தற்போது உலகிலேயே அதிக வெப்பமான நாடு எதுவென்று கேட்டால், இந்தியா என்றுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். உலகில் அதிக வெப்பமான நகரங்களில் 95 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளதாகவும் சொல்கிறார்கள். சில நகரங்களில் 45 டிகிரி செல்ஸியஸ், சில நகரங்களில் 40 டிகிரி செல்ஸியஸ் என இந்தியாவில் வெப்பம் பதிவாகியுள்ளது. தென்னிந்தியாவை விட வட இந்தியா அதிகம் கொதிக்கிறது. இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்கி, 28ம் தேதி முடிவடைகிறது. மொத்தம் 24 நாட்கள் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். எனவே, அதிகளவில் தண்ணீர் குடிப்பதுடன் மோர், இளநீர் குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காட்டன் உடைகளை அணிவதும் நல்லது என்கிறார்கள்.
கோடைக் காலத்தில் வெளியே மட்டுமல்ல வீடுகளுக்குள்ளும் வெப்பம் அதிகரிக்கும். குறிப்பாக , வீடுகளில் சமையல் அறைதான் அதிக வெப்பம் கொண்டதாக இருக்கும். கேஸ் எரிவது, நீராவி, நல்ல வெண்டிலேஷன் இல்லாதது, கோடையின் தகிக்கும் வெப்பம் ஆகியவைச் சேர்ந்து சமயல் அறையை மிகுந்தா சூடாக ஆக்கியிருக்கும். வெப்பமான சமையல் அறை , பெண்களுக்கு நீரிழப்பு மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. நல்ல வெண்டிலேஷன் இல்லாத சமையல் அறையில் ஸ்டவ்வின் அருகில் நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பது, உடலுக்கு சோர்வைத் தரக்கூடியது. சூடான சமையலறையில் 30 முதல் 60 நிமிடங்கள் வரை சமைப்பது, வியர்வை மூலம் அதிகப்படியான திரவ இழப்பை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக , வயதான பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களை அறியாமலேயே நீங்கள், மயக்கம் அடையக் கூடும். அதேபோல, உணவும் வேகமாக கெட்டுப் போகக் கூடும். பால், தேங்காய் பயன்படுத்தி சமைக்கும் பொருட்கள் மிக விரைவாகக் கெட்டுவிடலாம். ஏனென்றால், அதிகப்படியான வெப்பம் உணவில் பாக்டீரியாக்கள் துரிதமாக வளரும் சூழலை ஏற்படுத்துகின்றன.
கிச்சன் சூடாக இருப்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?
சமைக்கும்போது தலைசுற்றுவது போன்ற அறிகுறி, சமைக்கும் முன்பே வியர்வை இடைவிடாமல் கொட்டுவது, சமைத்துக் கொண்டிருக்கும்போதே, கொஞ்சம் வெளியே சென்று சற்று காற்றில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது, உணவிலிருந்து வழக்கத்தை விட விரைவாகவே புளித்த வாசனை வீசுவது, சமையல் அறையின் சுவர்களில் ஆவி படிந்து ஈரமாக காணப்படுவது, சாதாரண சமையல் வேலைகளுக்குப் பிறகு நீங்கள் வழக்கத்திற்கு மாறாக சோர்வாக உணர்வது போன்ற காரணிகள் உங்கள் கிச்சன், அதிக வெக்கையின் பிடியில் இருக்கிறது என்று அர்த்தம்.
கிச்சன் சூடாகாமல் தவிர்ப்பது எப்படி?
காலை 11 மணிக்குள் அனைத்து சமையல் வேலைகளையும் முடித்து விட வேண்டும். 12 மணி முதல் 4 மணி வரை கிச்சனில் சமையல் வேலைகள் செய்யாமல் இருப்பது நல்லது. ஜன்னல்களை திறந்து வையுங்கள். EXHAUST FAN - இருந்தால் ஆன்செய்யுங்கள். சமையல் அறையைக் காற்றோட்டமாக வைத்திருங்கள். காலை, இரவு என வெப்பம் குறைவான சமையத்தில் மட்டுமே சமைக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சமைக்கும் போது, நல்ல காட்டன் உடைகளை அணியவும். சாலடுகள், தயிர் சாதம், சாண்ட்விச்கள், பழங்கள், ஓட்ஸ், ஆவியில் வேகவைத்த உணவுகள், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் என சாப்பிடப் பழகிக் கொள்ளலாம். சாதம், குழம்பு, பொரியல், கூட்டு என்று ஏராளமான உணவுகளை சமைப்பதைத் தவிர்ப்பது நல்லது. கிச்சன் என்பது சமைப்பதற்கு மட்டுமன்று, நமது உடல் நலனையும் பாதுகாக்கும் வகையில், முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
எனவே, கிச்சனை கூலாக வைத்து, நீங்களும் கூலாக சமையல் செய்யுங்கள்!