கிட்டத்தட்ட 140 ஆண்டுகளுக்கு மேலாக கோகோ-கோலா நிறுவனம் உலகின் மிகப்பெரிய வர்த்தக ரகசியங்களில் ஒன்றான, கோக் குளிர்பானத்தின் ஃபார்முலாவை பத்திரமாகப் பாதுகாத்து வைத்துள்ளது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் பீட்சா, பர்கர், சாண்ட்விச் உள்ளிட்ட பல துரித உணவு வகைகளுடன் சேர்ந்து கோக்கையும் குடிக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகவும் கோக் கருதப்படுகிறது.
பல ஆண்டுகளாக ஏராளமானோர், இந்தக் குளிர்பானத்தின் உண்மையான மூலப்பொருட்களைக் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். ஆனாலும், முடியவில்லை. கோக் நிறுவனம் உண்மையான மூலப் பொருளின் ஃபார்முலாவை மிகவும் பாதுகாப்பாக ஒரு பெட்டகத்தில் பூட்டி வைத்துள்ளது. இப்போது, மக்கள் அந்த மர்மத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பை கோக் நிறுவனமே உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள அட்லாண்டாவில்தான் கோக் நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது. இங்குள்ள 'வேர்ல்ட் ஆஃப் கோகோ-கோலா' (World of Coca-Cola) மியூசியத்துக்கு வரும் பார்வையாளர்கள், 'தி வால்ட் ஆஃப் தி சீக்ரெட் ஃபார்முலா' (The Vault of the Secret Formula) என்கிற கண்காட்சியின் வழியாக கோக் பிராண்டின் புகழ்பெற்ற ரகசிய செய்முறையைக் கொஞ்சம் அறிந்து கொள்ள முடியும்.
கடந்த 1886-ம் ஆண்டில் டாக்டர் ஜான் எஸ். பெம்பெர்டன் (Dr John S Pemberton) என்பவர்தான் கோகோ-கோலாவின் பார்முலாவை கண்டுபிடித்தார். நிறுவனமாகப் பதிவு செய்து குளிர்பானத்தை விற்கத் தொடங்கினார். அப்போதிருந்து கோக்கின் தயாரிப்பு முறையை ரகசியமாக வைத்திருக்க அந்த நிறுவனம் மிகவும் மெனக்கெட்டது. ஒரு சிலருக்கு மட்டுமே அந்த ரகசியக் கலவை முறை தெரிந்திருந்தது. ஆரம்பத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவும் இல்லை.
கடந்த 1892-ம் ஆண்டு ஆசா கேண்ட்லர் (Asa Candler) என்பவர் கோகோ கோலா நிறுவனத்தை வாங்கினார். பின்னர்,1919- ம் ஆண்டு ஏர்னஸ்ட் வுட்ரஃப் (Ernest Woodruff ) மற்றும் சில முதலீட்டாளர்கள் இணைந்து கேண்ட்லரின் குடும்பத்திடமிருந்து கோக் நிறுவனத்தை விலைக்கு வாங்கினர்.
இதற்காகக் கடன் வாங்கப்பட்டது. அப்போதுதான், முதன்முறையாக கோக் பானத்தின் தயாரிப்பு ரகசியத்தை பேப்பரில் எழுதி ஆவணமாக்கினார்கள். பின்னர், இந்த ஆவணத்தைப் பிணையாக வைத்து நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த வங்கி ஒன்றில், கடன் வாங்கினார்கள்.தொடர்ந்து, அந்த ஆவணம் நியூயார்க்கில் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
1925- ம் ஆண்டு கடன் திருப்பிச் செலுத்தப்பட்ட பிறகு, வுட்ரஃப் அந்த ரகசியக் கலவைக் குறிப்பை அட்லாண்டாவிற்குக் கொண்டு சென்றார். அந்தக் குறிப்பு அங்குள்ள, மற்றொரு வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 86 ஆண்டுகள் இருந்தது. தற்போது, அந்த ரகசியக் குறிப்பு அட்லாண்டாவிலுள்ள 'வேர்ல்ட் ஆஃப் கோகோ-கோலா' அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது இங்கு, கோக்கின் செய்முறையைப் பார்வையாளர்கள் கொஞ்சம் அறிந்து கொள்ள முடியும். எனினும், கோகோ-கோலாவின் உண்மையான செய்முறை ரகசியம் முழுவதுமான வெளியிடப்படவில்லை. எனினும், அந்த பானம் தனது தனித்துவமான சுவையை எப்படிப் பெறுகிறது என்பதைப் பார்வையாளர்கள் அறிந்து கொள்ளலாம். இங்கு, 'விர்ச்சுவல் டேஸ்ட் மேக்கர்' (Virtual Taste Maker) வசதியைப் பயன்படுத்தி, மக்கள் தங்களுக்கேற்ற சுவையைக் கூட உருவாக்கி மகிழலாம். இந்தக் கண்காட்சியில் கோகோ கோலாவின் செய்முறை பற்றிய புனை கதைகளையும் அறிந்து கொள்ள முடியும்.
கடந்த 2005ம் ஆண்டு 'வேர்ல்ட் ஆஃப் கோகோ-கோலா' அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. தற்போது வரை 50 லட்சம் மக்கள் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுள்ளனர்.