ஆலோசனை கொடுக்கலாம்... அதுக்காக இப்படியா!

உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாத அளவுக்கு தொப்பை வைத்திருக்கும் பழையபேப்பர் கடைக்காரர் கிரிக்கெட்டில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் எப்படி அடிப்பது என்று சொல்லித் தருவார்.
Gothandam
Gothandam
Published on

இந்த உலகத்தில் எதுவுமே இலவசமாகக் கிடைக்காது, எல்லாவற்றுக்கும் ஒரு விலையிருக்கிறது என்பார்கள். யாராவது உங்களுக்கு இலவசமாக ஒன்றைத் தருகிறார்கள் என்றால், இந்தத் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் நீங்கள்தான் அதற்கான விலை என்று பயமுறுத்துவார்கள். ’கொஞ்ச நேரம் இன்ஸ்டாகிராம்ல வேடிக்கை பார்க்கிறதுக்கு, இதென்னடா இப்படிப் பயமுறுத்துறீங்க’ என்பதாகத்தான் நமக்குத் தோன்றும். ஆனாலும், எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல், முற்றிலும் இலவசமாக கிடைக்கக்கூடிய ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதுதான் ஆலோசனை!

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விசயத்தில் நிபுணராக இருக்கிறோம். இந்த சமூகம் உய்வடைய நாம் அதைப் பிறரிடம் பகிர்ந்தேதான் தீருவோம். நான் ஒரு மெக்கானிக், ஒரு பைக் வாங்குவது குறித்து என் நண்பருக்கு ஆலோசனை கொடுப்பேன். நீங்கள் ஒரு டாக்டர், சுகரை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று உங்கள் நண்பருக்கு ஆலோசனை கொடுப்பீர்கள். ஆஹா, எவ்வளவு நல்ல சமூகம் என்றுதானே தோன்றுகிறது. அதுதான் இல்லை! இதெல்லாம் நிஜமான நிபுணத்துவம். இதெல்லாம் பைசாவை நகர்த்தாமல், நம் வாயிலிருந்து ஒரு வார்த்தை வெளியே வராது.

ஆனால், அதற்கு நேர்மாறாக சுகரை எப்படி குறைப்பது என்று ஒரு மெக்கானிக்கான என்னிடம் கேட்டால், காலங்காத்தால பாகற்காய் ஜூஸை பல்லு படாமல் குடிப்பது எப்படி என்று பக்காவாக சொல்லித்தருவேன். ஒரு டாக்டரான உங்களிடம் வந்து வாழை வயலுக்கு எப்போ வரப்பு வெட்ட வேண்டும் என்று கேட்டால் நீங்களும் ஆர்வமாக பதில் சொல்வீர்கள். இப்படியான ஆலோசனைகள்தான் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும்.

காலங்கார்த்தால பக்கத்திலிருக்கும் கதிரேசன் டீக்கடைக்குப் போய் பேப்பர் படிப்பது போல சற்றுக் காது கொடுத்துப் பாருங்கள். உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாத அளவுக்கு தொப்பை வைத்திருக்கும் பழையபேப்பர் கடைக்காரர் கிரிக்கெட்டில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் எப்படி அடிப்பது என்று சொல்லித் தருவார். சிகரெட் வாங்கக் காசில்லாமல் பீடி பிடித்துக்கொண்டிருக்கும் கொத்தனார் முருகன், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை வரையறையை ரிவ்யூ செய்துகொண்டிருப்பார். லேடீஸ் ஜாக்கெட் ஸ்பெஷலிஸ்ட் டெய்லர் அண்ணன் புதுவீட்டில் கக்கூஸை எந்தப் பக்கம் வைக்க வேண்டும் என்று வாஸ்து சொல்லுவார். லைப்ரரியன் செல்வமணி சார் ’இப்ப வாங்காத, இன்னும் 6 மாசம் பொறு, கப்புனு இறங்கும் பாரு’ என்று ரியல் எஸ்டேட் ஆலோசனை கொடுத்துக்கொண்டிருப்பார். சம்பந்தப்படாத எல்லாவற்றிலும் எப்படித்தான் நாம் நிபுணர்கள் என்று நம்புகிறோமோ? இதெல்லாம் நம் ரத்தத்தில் ஊறிய கலாச்சாரக் கூறாக இருக்கலாம்.

இப்படித்தான் காமெடி நடிகர் கோதண்டம் வெளியிட்டிருந்த ஓர் ஆலோசனை விடியோ ஒன்று நம் கண்ணில் பட்டது. நாம் தமிழர் கட்சிக்கான ஆலோசனை என்று சொல்லி 10 நிமிடத்துக்கு ஒரு விடியோ போட்டிருந்தார். அவர்கள் கட்சியை அவர்கள் வளர்க்க, அப்படி என்ன ஆலோசனையை இவர் சொல்லியிருக்கிறார் என்று நாமும் ஆர்வமாக அதைப் பார்த்தோம். 'என்னை நீங்க திட்டினாலும் பரவாயில்ல. நான் ஆலோசனையை சொல்லித்தான் தீருவேன்' என்று நடுநடுவே பில்டப் வேறு கொடுத்துக்கொண்டிருந்தார். கடைசியில்,

'எப்படியிருந்த நம்ம கட்சி இப்படி ஆயிடுச்சேன்னு நாம் தமிழர் கட்சிக்காரங்க எல்லாரும் சேர்ந்து ஒரு அறையில் உக்காந்து ஆலோசனை பண்ணுங்க' என்று சொன்னார். அதுதான் ஆலோசனையாம்! எப்படி நம் இலவச ஆலோசனை?!

Puthuyugam
www.puthuyugam.com