கேரள மாநிலம் ஆழப்புலாவைச் சேர்ந்த 93 வயது சங்குன்னிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஜிம் என்றால் என்னவென்றே தெரியாது. அப்போது, அவருக்கு 89 வயதாகியிருந்தது. அதிக ரத்த அழுத்தம், சுகர், கொலஸ்ட்ரால் என அனைத்து நோய்களும் அவரது உடலில் இருந்தது. கை, கால்களில் வலியும் இருந்தது. அவ்வப்போது , நினைவும் தப்பியது. இந்த வயதில் தனது உடல் நலத்தை பற்றி யோசிக்கத் தொடங்கினார்.
இந்த சமயத்தில் கோட்டயத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், தனது 97 வயதான தாய் இந்த வயதிலும் ஃபிட்னெசுடன் நலமாக இருப்பதாக வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். இதைப் பார்த்ததும், சங்குன்னிக்குள் பொறி தட்டியது.
உடனடியாக, சங்குன்னி அந்த டாக்டரைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றார். டாக்டரின் அறிவுரையின்படியே, ஜிம்முக்குச் செல்லத் தொடங்கினார். வீட்டில் இருந்தவர்கள் தடுத்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி ஜிம்மில் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார். தினமும் 90 நிமிடங்கள் ஜிம்மில் இருப்பார். சின்னச் சின்ன பயிற்சிகளை மேற்கொண்டார்.
பெரும்பாலான இளைஞர்கள் கூட, 90 நிமிடம் தினமும் ஜிம்மில் பயிற்சியில் ஈடுபடுவதில்லை. ஆனால், வயோதிகத்தைத் தாண்டி சங்குன்னி, ஜிம்மில் எளிமையான பயிற்சியில் ஈடுபடுகிறார். தினசரி காலை 5 மணிக்கு எழுந்து விடும், சங்குன்னி அதிகாலையில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பார்.
காலைக்கடன்களை முடித்து விட்டு, சரியாக 5.30 மணிக்கு ஜிம்முக்கு ஆஜராகி விடுவார். பயிற்சிக்குப் பிறகு, வீட்டுக்கு வந்ததும் காலை உணவு சாப்பிடுவார். பின்னர், தனது வயலில் 4 மணி நேரம் வேலையில் ஈடுபடுவார். வயலில் காய்கறிகள், வாழை போன்றவற்றை பயிரிட்டுள்ளார். மதிய உணவுக்குப் பிறகு ஓய்வெடுப்பதோடு, ஓவியம் வரையவும் செய்கிறார். ஜிம்முக்கு சென்ற பிறகு, டீ, காபி போன்ற பழக்கங்களை முற்றிலும் துறந்துவிட்டார் சங்குன்னி.
சங்குன்னியின் மனைவி மறைந்து விட்டார். தற்போது, தனது மூத்த மகனுடன் அவர் வசித்து வருகிறார். அடிப்படையில் ஓவியரான சங்குன்னி, ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்போதும், மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்து வருகிறார். அதோடு, பீச் மராத்தன் போட்டியிலும் கடந்த மூன்று ஆணடுகளாகப் பங்கேற்று வருகிறார். தற்போது, அவரது அன்றாட வாழ்க்கை ஜிம், விவசாயம், ஓவியப்பயிற்சி என்று பிசியாக போய் கொண்டிருக்கிறது. தனிமை என்பதற்கே இடம் இல்லை.
ஜிம்முக்கு சென்றால் என்ன பலன்?
உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது. இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும். எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவும், உடல் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், சரியான உடல் எடையைப் பராமரிக்கவும் உதவும். தசைகளை வலுப்படுத்தி உங்கள் ஒட்டுமொத்த உடல் தோற்றத்தை மேம்படுத்தும். சிறந்த தோற்றத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.
உடற்பயிற்சி உங்கள் மன நலத்திற்கும் நல்லது. பதற்றம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைத்து சுயமரியாதையை அதிகரிக்கவும் உதவுகிறது. உடற்பயிற்சி செய்தால், உங்கள் ஆற்றல் அளவு அதிகரிக்கும். நாள் முழுவதும் நீங்கள் அதிக உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் சிரமப்படுபவராக இருந்தால், உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வது நல்லது. உடற்பயிற்சி தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு, விரைவாகத் தூங்கவும் நீண்ட நேரம் ஆழ்ந்து உறங்கவும் உதவுகிறது. உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்லாதவர்கள் காலையில் நடைபயிற்சி, ஜாக்கிங், ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்.
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதைப் போலவே, அளவுக்கு அதிகமாகப் பயிற்சி செய்வதும் உடலுக்குத் தீங்கானது. எனவே, மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று ஜிம்முக்கு எந்த வயதிலும் செல்லலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.