இரண்டாவது மாரடைப்பு... கவனத்தில் கொள்ள வேண்டியவை!

நடிகர் தேவ் ஆனந்தின் மகன் சுனைல் ஆனந்தாவுக்கு முதல் மாரடைப்பு ஏற்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் இரண்டாவது மாரடைப்பு தாக்கியதால் காப்பாற்ற முடியாமல் போனதாக சொல்கிறார்கள்.
dev and sunil anand
dev and sunil anand
Published on

இந்தித் திரையுலகின் ஜாம்பவான் தேவ் ஆனந்த் மற்றும் நடிகை கல்பனா கார்த்திக் தம்பதியின் ஒரே மகனும், திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான சுனைல் ஆனந்தா, லண்டனில் மாரடைப்பு காரணமாக இறந்தார். அமெரிக்காவிலிருந்து லண்டன் வழியாக அவர் இந்தியாவுக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, லண்டனில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆரம்பக்கட்டப் பரிசோதனைக்குப் பிறகு, அவருக்கு 'ஸ்டென்ட்' (stent) பொருத்த மருத்துவர்கள் திட்டமிட்டனர். ஆனால், அதற்கு முன்பே இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டு விட்டது. மருத்துவக் குழுவினர் அவரைக் காப்பாற்றத் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், பலன் இல்லை. கடந்த 2011ம் ஆண்டு தந்தை தேவ் ஆனந்த் இறந்த, அதே லண்டன் மருத்துவமனையில் சுனைல் ஆனந்தாவும் தனது கடைசி மூச்சை நிறுத்தியுள்ளார். சுனைல் ஆனந்தாவின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கனத்த இதயத்துடன் சுனைல் ஆனந்தாவின் மறைவை எங்கள் குடும்பம் துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறது. மக்கள் காட்டும் அன்பு, ஆதரவு எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது; அதற்காக நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1984ம் ஆண்டு தேவ் ஆனந்த் இயக்கிய 'ஆனந்த் ஔர் ஆனந்த்' (Anand Aur Anand) திரைப்படத்தின் மூலம் சுனைல் நடிகராக அறிமுகமானார். 'கார் தீஃப்' (Car Thief), 'மெயின் தேரே லியே' (Main Tere Liye) மற்றும் 'மாஸ்டர்' (Master) ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, சுனைலுக்கு 70 வயதாகிறது. இவர், தனது வாழ்க்கையின் 40 ஆண்டுகளைத் தனது தந்தையுடனேயே கழித்தார். குடும்பத் தயாரிப்பு நிறுவனமான 'நவ்கேதன் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தையும் கவனித்துக் கொண்டார். சுனைல் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் மாரடைப்பு ஏற்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் இரண்டாவது மாரடைப்பு தாக்கியதால் சுனைலைக் காப்பாற்ற முடியாமல் போனதாக லண்டன் மருத்துவமனை மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

ஃபரிதாபாத்தில் உள்ள அம்ரிதா மருத்துவமனையின் மூத்த இதயவியல் நிபுணர் டாக்டர் ஆஷிஷ் குமார் கூறுகையில், 'முதல் மாரடைப்புக்குப் பிறகு இதயம் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். இதயத் தசையின் ஒரு பகுதி நிரந்தரமாக சேதம் அடைந்திருக்கும். இதயம் ஏற்கனவே ஆரோக்கியமான நிலையில் இல்லாததால், இரண்டாவது மாரடைப்பு ஏற்பட்டால் மிக ஆபத்தானதாக அமையலாம். முதல் பாதிப்பின்போதே இதயத் தசையின் ஒரு பகுதி மிகுந்த சேதமடைந்துவிடுகிறது. எனவே, எஞ்சியிருக்கும் ஆரோக்கியமான தசைகளுக்கு, சிறிய அளவிலான அடைப்பு ஏற்பட்டாலும் அதைச் சமாளிப்பதற்கான ஆற்றல் (reserve) குறைவாகவே இருக்கும்" என்கிறார்.

டாக்டர் ஆஷிஷ்குமார் கூறுகையில், ''மாரடைப்பு பற்றிய மிகப்பெரிய தவறான புரிதல்களில் ஒன்று, ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது ஸ்டென்ட் பொருத்தி விட்டால் மாரடைப்பு அபாயம் நிரந்தரமாக நீங்கி விடும் என்பது. ஸ்டென்ட் பொருத்தினால் சுருங்கிய அல்லது அடைபட்ட தமனியைத் திறந்து இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சீர் படுத்த முடியும். அதே வேளையில், ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைபிடித்தல், கொலஸ்ட்ரால் மற்றும் உடல் எடை ஆகியவற்றை கட்டுப்படுத்தாவிட்டால், காலப்போக்கில் புதிய அடைப்புகள் உருவாகலாம். ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டவர்கள், மீண்டும் தோன்றும் அறிகுறிகள் குறித்துக் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்'' என்று அறிவுறுத்தியுள்ளார்.

இராண்டாவது மாரடைப்புக்கான அறிகுறிகள் என்ன?

நெஞ்சு வலி, நெஞ்சில் பாரம், அழுத்தம் அல்லது இறுக்கம் போன்ற உணர்வு

தாடை, கழுத்து, தோள்பட்டை அல்லது கைக்குப் பரவும் வலி

திடீரென ஏற்படும் அல்லது தீவிரமடையும் மூச்சுத்திணறல்

உடலிலிருந்து குளிர்ந்த வியர்வை வெளியேறுதல்

தலைச்சுற்றல் அல்லது மயக்கம் போன்ற உணர்வு ,குமட்டல்

காரணமற்ற அல்லது வழக்கத்திற்கு மாறான சோர்வு

Puthuyugam
www.puthuyugam.com