நவீன காலத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், அழகு கெட்டுவிடுமோ... என்று அச்சப்படும் பெண்களுக்கு மத்தியில் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, தாய்ப்பால் தானத்தில் உலக சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் நடிகர் விஷ்ணு விஷாலும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தத் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது, புகைப்படத்தைப் பகிர்ந்து, 'எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். இன்று எங்களுக்கு நான்காம் ஆண்டு திருமண நாள். அதே நாளில் மகள் பிறந்திருப்பது மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்தும், ஆசீர்வாதமும் தேவை" என்று விஷ்ணு விஷால் குறிப்பிட்டிருந்தார்.
ரசிகர்கள் பலரும் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஹைதராபாத்தில் நடந்த பெயர் சூட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் அமீர்கான், குழந்தைக்கு' மீரா' என்ற பெயரை சூட்டினார். மீரா என்ற பெயருக்கு, 'அளவற்ற அன்பை வழங்குபவள், சமாதானமானவள்' என்று அர்த்தம் என அமீர்கான் விளக்கமளித்திருந்தார். குழந்தை மீரா பிறந்து ஓராண்டு கழித்து, விஷ்ணு விஷாலின் மனைவி ஜூவாலா கட்டாவை மருத்துவ உலகமே வாழ்த்திக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஜுவாலா கட்டா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ''எனக்கு மகள் பிறந்த ஒரு வருடத்தில் 60 லிட்டர் தாய்ப்பாலை சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களிலுள்ள NICU (Neonatal Intensive Care Units) மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக வழங்கியுள்ளேன்.
ஒரு கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கு தினமும் 60 மி.லி. தாய்ப்பால் வழங்கினால் குழந்தையின் உயிர் எளிதாக காப்பாற்றப்பட்டு விடும். பிரசவத்தின் போது, உடலில் ஏற்படும் மாற்றம் காரணமாக பல தாய்மார்கள் உடனடியாக, தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். மேலும், பிரசவ காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம், சத்துக்குறைவான உணவு, நோய்கள், குறைப் பிரவசம் காரணமாகவும் இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் தாமதம் ஏற்படும்.
இந்தச் சூழலில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதை உறுதி செய்வதை நாம் கடமையாகக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில்தான் குழந்தைகளுக்கு தாய்ப்பாலிலுள்ள சத்துக்கள் அதிமாகத் தேவை. நாம் கொடுக்கும் தாய்ப்பால் தானம் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற மருத்துவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். நாம் தானமாக வழங்கும் தாய்ப்பால், குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் உயிர்காக்க அரு மருந்தாக அமைகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அருகிலுள்ள மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களுக்குச் சென்று தாய்ப்பால் தானம் செய்வது குறித்து அறிந்து கொள்ளுங்கள். தாய்ப்பால் தானம் செய்ய இளம் தாய்மார்கள் முன்வருவது நல்லது. விழிப்புணர்வுக்காக மட்டுமே இந்த பதிவு'' என்று தெரிவித்திருந்தார்.
60 லிட்டர் தாய்ப்பால் 600 முதல் 2000 ஆயிரம் குறைப் பிரசவக் குழந்தைகளை காப்பாற்ற உதவும் என்பது குறிப்பித்தக்கது ஜுவாலா கட்டாவின் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை மனதார பாராட்டி வருகின்றனர்.