அமிதாப்பச்சன் சோறு சாப்பிடுவதை நிறுத்தினாரா?

வயதாகும்போது உணவிலிருந்து அரிசிச்சோற்றை நீக்குவது அவசியமான ஒன்றல்ல. மக்கள் ஆரோக்கியமாகச் சாப்பிடமுயற்சிக்கும்போது, ​​பெரும்பாலும் முதலில் தவிர்க்கப்படும் உணவுப் பொருள் அரிசியாகத்தான் இருக்கிறது.
அமிதாப்பச்சன் சோறு சாப்பிடுவதை நிறுத்தினாரா?
Welco
Published on

வயதாகும்போது சோறு சாப்பிடுவதை நிறுத்துவது ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கமில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு தற்போது 83 வயதாகிறது. சமீபத்தில் 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் போது, வயதாகி விட்டதால், தான் சோறு சாப்பிடுவதையும், பாயாசம் சாப்பிடுவதையும் தவிர்த்துவிட்டதாக அமிதாப்பச்சன் தெரிவித்திருந்தார். அமிதாப்பின் இந்த முடிவு ஒரு தனிப்பட்ட விஷயமாக இருக்கலாம். ஆனால், வயதாகும்போது சோறு சாப்பிடுவதை நிறுத்துவது உண்மையில் ஆரோக்கியமானதா?

இது குறித்து ஃபரிதாபாத்தில் உள்ள அம்ரிதா மருத்துவமனையின் நாளமில்லாச் சுரப்பித் துறை (Endocrinology) தலைவர் டாக்டர் நிஷாந்த் ரைசாடாவின் (Nishant Raizada) கூறுகையில், ''வயதாகும்போது உணவிலிருந்து சோற்றை நீக்குவது அவசியமான ஒன்றல்ல. மக்கள் ஆரோக்கியமாகச் சாப்பிட முயற்சிக்கும்போது, ​​பெரும்பாலும் முதலில் தவிர்க்கப்படும் உணவுப் பொருள் அரிசிச்சோறாகத்தான் இருக்கிறது. தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே அமிதாப்பச்சன் சோறூ சாப்பிடுவதை நிறுத்தியதாகத் தெரிகிறது. எனவே, இது முதியவர்களுக்கான உணவு பரிந்துரையாக எடுத்துக் கொள்ள முடியாது.

வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. விரைவாகச் செரிமானம் அடைகிறது. போதுமான அளவு புரதம், நார்ச்சத்து அல்லது காய்கறிகள் இல்லாமல் வெறும் அரிசி உணவை மட்டும் அதிக அளவில் உட்கொள்ளும்போது, ​​அது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிக்கக்கூடும். அதிக அளவில் வெள்ளை அரிசியை உட்கொள்வதற்கும், இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 diabetes) ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேவேளையில், அரிசி சாப்பிடுவது நேரடியாக நீரிழிவு நோயை உண்டாக்குகிறது என்று அர்த்தமல்ல. ஒட்டுமொத்த உணவுமுறை, உணவின் அளவு, உடற்பயிற்சி, உடல் எடை ஆகிய அனைத்தும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

வயதாவதால் உடலின் ஊட்டச்சத்துத் தேவைகள் மாறுகின்றன. இன்சுலின் குறையலாம், பசி மாறக்கூடும். உடலின் தசையின் அளவு இயற்கையாகவே குறைகிறது. இதனால், அரிசிக்கு மாற்றாக என்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. அரிசியிலிருந்து கிடைக்கும் கலோரிகளை பிற உணவுகள் ஈடுசெய்யாவிட்டால், அது ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுத்து விடும். எனவே, வயதானவர்களுக்கு, அதிகப்படியான உணவுக் கட்டுப்பாடு எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். தசை இழப்பு, சமநிலை, நடமாடும் திறன், உடல் வலிமை ஆகியவை குறைந்து விட வாய்ப்புள்ளது.

அரிசியின் அளவைக் குறைப்பதன் மூலம் கொஞ்சம் பயனடையலாம். ஆனால், மாவுச்சத்துக்களை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லதல்ல. சிறுதானியங்கள், ஓட்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றை உட்கொள்ளலாம் அல்லது மாற்றி மாற்றி உண்ணலாம். சோறு உண்ணும் விதமும் முக்கியமானது. தனியாக உண்ணப்படும் ஒரு பெரிய கிண்ணம் வெள்ளை சாதத்துக்கும் பருப்பு, காய்கறிகள், தயிர் ஆகியவற்றுடன் உண்ணப்படும் சாதத்துக்கும் ஊட்டச்சத்து ரீதியாகப் பெரும் வித்தியாசம் உண்டு. மாவுச்சத்து உணவுகளை புரதம் மற்றும் நார்ச்சத்துடன் சேர்த்து சாப்பிடுவது உணவை சமச்சீரானதாக மாற்றுவதோடு, ரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாட்டிற்கும் உதவக்கூடும்.

முதியவர்கள் தங்கள் உடல்நலத் தேவைகளுக்கு ஏற்ப கார்போஹைட்ரேட் உணவை தேர்வு செய்து, போதுமான அளவு புரதம், காய்கறிகள், பழங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றோடு உண்ணலாம். சிலருக்கு, அரிசி உட்கொள்ளும் அளவைக் குறைப்பது பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால், ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது தசை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளவர்களுக்கு ஒரு முக்கிய உணவை முழுமையாகத் தவிர்ப்பது நல்லதல்ல. முக்கிய உணவுகளை முழுமையாக நீக்குவதற்குப் பதிலாக, பல சத்துகள் கலவையான உணவை உண்ண வேண்டும். எனவே, வயதாகிவிட்டால், அரிசி உணவை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை'' என்கிறார்.

தவிரவும் மிக முக்கியமாக, எந்த உணவுப்பழக்கத்தை நிறுத்தும் முன் அதற்குரிய முறையான மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம். தனிப்பட்ட ஒவ்வொருவரின் உடல் நிலை, பழக்கவழக்கங்களை ஆராய்ந்து மருத்துவர்கள் ஆலோசனை சொல்லக்கூடும். எனவே அதுதான் மிக அவசியமும் முக்கியமானதும் ஆகும்.

Puthuyugam
www.puthuyugam.com