சொந்த வீடில்லாதவர்களின் கனவு, ஒரு வீடு! பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்களின் கனவு, ஒரு லக்சுரி வீடு (Luxury apartment)! ஆனால், அந்த லக்சுரி அல்லது ஆடம்பரம் என்பதற்கான அளவுகோல்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறது. அதில், ஒரு பகுதியினரைத்தான் குறி வைக்கின்றன 30, 40 மாடிகள் வரை கட்டப்படும் ஹை-ரைஸ் அப்பார்ட்மெண்ட்ஸ்! சென்னையில் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் 10 தளங்கள் வரை கட்டப்பட்டுக்கொண்டிருந்த அப்பார்ட்மெண்ட் வீடுகள், இப்போது சர்வ சாதாரணமாக 40, 45 தளங்கள் வரை எழுப்பப்படுகின்றன.
இந்த ஹை-ரைஸ் வீடுகளின் விளம்பர வாசகங்கள்- Sky view, Luxury living, Cloud lifestyle, City skyline என நம் மனதை மயக்குகின்றன. இவை கிடைத்தற்கரிய ஒரு வாழ்க்கையாக, உயரமான அப்பார்ட்மெண்ட்ஸ் வாழ்க்கையை சித்தரிக்கின்றன. ஆனால், அதெல்லாம் உண்மைதானா? உண்மையிலேயே அவை லக்சுரி வாழ்க்கையைத்தான் தருகின்றனவா?
ஹை-ரைஸ் அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையை நகர திட்டமிடல் நிபுணர்கள், உளவியல் ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பயனாளர்கள் என பலரும் வெவ்வேறு கோணங்களில் பார்க்கிறார்கள்.
ஹை-ரைஸ் வாழ்க்கையை, தொடர்ந்து அதிகரித்து வரும் நகர மக்கள் தொகையை குறைந்த நிலப்பரப்பில் தங்க வைத்திட அவசியமான, வளர்ச்சி மாடலாகப் பார்க்கிறார்கள், நகர திட்டமிடல் நிபுணர்கள் (Urban planners). அவர்களைப் பொறுத்தவரை இது Vertical city planning. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் (Environmentalists) கருத்துகள் இருவேறு கோணங்களில் அமைந்திருக்கின்றன. ஒன்று, இது நகர விரிவாக்கத்தை (urban sprawl) குறைக்கிறது, அதனால் நல்லது. இரண்டு, மிகப்பெரிய கான்கிரீட் கட்டிடங்கள், ஏசி மற்றும் லிஃப்ட் என மின் சாதனங்களை முழுதும் சார்ந்திருக்கும் தன்மை போன்றவை சுற்றுச்சூழல் சுமையை அதிகரிக்கின்றன, அதனால் நல்லதல்ல. ரியல் எஸ்டேட் நிறுவனங்களைப் பொறுத்தவரை (Real-estate developers) இது பணம் கொழிக்கும் ஒரு வியாபாரம். அதனால், உயரமான மாடி என்பது உயர்ந்த வாழ்க்கை என்ற மனநிலையை உருவாக்குவதில்தான் அவர்களது முழு கவனமும் இருக்கிறது.
உண்மையில், லக்சுரி வாழ்க்கை என்பது ஆடம்பரமான வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபர்னிச்சர், இண்டீரியர் டிசைன்ஸ், பாதுகாப்பு, கேட்டட் கம்யூனிட்டி, ஸ்விம்மிங் பூல், ஜிம் போன்ற பல வசதிகள் நிறைந்த வாழ்க்கை என்று ஒருவர் நினைத்தால் அவற்றுக்கும், உயரத்துக்கும் சம்பந்தமில்லை. அப்படியானால் ஹை-ரைஸ் வீடுகளின் தனித்துவமான தன்மை என்று பார்த்தால் உயரம் மட்டும்தான். அதாவது உயரத்திலிருந்து கிடைக்கும் பால்கனி வியூ! கிட்டத்தட்ட ஒரு பறவையின் பார்வை. அங்கிருந்து வானையும், கடலையும், மின்விளக்குகளின் அலங்காரத்தோடு கீழே தெரியும் சாலைப்போக்குவரத்தையும் பார்க்கும் வாய்ப்பு. இது பலருக்கும் கிட்டாத ஒரு லக்சுரிதான். ஆனால், மனித மனம் எந்தவோர் அழகுக்குமே மிக விரைவாகப் பழகிவிடுகிறது. உங்களைக் கொண்டு போய் அதிரப்பள்ளி அருவியின் நீர்த்திவலைகள் தெறிக்கும் ஓரிடத்தில், ஒரு வீடு கட்டிக் குடி வைத்தாலும், இரண்டு நாட்கள் திகட்டத்திகட்ட அருவியின் அழகைப் பார்த்து ரசித்துவிட்டு, மூன்றாம் நாள் ’சரி, அப்புறம்?’ என்றபடி உங்கள் சோலியைப் பார்க்கக் கிளம்பிவிடுவீர்கள். அதுதான் இங்கும் நடக்கும்.
மாறாக, ஹை-ரைஸ் வாழ்க்கையின் பிரச்சினைகள் என்று பார்த்தால், அதன் பட்டியல் சற்று பெரிதாகத்தான் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் லிஃப்டுக்காக காத்திருப்பது, 30 மாடிக்கு ஏறுவது அல்லது இறங்குவதற்குள், குறைந்தபட்சம் 10 மாடிகளில் ஒவ்வொருவராக இறக்கிவிட்டுக்கொண்டே போவது, அவசர நேரங்களில் கீழே இறங்கும் சிரமம் போன்ற லிஃப்ட் சார்ந்த பிரச்சினைகள் முதலாவது. அடுத்து கொசுக்கள், தூசு மற்றும் சத்தம். உயரமான வீடுகளில் இவை இருக்காது என்பது பொதுவான நமது கருத்து. ஆனால், அது முற்றிலும் உண்மையில்லை என்றும் சொல்லப்படுகிறது. சில உயரமான வீடுகளில் கொசுத்தொல்லை இருப்பதாகவும் கேள்வியுறுகிறோம். மரங்கள், கட்டிடங்கள் மறைப்பு இல்லாததால் வெளிச் சத்தமும், தூசுவும் உயரத்தை எளிதாக அடைகின்றன, வெப்பமும் அதிகமாக இருக்கிறது என்றும் சில அனுபவசாலிகள் சொல்கிறார்கள். தரை, மொட்டைமாடி எனும் வெயில் படும் நேரம், பலருக்கும் குறைவதால், வைட்டமின் –டி குறைபாடு எளிதாக ஏற்படுகிறது. மொபைல் சிக்னல் அமைப்புகள் பொதுவாக தரையைக் குறிவைத்து கட்டமைக்கப்படுவதால், சில இடங்களில் குறிப்பிட்ட உயரத்தில் மற்றும் லிஃப்டுக்குள் சிக்னல் கிடைப்பதில்லை. உயரத்தில் வறண்ட காற்று நிலவுவதால், தோல் வறட்சி, உணவுப் பொருள் பாதிப்புகள் போன்றனவும் ஏற்படுகின்றன.
இப்படி வெளிப்பிரச்சினைகள் ஒருபுறம் என்றால், உளவியல் சிக்கல்கள் மறுபுறம்! மின்சாரத் துண்டிப்பு எனும் உளவியல் பயம், தீவிபத்து மற்றும் நில அதிர்வு போன்றவற்றை எதிர்கொள்வது குறித்த பயம், லிஃப்ட் மற்றும் உயரத்தின் தனிமை தரும் அடைபட்ட உணர்வு (Claustrophobic) போன்றவை சிலருக்குச் சிக்கலாக மாறிவிடுகின்றன. மனிதர்கள் நடந்து செல்லும் இடங்கள், திறந்த வெளிகள், சமூக உறவுகள், பொது இடங்கள் போன்றவை குறைந்துகொண்டே போவது ஏற்கனவே குறைந்துகொண்டிருக்கும் மனிதத்தன்மையை மேலும் இழக்க வைக்கும் என்று எச்சரிக்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள் (Psychologists). உயரமான அப்பார்ட்மென்டுகளில் வாழ்வது, தனிமை உணர்வு, சமூக விலகல், குழந்தைகளின் வெளிப்புற விளையாட்டு குறைவு போன்ற நிலைகளை உருவாக்கக்கூடும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறிய குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கு தரையோடு தொடர்பில்லாத வாழ்க்கை மனச்சிக்கலை ஏற்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
சிங்கப்பூர் போன்ற வாழத் தகுந்த நிலப்பகுதிகள் குறைவாக உள்ள நாடுகள் ஹை-ரைஸ் வீடுகளை மிகவும் வெற்றிகரமான நகர வாழ்க்கை மாடலாகக் காட்டுகின்றன. காரணம், அங்கு திட்டமிடல் மிக வலுவாக இருக்கிறது. ஆனால், அமெரிக்காவில், கோவிடுக்குப் பிறகு தனி வீடுகள் மற்றும் 12 தளங்களுக்குக் குறைவான வீடுகள் என்பதான ஆர்வம் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஸ்காண்டிநேவிய நாடுகள், மனிதர்களுக்கு தரை மட்ட அனுபவம், நடைபயணம், திறந்த வெளி, இயற்கை அணுகல் ஆகியவை முக்கியம் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன.
உண்மையில், ஒரு நல்ல வீடு என்பது அதிக உயரத்தில் இருப்பதை விட, நம் உடல் மற்றும் மனநலத்தைப் பாதுகாப்பதாகத்தான் இருக்க வேண்டும். தினமும் லிஃப்டை நம்பி வாழ்வது, இயற்கையிலிருந்து விலகி கண்ணாடி சுவர்களுக்குள் அடைபட்டு வாழ்வது, எல்லோருக்கும் பொருத்தமான வாழ்க்கைமுறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. வெற்றி என்பது உயரத்தை அடைவது மட்டுமே அல்ல! சில வீட்டுச்செடிகளுக்கு வேண்டுமானால் தொட்டி மண்ணும், பால்கனி வெளிச்சமும் போதுமானதாக இருக்கலாம். ஆலமரங்களுக்கு பூமிதான் வேண்டும்!