவுக் காலம் மெல்லக் கடந்து, திருமணத்தின் அசல் முகம் தெரியத் தொடங்கும் நிலை இது. சினிமாத்தனமான காதல் மறைந்து, அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கு வரும். யார் காய்கறி வாங்கி வருவது? யார் வீட்டைப் பெருக்குவது? போன்ற எதார்த்தக் கேள்விகள் எழும். துணையிடம் இருக்கும் சின்னச் சின்னப் பழக்கவழக்கங்கள்எல்லாம் எரிச்சலூட்டத் தொடங்கும். ஈரமான துண்டைப் படுக்கையில் போடுவது, குறட்டை விடுவது, ஒருவருக்குப் பிடிக்காத உணவை இன்னொருவர் விரும்புவது என எல்லாமே சிக்கலாக மாறும். உங்கள் ஆசைகள், விருப்பங்கள் எல்லாமே இரண்டாமிடத்துக்கு வந்துவிட்டதாகத் தோன்றும். அவரது ஒன்றுவிட்ட சகோதரியின் திருமணத்துக்கு அலைவது இப்போது ரொம்ப முக்கியமா என்பது போன்ற கேள்விகள் எழும். நம் துணையும் எல்லோரையும் போல குறைபாடுகள் உள்ள ஒரு சாதாரண மனிதர்தான் என்ற உண்மை உறைக்கும் நிலை இது.
ஏமாற்றம் (The Disappointment Stage)
உறவுகளிடையே அபாயகரமான நிலை இதுதான். ’இவர் நான் நினைத்த மாதிரியான நபரே இல்லை, என்னை ஏமாற்றிவிட்டார், எனக்குப் பொருத்தமில்லாத ஒருவரோடு மாட்டிக்கொண்டேன்’ என்ற எண்ணம் இருவருக்குள்ளும் தீவிரமாக எழும். எதிர்பார்ப்புகள் உடையும். எதிர்காலம் குறித்த பயம் பெரிதாகும். அதனால் ஏமாற்றமும் (Disappointment), கோபமும் அதிகமாகும். ஒருவரை ஒருவர் தம் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் எனும் நினைப்பில் தொட்டதற்கெல்லாம் சண்டைகள் வெடிக்கும். ’ஒரு இடம் வாங்கிப்போட, ஒரு கார் வங்கிக்கொடுக்கக்கூட வக்கற்றவர்’ என்றும், ‘அடிப்படை உறவுகளைப் பேணவும், மரியாதையைக் கொடுக்கவும் தெரியாத முட்டாள்’ என்றும் கருத்துகள் தோன்றக்கூடிய உச்சநிலை இது. விவாகரத்துக்காக நீதிமன்றங்களுக்குப் போகும் பலரும் இந்த நிலையில்தான் இருப்பார்கள். வேறு துணைகளையும், தொடர்புகளையும் தேடும் ஆபத்தான நிலையும் இதுதான். ஒருவரை ஒருவர் கைவிடுவார்கள். ஆனால், உண்மையில் இது உறவின் முடிவு அல்ல என்பதைப் பலரும் அறிவதில்லை.
ஏற்பு (The Acceptance Stage)
முந்தைய நிலையின் புயலைக் கடந்து, சண்டைகளுக்கு நடுவிலும் சகிப்புத்தன்மையோடு தம்பதியர் பயணித்தால், அவர்கள் ஏற்பு நிலையை அடைவார்கள். இங்குதான் ’இங்கே யாரும் முழுமையானவர்கள் இல்லை’ என்ற பக்குவம் பிறக்கும். துணையைத் தன் விருப்பப்படி மாற்ற முயல்வதை நிறுத்திவிட்டு, அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே ஏற்றுக்கொள்ளத் தொடங்குவார்கள். ஈகோக்களைக் குறைத்துக் கொண்டு, எனக்காக என்றெண்ணாமல் 'நமக்காக' என்ற இடம் உருவாகி விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் (Adjustments) இங்குதான் ஏற்பகிறது.
தோழமை (The Companionship Stage)
அதைத் தொடர்வது இந்த அமைதியான நதி போன்ற தோழமை நிலை. ஆரம்பத்தில் இருந்த அந்தப் பதற்றமும், சண்டைகளும் அடங்கி, ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்துகொண்ட தோழமை (Companionship) உருவாகும். ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமலேயே, பேசிக்கொள்ளாமலேயே துணையின் மௌனத்திற்கான காரணத்தைக் கண்டுபிடித்துவிட முடியும். உறவினர்களோடு எங்கோ ஒரு கல்யாணத்துக்குப் போயிருக்கிறார், வரத் தாமதமாகிறது என்றால் சாப்பிடுவதற்கு முன்பு போட வேண்டிய மாத்திரையைப் போட்டிருப்பாரா எனும் கவலை தோன்றும், போன் செய்து அதை நினைவூட்டுவார்கள். காதலை விடவும் பெரியதானதொரு தார்மீகப் பாதுகாப்பும், நிம்மதியும் இந்த நிலையில் தம்பதிகளுக்குக் கிடைக்கும். ஒருவர் இல்லாத வாழ்க்கையை இன்னொருவரால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உறவு இறுக்கமடையும்.
காதல் (The Mature Love Stage)
எல்லோரும் நினைப்பதைப்போல முழுமையான காதல் தொடக்கத்தில் இல்லை, இங்கே இறுதியாகத்தான் நமக்காகக் காத்திருக்கிறது. இது வெறும் உடல்களின் சேர்க்கைக்கோ, உணர்ச்சிகளின் வேகத்துக்கோ ஆனதல்ல. தங்களின் வாழ்நாளில் எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், ஏமாற்றங்கள், மகிழ்ச்சி, சோகம், இழப்புகள்என அனைத்தையும் உனது எனதாக ஒன்றாகக் கடந்து வந்து, முதுமையில் கைகோர்த்து நிற்கும் பக்குவப்பட்ட இடம் இது. இது முதிர்ந்த காதல் (Mature Love). இந்த முதிர்ச்சி என்பது வயதைக் குறிப்பதல்ல, வயதான பின்னர்தான் அது வரவேண்டுமென்பதுமல்ல. நீ முந்திக்கொண்டு போய், என்னைத் தனியே தவிக்க விட்டுவிடாதே எனும் எண்ணமும், இல்லையில்லை, நான் போய்விட்டால் நீ தவித்துப்போய்விடுவாய், பரவாயில்லை, நீ முதலில் போவதே சரி எனும் எண்ணமும் சரிக்குச் சரியாய் ஏற்படும். இங்கே எதிர்பார்ப்புகள் இல்லை; பிரதிபலன் ஏதுமற்ற பேரன்புதான் இருக்கும்.
ஒரு நல்ல காஃபி என்பது இன்ஸ்டண்ட் காஃபியாக இருப்பதில்லை. தரமான காஃபிக்கொட்டைகளை வறுத்துப் பொடியாக்குவதில் தொடங்கி, வெந்நீரில் கலந்து, டிகாக்சன் இறங்கக் காத்திருக்கத்தான் வேண்டும். திருமண வாழ்க்கையும் அப்படியானதுதான். மூன்றாவது நிலையில் வரும் ஏமாற்றம் என்பதும் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதிதானே தவிர, அதுவே அதன் முடிவு அல்ல. அதைப் பொறுமையோடும், புரிதலோடும் கடப்பவர்களுக்குத்தான் பேரன்பையும், தோழமையையும் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலே சொன்ன அந்த நண்பர், அவரது திருமண வாழ்வின் உன்னதமான இறுதிக் கட்டத்தைத் தொட்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது இல்லையா?!