'4 ஆண்டுகளில் 38 கிலோ எடை குறைத்தேன்!'- ரகசியம் பகிர்ந்த குஷ்பூ

குளூட்டன் நிறைந்த உணவுகளை தவிர்த்ததால், எடை வெகுவாக குறைந்ததாக நடிகை குஷ்பூ கூறியுள்ளார். குளூட்டன் என்றால் என்ன?
'4 ஆண்டுகளில் 38 கிலோ எடை குறைத்தேன்!'- ரகசியம் பகிர்ந்த குஷ்பூ
acress khushboo
Published on

நடிகை குஷ்பூ தமிழ்ப்படங்களில் கோலோச்சிய காலக்கட்டத்தில், உடல்வாகுள்ள நடிகைகளுக்குத்தான் மார்க்கெட் அதிகம். அப்படி இருந்த காரணத்தினால், 'வருஷம் 16 'படத்தில் அறிமுகமான நடிகை குஷ்பூ, தமிழ் ரசிகர்கள் மனதில் எளிதாக இடம் பிடித்து விட்டார். கோயில் கட்டுமளவுக்கு பாப்புலராகவும் ஆனார். மகராஷ்டிரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இயக்குநர் சுந்தர் சி.யை திருமணம் செய்து தமிழகத்திலேயே நிரந்தரமாக செட்டிலாகி விட்டார். தமிழக அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளளார்.

ஆனால், நடிகை குஷ்பூ தற்போது, மிகவும் மெலிந்து ஸ்லிம்மாக மாறியுள்ளதுதான் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சர்க்கரை வியாதி காரணமாக அவர் உடல் எடை மெலிந்து காணப்படுவதாக கூறி வந்தனர். இந்த நிலையில், தனது உடலமைப்பில் ஏற்பட்ட மாற்றம் குறித்து நடிகை குஷ்பூ மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ''உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ற வகையில் உடல் எடையை பராமரிப்பது அவசியம். தற்போது, எனக்கு 55 வயதாகிறது. ஆனால், சர்க்கரை நோயோ அல்லது ரத்த அழுத்தமோ எனக்கு கிடையாது. எனது , தாயாருக்கு சர்க்கரை நோய் இருந்தது. ஆனால், எனக்கு இல்லை. 'அண்ணாத்தே' படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த போது, நான் 98 கிலோ எடை இருந்தேன். எனது முகத்தை கண்ணாடியில் பார்த்தால் கூட பயமாக இருக்கும். கடுமையான மூட்டு வலி இருந்தது. இதனால், மாடிப்படி ஏறுவது, நடப்பது கூட சிரமமாக இருந்தது. இந்த சமயத்தில் எனது டாக்டர் , 'நீங்கள் எடையைக் குறைந்தால் மட்டுமே மூட்டு வலியில் இருந்து தப்பிக்க முடியும். அதோடு , வருங்காலத்தில் சர்க்கரை நோயும் வராது' என்று அறிவுரை கூறினார்.

கோவிட் காலத்தில்தான் எனது எடை குறைப்புப் பயணம் தொடங்கியது. எனது மகளும் என்னுடன் சேர்ந்துக் கொண்டார். குளூட்டன் (Gluten) நிறைந்த உணவுகளை தவிர்த்தோம். தீவிர உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடித்தோம். கடந்த 4 ஆண்டுகளில் 38 கிலோ எடையை குறைத்துள்ளேன். இப்போது , முற்றிலும் எடை குறைந்து எனது வயதுக்கேற்ற உருவத்துக்கு மாறியுள்ளேன். மிகவும் ஆரோக்கியமாக உள்ளேன். இப்போதும், என்னை ரசிகர்கள் விரும்புகின்றனர் '' என்று தெரிவித்துள்ளார்.

parotta
parotta AI image

குளூட்டன் என்றால் என்ன?

கோதுமை , மைதா மாவைப் பிசையும்போது அதற்கு நெகிழ்வுத்தன்மையையும் ஒட்டும் தன்மையையும் தருவதுதான் குளூட்டன். இது உணவுக்கு ஒரு நிலையான வடிவத்தைத் தருகிறது. உதாரணமாக, பரோட்டா , சப்பாத்தி போன்ற உணவுகள் மென்மையாக இழுபடும் தன்மைக்கு இந்த குளூட்டன்தான் காரணம்.ரொட்டி தயாரிக்கும்போது, மாவு உப்பி வருவதற்கு இது உதவுகிறது.பெரும்பாலான மக்களுக்கு குளூட்டன் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், சிலருக்கு குளூட்டன் சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசம், வயிற்று வலி அல்லது செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். கோதுமையில் உள்ள புரதமும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். நீங்கள் குளூட்டனைத் தவிர்க்க விரும்பினால், கோதுமைக்கு மாற்றாக அரிசி, சோளம், கம்பு, ராகி மற்றும் தினை வகை தானியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு செரிமானப் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது குளூட்டன் இல்லாத உணவுக்கு மாற விரும்பினாலோ, ஊட்டச்சத்து நிபுணரை அணுகி ஆலோசனை கேட்பது நல்லது.

அதேவேளையில், Cleveland Clinic தரும் அறிவுரையின்படி, '' குளூட்டன் இல்லாத உணவைச் சாப்பிட்டால் மட்டுமே எடை குறைந்து விடும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. நீங்கள் எடை குறைக்கும் நோக்கில் குளூட்டனைத் தவிர்க்க விரும்பினால், 'குளூட்டன்-ஃப்ரீ' என்று லேபிள் ஒட்டப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதை விட, இயற்கையாகவே குளூட்டன் இல்லாத சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. ஏனென்றால், 'குளூட்டன்-ஃப்ரீ' உணவுகளில் சுவைக்காக அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்க்கப்பட்டிருக்கும்'' என்று கூறுகிறது.

Puthuyugam
www.puthuyugam.com