இந்தியாவிலுள்ள ஐஐடி நிறுவனங்களின் தர வரிசையில் முதலிடத்தில் இருப்பது மெட்ராஸ் ஐஐடி. 1961ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த உயர்தர தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தென் சென்னையில் 630 ஏக்கர் பரப்பளவிலான அழகான வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 3000 மாணவர்களும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் குடும்பத்தினரும் வசிக்கின்றனர். எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு படிக்கின்றனர்.தொழில்நுட்ப நிறுவனமாக அறியப்பட்ட மெட்ராஸ் ஐஐடி தற்போது வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளது. அதாவது, எம்.பி.பி.எஸ், எம்.டி போன்ற மருத்துவப் படிப்புகளையும் வழங்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி, தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, "நாங்கள் மருத்துவ கல்லூரியை (School of Medical Sciences) தொடங்கி மருத்துவர்களை உருவாக்கப் போகிறோம். இளங்கலை MBBS, முதுகலை( MD) மற்றும் முனைவர்( PhD) பட்டங்களை வழங்க முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே, ஐஐடி மெட்ராசில் இந்தியாவில் முதன்முறையாக மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு, பொறியியலுடன் சேர்ந்து உயிரியல் படிப்பையும் மாணவர்கள் கற்று வருகிறார்கள். இந்தத் துறை மாணவர்கள் மனித உடலையும் இயந்திரங்களையும் நன்கு புரிந்துகொண்ட ஆராய்ச்சியாளர்களாக பிற்காலத்தில் மாறுவார்கள்.
நாங்கள் மட்டுமல்ல, பிற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முன்வர வேண்டும். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில்தான் எனக்குள் இந்த சிந்தனை உதித்தது.
நவீன மருத்துவம் உயர்ந்த தொழில்நுட்பத்தைச் சார்ந்துள்ளது. அத்தகைய, தொழில்நுட்பங்களை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும். உயர்தர மருத்துவ உபகரணங்களை இந்தியா இப்போதும் இறக்குமதிதான் செய்கிறது. சொந்தமாக இயந்திரங்களை வடிவமைக்க விரும்பினால் மருத்துவர்களும் பொறியாளர்களும் ஒரே வளாகத்தில் ஒரே மொழியில் கல்வி பெறுவது அதற்கு உறுதுணையாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
மெட்ராஸ் ஐஐடி இயக்குநர் காமகோடியின் இந்தப் பேட்டி, பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதேவேளையில், இந்தியாவில் மருத்துவக் கல்வி, தேசிய மருத்துவ ஆணையத்தால் (National Medical Commission) மட்டுமே நிர்வாகிக்கப்படுகிறது. இந்த ஆணையம்தான், மருத்துவக் கல்லூரியை யார் நடத்தலாம், MBBS பட்டத்தை யார் வழங்கலாம் என்பதை முடிவு செய்கிறது. ஒரு ஐஐடியால் எடுத்தவுடன் ஒரு மருத்துவக் கல்லூரியை தொடங்கி விட முடியாது. தேசிய மருத்துவ ஆணைய ஆணையத்தின் ஒப்புதலும், பெரிய மருத்துவமனையும் தேவை.
இந்தியாவின் முதல் மற்றும் பழமையான தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி கரக்பூர் மட்டுமே தனக்கென்று சொந்த மருத்துவமனையைக் கட்டியுள்ளது . அங்கு, முதுகலை எம்.டி. படிப்பைத் தொடங்கவும் ஒப்புதல் பெற்றுள்ளது. ஐஐடி காரக்பூரில் எம்.டி. (MD) படிப்பில் 20 இடங்கள் இருக்கிறது. நாட்டின் முதல் ஐஐடி-யை (IIT) அமைப்பதற்காக நிலத்தை நன்கொடையாக வழங்கிய மேற்கு வங்க மாநிலத்தின் முதல் முதலமைச்சர் டாக்டர். பி.சி. ராய் பெயரில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு, எம்.டி படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. எம்.டி. மாணவர்களுக்கான செய்முறைப் பயிற்சி, சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவமனையில் (Superspecialty Hospital) வழங்கப்படுகிறது. இந்த மருத்துவமனை ஐஐடி காரக்பூர் கேம்பசுக்கு சற்று வெளியே அமைந்துள்ளது. அதே சமயம், ஐஐடி காரக்பூரில் இளங்கலை எம்.பி.பி.எஸ். படிப்பை வழங்க இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.
இதனால், ஐஐடி மெட்ராசில் மருத்துபடிப்பு வழங்கப்பட வேண்டுமென்றால், முதலில் பிரமாண்ட மருத்துவமனையைக் கட்ட வேண்டிய அவசியமும் உள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரபல மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த மருத்துவமனைகளில் ஐஐடி மாணவர்கள் மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றி மருத்துவ அறிவையும் பெற்று வருகின்றனர்.