'ஒரே நிறுவனத்தில் வேலையா?' மாறிய இந்தியர்களின் மனநிலை!

இந்தியர்கள் ஒரே நாளில் பல வேலைகளை செய்யக் கூடிய 'பல்வகைத் தொழில் ' (portfolio careers)முறைக்கு மாறி விட்டனராம்.
Career
Career
Published on

இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக, ஒரு டிகிரியை வாங்கி விட்டு, ஏதோ ஒரு நிறுவனத்தில் மாத சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தால் போதும் என்கிற மனநிலை இருந்தது. வேலை கிடைத்து விட்டால், அதே நிறுவனத்தில் காலத்துக்கும் ஒட்டிக் கொண்டிருப்பது, அந்த வேலை போய் விட்டால், மனதளவில் உடைந்து போவது என்கிற மனநிலையில் மக்கள் இருந்தனர். ஆனால், கால ஓட்டத்தில் இந்தியர்கள் 'ஒரே வேலையை நம்பி இருக்க வேண்டாம் ' என்கிற மனநிலைக்கு மாறி விட்டனராம். அதாவது, இந்தியர்கள் ஒரே நாளில் பல வேலைகளை செய்யக் கூடிய 'பல்வகைத் தொழில் ' (Portfolio Careers) முறைக்கு மாறி விட்டனராம்.

தொழில்நுட்பம் இந்தியர்களிடையே இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதனால், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு ஆடை வடிவமைப்பாளர் பெர்லினில் உள்ள ஒரு நிறுவனத்துக்குப் பணியாற்ற முடியும். டெல்லியில் உள்ள ஒரு எழுத்தாளர், பல நிறுவனங்களுக்கு கட்டுரைகள் எழுதி கொடுக்க முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய பணிகள் அலுவலகங்களின் மூலம் அல்லாமல், இணையத்தின் வழியாகவே ஒருங்கிணைக்கப்படுகின்றன. மேலும், இந்தியாவில் 10 ஊழியர்களில் 9-க்கும் மேற்பட்டோர் ஏதேனும் ஒரு வடிவத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துகின்றனராம். தொழில்நுட்ப மாற்றங்கள், பணியாள்களை நியமிப்பது பணிச்சூழலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, இந்தியர்கள் இத்தகைய மனநிலைக்கு மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

work in office
work in office

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியத் திறன் ஆய்வறிக்கையின்படி (India Skills Report 2026) புராஜெக்ட் அடிப்படையில் பணிபுரிவதையே இளைஞர்கள் அதிகமாக விரும்புகின்றனர். நிறுவனங்கள் குறுகிய கால அடிப்படையில் பணியாட்களை நியமிக்கின்றன. ஒரு புராஜெக்ட் முடிந்தால், அடுத்த புராஜெக்ட் என அடுத்தடுத்து மாறி செல்கின்றனர். வளர்ந்து விட்ட தொழில்நுட்பம் இளைஞர்களுக்கு புதிய புதிய பகுதிநேர வேலைகளைக் கண்டறிய உதவுகிறதாம். ஒரே நாளில் பல வேலைகளை இந்திய இளைஞர்கள் செய்யும் அளவுக்கு மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது, கிட்டத்தட்ட 40 சதவீத இந்திய இளைஞர்களின் மனநிலை இதுதான் எனவும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

'எப்போது வேண்டுமானாலும் வேலை செய்யலாம்' என்கிற சாதகம் இந்தப் பணியில் உள்ளது. அதனால், ஃப்ரீலான்ஸ் பணிகள்தான் இளைஞர்களின் முதல் தேர்வாக இருக்கிறதாம். இதன் காரணமாக, வருவாய்க்காக ஒரே ஒரு வேலையைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, பல வழிகளில் இளைஞர்கள் வருமானத்தை உருவாக்குகிறார்கள். 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பகுதிநேரப் பணியாளர்களின் எண்ணிக்கை 2.3 கோடியாக உயர்ந்து விடும். இத்தகைய பணிகளில், எப்போது வேலை செய்வது? என்ன வேலை செய்வது? என்கிற முடிவை பணியாளர்களே எடுக்கின்றனர்.

Working in a Project
Working in a Project FreePik

பணி அளிக்கும் நிறுவனங்களும் இந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றன. 'ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒரு பணியாளரால் என்ன செய்து முடிக்க முடியும்' என்பதில்தான் நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. நிறுவனங்களின் நிர்வாகத்தில், ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், சுதந்திரமாக வேலை செய்ய விரும்புபவர்களுக்கு பல வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. பல நிறுவனங்களுக்கு பணியாற்றவும், பலதரப்பட்ட ஊழியர்களுடன் பழகி அனுபவத்தை வளர்த்துக் கொள்ளவும் முடிகிறது. இத்தகைய பணிச்சூழலில் ஒருவர் ஒரே வேலையில் எவ்வளவு காலம் பணியாற்றியுள்ளார் என்பது முக்கியமே அல்ல. மாறாக அவர் என்ன சாதித்தார் என்பதே இங்கு கவனத்தில் கொள்ளப்படுகிறது.

எனினும், இத்தகைய பணிச்சூழலில் குறைபாடுகள் ஏராளமாக உள்ளன. பணிப் பாதுகாப்பு இல்லை. பகுதி நேரப் பணியாளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு அல்லது ஓய்வூதிய சலுகைகள் கிடைப்பதில்லை. பல வேலைகளை பார்ப்பது, நீண்ட நேரம் உழைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. இதனால், வேலை நேரத்துக்கும் ஓய்வு நேரத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர்கள் உழைக்கிறார்கள். இது, நாளடைவில் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற வேலையின் பாரம்பரிய அடையாளங்களும் இத்தகைய பணிச் சூழலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Puthuyugam
www.puthuyugam.com