ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளதா என்பதை பெற்றோரால் முடிவு செய்ய முடியாது. மருத்துவர்களால் மட்டுமே கண்டறிய முடியும். ஆட்டிச நிலைக் குழந்தைகளைக் கண்டறிய அறிவியல் பூர்வமான பரிசோதனைகள் உண்டு.
குழந்தைநல மருத்துவர், குழந்தை உளவியல் மருத்துவர், பேச்சுப் பயிற்சியாளர், செயல்திறன் பயிற்றுநர், சிறப்புக் கல்வி நிபுணர் போன்ற நிபுணர் குழு இந்தப் பரிசோதனைகளைச் செய்யும்.
அறிவியல் பூர்வமான வழிகாட்டுதலின்படி இந்தச் செயல்முறை நடத்தப்பட்டு மதிப்பீடுகள் வழங்கப்படும். இதில் குழந்தையின் நடத்தையில் உள்ள மாறுபாடு, குழந்தையின் வளர்ச்சிப் படி நிலையில் உள்ள தாமதம் போன்றவற்றை முதன்மையாகக் கொண்டு பரிசோதனை செய்யப்படும்.
ஆட்டிசம் ஒரு நோய் அல்ல என்பதால் இதற்கு எந்தவொரு இரத்தப் பரிசோதனையோ அல்லது மரபணு சோதனைகளோ அவசியமில்லை.
சிகிச்சை முறைகள்
ஆட்டிசம் ஒரு நோய் அல்ல. அதற்கு மருந்து, மாத்திரைகள் தீர்வு ஆகாது. ஆட்டிச நிலை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுக்கப்படும் தெரபி எனப்படும் பயிற்சிகள் சிறந்த சிகிச்சையாக இருக்கும். ஆட்டிச நிலைக் குழந்தைகளின் அறிவாற்றலையும், அன்றாட வாழ்க்கைத் திறன்களையும் மேம்படுத்தவும், ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட முறையில் தெரபி வழங்கப்பட வேண்டும்.
உளவியல் நிபுணர்கள், பேச்சுக்கான பயிற்றுநர்கள், செயல்திறன் பயிற்றுநர் போன்ற பயிற்றுநர்களைக் கொண்ட நிபுணர் குழுவின் வழிகாட்டுதலுடன் தெரபிகள் வழங்கப்பட வேண்டும்.
எல்லாக் குழந்தைகளைப் போலவே ஆட்டிச குழந்தைகளும் இயல்பான வளர்ச்சியை அடைவார்கள். குழந்தைப் பருவம், வளரிளம் பருவம் என வளர்ச்சிப் படிநிலைகளில் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை கவனத்தில் கொண்டு தனிப்பட்ட முறையில் தெரபி வழங்கப்பட வேண்டும்.
தெரபியை எந்த நிலையிலும் இடையில் நிறுத்தக் கூடாது. பெற்றோர்கள் பயிற்சியாளர்களிடம் முறையாக ஆலோசனை பெற்று வீட்டிலும் குழந்தைகளுக்கான பயிற்சியை தொடர்ந்து வழங்கலாம். ஆனால், தொடர்ந்து நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பெறுவதில் கால தாமதம் செய்யக் கூடாது.
பெற்றோர்களுக்கான குறிப்புகள்
சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களே...
● குழந்தைகளின் ஆட்டிச அறிகுறிகளை கவனியுங்கள்.
● வளர்ச்சிப் படிநிலைகளை அறிந்து கொள்ளுங்கள்.
● குற்றவுணர்ச்சிக்குச் செல்லாதீர்கள்.
● ஆட்டிசம் பற்றி வெளிப்படையாகப் பேசுங்கள்.
● உங்கள் குழந்தையை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
● அன்றாட வாழ்க்கைக்கான செயல்பாடுகளை கற்றுக்கொடுங்கள்.
● தினசரி திட்டத்தை உருவாக்குங்கள்.
● குழந்தையின் சிறு செயலின் முன்னேற்றத்தையும் கொண்டாடுங்கள்.
● அருகில் உள்ள பூங்கா போன்ற வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுங்கள்.
● குழந்தைகளைப் பற்றி விரிவாக பதிவு செய்து ஆவணப்படுத்துங்கள்.
● திரை நேரத்தை கட்டுப்பட்டுத்துங்கள்.
● குழந்தைகளுடன் பயணம் செய்ய தயங்காதீர்கள். முறையான பாதுகாப்புடன் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.
● வளர்ச்சி நிலையில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
● உங்கள் குழந்தைகளை பிறருடன் ஒப்பிடாதீர்கள்.
● உங்களுக்கென தனியே நேரம் ஒதுக்குங்கள்.