பிரியாணிக்காக ஃப்ளைட்டைத் தவறவிட்ட 'பிரியாணி மேன்' ஒசாவா!

கடந்த ஜனவரியில், ஒசாவாவுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம் சரணின் குடும்பத்தினருக்காகச் சுவையான பிரியாணியைச் சமைக்க ஜப்பானில் இருந்து ஹைதரபாத் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
Takamasa Osawa
Takamasa Osawa
Published on

ஜப்பானைச் சேர்ந்த ஒரு மனிதருக்கு சில மசாலாப் பொருட்கள், தரமான அரிசி கொடுத்தால் சில நிமிடங்களில் உங்களுக்கு ஒரு அருமையான பிரியாணியை சமைத்து கொடுத்து அசத்தி விடுவார். அந்த மனிதர் தகமாசா ஒசாவா (Takamasa Osawa) அல்லது ‘பிரியாணி ஒசாவா’ என்று டோக்கியோ நகரில் பரவலாக அறியப்படுபவர். இவர், தனது வாழ்க்கையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய வகைப் பிரியாணியை மட்டுமே தயாரித்து மக்களுக்கு பரிமாறியிருக்கிறார். இவரது உணவகம், டோக்கியோவில் நியாயமான விலையில் தரமான உணவை வழங்கும் உணவகங்களுக்கு Michelin Gourmand Bib விருதையும் பெற்றுள்ளது. இவரது ரெஸ்டாரன்டில் 10 இருக்கைகள் மட்டுமே இருக்கும். அந்தளவுக்கு எளிமையான ரெஸடாரன்ட் அது.

விருது பெற்றதையடுத்து, தகமாசா ஒசாவா இந்தியாவிலும் பிரபலமானார். கடந்த ஜனவரியில், ஒசாவாவுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம் சரணின் குடும்பத்தினருக்காகச் சுவையான பிரியாணியைச் சமைக்க ஜப்பானில் இருந்து ஹைதரபாத் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவரின் கை வண்ணத்தில் தயாரான பிரியாணியை ருசி பார்த்து ராம்சரணின் குடும்பத்தினர் அசந்து போனார்கள். ராம் சரண் அந்த பிரியாணியை சாப்பிட்டு விட்டு, ''சுவை மற்றும் மணம் மிகச் சிறப்பாக இருந்ததாகவும், கிரேவியின் கலவை அற்புதமாக இருந்ததாகவும் கூறினார். கருப்பு உடை அணிந்தபடி ஒசாவா சமையல் செய்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. பிரியாணி சமைப்பதில் அவருக்குள்ள தனி பாணிதான், ஒசாவாவை இந்தியாவிலும் பாப்புலராக்கியுள்ளது.

சுவையான பிரியாணியை சமைக்கும் ரகசியத்தை அறியும் முயற்சியில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் முழுவதும் பல நகரங்களுக்கு ஒசாவா பயணம் செய்துள்ளார். இதில் ஹைதராபாத் அவருக்கு ஒரு முக்கியமான நகரம். இந்த நரகத்தில்தான் இந்திய பாணியிலான பிரியாணியைத் தயாரிப்பதில் இந்திய சமையல் கலைஞர்களைப் போலவே, அனைத்து நுணுக்கங்களையும் கற்றுள்ளார்.

Takamasa Osawa served biryani to ramcharan family
Takamasa Osawa served biryani to ramcharan family

பிரியாணி மீதான காதலை ஒசாவா விவரிக்கும் போது, '' ஜப்பான் நாட்டில் ஒரு உயிரி எரிபொருள் நிறுவனத்தில் பணியாற்றினேன். கடந்த 2009-ம் ஆண்டு கோவை நகருக்கு சுற்றுலா வந்தேன். அப்போது, அங்குள்ள உணவகத்தில் 'அரிசி உணவு ஏதாவது உள்ளதா?' என்று கேட்டேன். ஏனென்றால், ஜப்பானியர்களுக்கு அரிசி உணவு பிடித்தமான ஒன்று. இதையடுத்து, மசாலா கலந்த அரிசி உணவை எனக்குத் தந்தனர். அப்போதுதான், வாழ்க்கையில் முதன்முறையாக பிரியாணியை சுவை பார்த்தேன். அந்தச் சுவைக்கு அடிமையாகிப் போனேன். அதன் பிறகு என்னால் பிரியாணி சாப்பிடுவதை நிறுத்தவே முடியவில்லை. சென்ற இடமெல்லாம் பிரியாணி ஆர்டர் செய்வேன். அழுக்கான தெருவாக இருந்தாலும் சரி... ஆடம்பரமான உணவகமாக இருந்தாலும் சரி... இடம் எனக்கு பொருட்டல்ல!

கோவை, ஹைதரபாத் நகரங்கள், பாகிஸ்தானில் பல நகரங்கள், வங்கதேசத்தில் பல நகரங்களுக்குச் சென்று பிரியாணியை வித விதமாக சமைக்கும் கலையை கற்றேன். பின்னர், 2021ம் ஆண்டு டோக்கியோவில் உணவகத்தைத் தொடங்கினேன். அதற்கு, 'பிரியாணி ஒசோவா ' (Biriyani Osawa) என்று பெயர் சூட்டினேன்.10 பேர் மட்டுமே அமர்ந்து இங்கு சாப்பிட முடியும். எனது கை வண்ணத்தில் தயாராகும் பிரியாணியை மக்கள் விரும்பி உண்டனர். இந்திய வாடிக்கையாளர்களும் குவிந்தனர். ஜப்பானியர்களும் பிரியாணி சுவையில் மயங்கிப் போனார்கள்.

எனது நண்பர் ஒருவர் ஜப்பானின் மிகச்சிறந்த சுஷி சமையல்கலைஞர் (Sushi Chef ). அவர், 35 ஆண்டு காலம் சுஷி மட்டுமே சமைக்கிறார். அவரது பாணியை பின்பற்றியே நான் பிரியாணியை மட்டுமே 15 ஆண்டுகள் சமைக்கிறேன். ஆனால், நேற்றை விட இன்று ஒரு மில்லி மீட்டராக சுவையை அதிகரிக்கப் பாடுபடுகிறேன். பலவிதமான உணவுகளைச் சமைப்பதன் மூலம் மிகச்சிறந்த உணவு கிடைத்துவிடுவதில்லை. மாறாக, ஒரே ஒரு உணவைச் சமைக்கும் போது சுவையை ஒவ்வொரு நாளும் மேம்படுத்துவதில்தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது.

சாலையோரம் பிரியாணி சமைப்பவர்களைத்தான் நான் மிகவும் மதிக்கிறேன். அவர்கள் வெளிச்சத்தை விரும்புவதில்லை. அமைதியாக தங்கள் வேலையைச் செய்கிறார்கள். கோவையில் நான் சாப்பிட்ட அந்த முதல் தட்டு பிரியாணிதான் என் வாழ்க்கையையே மாற்றியது. அந்த தெருவோர பிரியாணி சமையல் கலைஞர்தான் எனது உண்மையான குரு.

பல ஆண்டுகளாக லாகூர் பிரியாணிதான் எனக்கு பிடித்திருந்தது. இப்போது , ஹைதராபாத் பிரியாணிக்கு மயங்கி கிடக்கிறேன். கொல்கத்தா, பழைய டெல்லியின் காரமான பிரியாணியும் எனக்கும் மிகவும் பிடிக்கும். ஒருமுறை மஹிபால்பூரில் உள்ளூர் பிரியாணியைச் சாப்பிடச் சென்றதால், டெல்லியில் இருந்து ஜப்பான் செல்லும் விமானத்தை தவறவிட்ட சம்பவமும் நடந்தது உண்டு. ஏனென்றால், பிரியாணிதான் என் வாழ்க்கையுடன் கலந்து விட்ட விஷயம் '' என்கிறார்.

Puthuyugam
www.puthuyugam.com