சகோதரி சொன்ன ஒரு வார்த்தை.. சிகரெட்டை அடியோடு விட்ட நானா படேகர்!

நானா படேகர் ஒரு செயின் ஸ்மோக்கர். நாள் ஒன்றுக்கு 60 சிகரெட்டுகளை புகைப்பார். இந்தப் பழக்கத்தை நிறுத்த முடியாமல் தவித்து வந்தார்.
Nana Patekar
Nana PatekarWelco
Published on

பாலிவுட் நடிகர் நானா படேகர் ஒரு சில தமிழ்படங்களில் நடித்துள்ளார். மகராஷ்டிராவில் சதாரா மாவட்டத்தில் அதிகமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகள் எடுக்கும் இந்த துயர முடிவு, நானா படேகரை வெகுவாக பாதித்தது. இதையடுத்து, 'நாம்' (NAAM) என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி விவசாயிகளுக்கு உதவத் தொடங்கினார். இவரது அறக்கட்டளை சதாரா பகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்தது. கிணறுகளை வெட்டியது, குளங்களை ஆழப்படுத்தியது, கடனில் விழுந்த விவசாயிகளுக்கு நிதியுதவி செய்து, அவர்களை கடனில் இருந்து மீட்டது. கணவரை இழந்த பெண்களுக்கு நிதியுதவி மற்றும் மாற்றுப் பணிகளை உருவாக்கி பொருளாதார ரீதியாகவும் உதவியது. 'விவசாயிகளே... உங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்தால், ஒரு முறை என்னை நினைத்துக் கொள்ளுங்கள்' என்று நானா படேகர் அடிக்கடி கூறுவார். இப்படி பல்வேறு மக்கள் நலப்பணிகளுக்காக அறியப்பட்ட நானா படேகர் ஒரு செயின் ஸ்மோக்கர். நாள் ஒன்றுக்கு 60 சிகரெட்டுகளை புகைப்பார். இந்தப் பழக்கத்தை நிறுத்த முடியாமல் தவித்து வந்தார். ஆனால், வீட்டில் நடந்த ஒரு துயரச்சம்பவத்தால், ஒரே நாள் இரவில் சிகரெட் புகைப்பதை நிறுத்தி விட்டார். எப்படி இது சாத்தியமாயிற்று என்று அவரே விளக்கமளித்துள்ளார்.

''நாள் ஒன்றுக்கு 60 சிகரெட்டுகளை குடித்துக் கொண்டிருந்தேன். நான் அதிகமாக மது அருந்துவதில்லை. ஆனால், சிகரெட்டுக்கு அடிமையாக இருந்தேன். எனது காரில் யாரும் அமர முடியாது. ஏனென்றால், காரில் சிகரெட் வாடை அடித்துக் கொண்டே இருக்கும்.

ஒருமுறை எனது சகோதரி தனது ஒரே மகனை இழந்து விட்டார். ஒரே மகனை இழந்த துயரத்தில், அவர் இருந்து கொண்டிருந்த போது, நான் அங்கே இருந்தேன். தொடர்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டும், இருமிக் கொண்டும் இருந்தேன். இதைப் பார்த்து, என்னிடத்தில் வந்த சகோதரி, 'இன்னும் யார் யார் இறப்பதையெல்லாம் பார்க்க நான் உயிரோடு இருக்கிறேனோ என்று தெரியவில்லை' என்று வேதனையுடன் கூறினார். இந்தத் துயரமான வார்த்தைகள் என் மனதை புரட்டிப் போட்டு விட்டது. நான் மிகவும் மோசமானவனாக உணர்ந்தேன். அப்போது, சிகரெட்டை தூக்கி போட்டேன். அன்றைய தினத்தில் அதற்குப் பிறகு சிகரெட் குடிக்கவில்லை. அடுத்த நாளும், குடிக்கவில்லை. ஐந்து நாட்கள் சிகரெட் குடிக்காமல் இருந்து விட்டேன். பின்னர், என் சகோதரியை போனில் அழைத்து, நான் சிகரெட் குடித்து ஐந்து நாட்கள் ஆகி விட்டது என்று கூறினேன். எனது சகோதரி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஒவ்வொரு நாளும் என்னிடத்தில் நானே 'இன்று சிகரெட் குடிக்க கூடாது' என்று கூறிக்கொள்வேன். இப்போது, சிகரெட்டை விட்டு 20 ஆண்டுகள் ஆகி விட்டது. இனியும் சிகரெட் குடிக்க மாட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.

நானா படேகர் இளம் வயதில் இருந்து தனது 56 வயது வரை, சிகரெட் குடித்துக் கொண்டிருந்துள்ளார். தற்போது, அவருக்கு 76 வயதாகிறது.

சிகரெட் பழக்கத்தை விட, எது உதவும்?

ShardaCare-Healthcity-யின் மனநல மருத்துவர் அபிநித் குமார் (Abhinit Kumar) சிகரெட் பழக்கம் பற்றி கூறுகையில், ''நீண்ட காலமாக புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் கூட, சில சமயங்களில் உடனடியாக அந்த பழக்கத்தை நிறுத்தி விட முடியும். நானா படேகர் போன்று நீண்ட காலமாக இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் வீட்டில் ஒரு துயர சம்பவம் நடக்கும் போது, திடீரென அந்தப் பழக்கத்தை நிறுத்திவிடமுடியும். இந்த சமயத்தில் புகைபிடிப்பதை ஆபத்தானதாக மூளை உணர வைக்கிறது. உள்மனதில் அதிக உறுதியுடன் 'நான் புகைப்பதை நிறுத்தியே ஆக வேண்டும் ' என்று அடிக்கடி கூறி ஊக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். 'இன்று நான் புகைக்க மாட்டேன் 'என்று நானா படேகர் அடிக்கடி தனக்குத்தானே கூறி கொண்டதும், சிகரெட் பழக்கத்தைக் கைவிட வைக்கும் முக்கிய முயற்சி ஆகும்'' என்கிறார்.

Puthuyugam
www.puthuyugam.com