சால்மன் மீன், மாட்டு இதயம்... தினசரி 6 ஆயிரம் கலோரி சாப்பிடும் ஹாலண்ட்!

580 கிலோ உணவுப் பொருட்கள் நார்வே அணி வீரர்களுக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. அவற்றில், 300 கிலோ நார்வே சால்மன் மற்றும் ட்ரவுட் மீன்,100 கிலோ ஹாலிபட் மீன், 80 கிலோ நார்வே பிரவுன் சீஸ் மற்றும் 100 கிலோ ஜார்ல்ஸ்பெர்க் சீஸ் ஆகியவை அடங்கும்.
சால்மன் மீன், மாட்டு இதயம்... தினசரி 6 ஆயிரம் கலோரி சாப்பிடும் ஹாலண்ட்!
Published on

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தங்கக் காலணியை வெல்லும் ரேஸில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி 8 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். பிரான்சின் கிலியன் எம்பாப்பே மற்றும் நார்வேயின் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) தலா 7 கோல்களுடன் மெஸ்ஸியைத் துரத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் எர்லிங் ஹாலண்ட் மான்செஸ்டர் சிட்டியின் (Manchester City) இளம் வீரர். வேறு எந்த உலகக் கோப்பையைக் காட்டிலும், நடப்பு உலகக் கோப்பையில் நார்வே அணி அட்டகாசமாக விளையாட முக்கிய காரணமாக இருப்பவர். ஐந்து முறை சாம்பியன் பிரேசில் அணியை சிம்பிளாக வீட்டுக்கு அனுப்பியதே , நார்வே அணியின் அபார ஆட்டத்துக்கு எடுத்துக்காட்டு. இதற்கு, முழுமுதற் காரணமும் எர்லிங் ஹாலண்ட் என்பதுதான் உண்மை. இந்த எர்லிங் ஹாலண்ட்டின் உடல் தகுதியும், அவரின் உணவு முறைகளும் இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது.

பொதுவாக, நார்வே நாட்டினர் மிகுந்த சத்தான, சுவையான.. சுத்தமான உணவை உண்ணும் பழக்கமுடையவர்கள். அமெரிக்காவின் உணவுத் தரத்தின் மீது கூட நம்பிக்கை இல்லாமல் தங்கள் சொந்த நாட்டிலிருந்து மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கையோடு எடுத்து வந்துள்ளனர்.

மொத்தம் 580 கிலோ உணவுப் பொருட்கள் அமெரிக்காவுக்கு, நார்வே அணி வீரர்களுக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. அவற்றில், 300 கிலோ நார்வே சால்மன் மற்றும் ட்ரவுட் மீன்,100 கிலோ ஹாலிபட் மீன், 80 கிலோ நார்வே பிரவுன் சீஸ் மற்றும் 100 கிலோ ஜார்ல்ஸ்பெர்க் சீஸ் ஆகியவை அடங்கும். மேலும், தேவைப்பட்டால், நார்வேயிலிருந்து உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

இந்த போட்டித் தொடருக்காக நார்வே அணியினர் வட கரோலினாவில் கிரீன்ஸ்பாரோ (Greensborough) முகாமில் தங்கியுள்ளனர். இங்கு, நார்வே அணியின் தலைமை சமையல் நிபுணர் ஆரோன் எஸ்பெலாண்ட் (Aron Espeland) தலைமையில் சமையல் குழுவினர், தங்கள் வீரர்களுக்கு நன்கு பரிச்சயமான உணவினை சொந்த நாட்டுச் சுவையுடன் சமைத்து வழங்குகின்றனர். மீன் உள்ளிட்டவற்றைத் தங்கள் நாட்டில் இருந்தே கொண்டு வந்தாலும், மற்ற மூலப்பொருட்களை உள்ளூரிலேயே வாங்குவதாகவும், இதற்கும் அமெரிக்க உணவு தரத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் ஆரோன் எஸ்பெலாண்ட் கூறியுள்ளார்.

நார்வே அணி வீரர்களில் ஹாலண்ட் வித்தியாசமான உணவுப்பழக்கத்தைக் கொண்டிருக்கிறார். அவர் கேட்கும் உணவை அட்டகாசமான ருசியுடன் நார்வே சமையல் குழுவினர் தயாரித்து வழங்குகின்றனர்.

அதிரடியான வேகம், வலிமை மற்றும் கோல் அடிக்கும் திறன் நிறைந்த எர்லிங் ஹாலண்டுடன் ஒப்பிடும் வகையில், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ஒரு சில வீரர்களே உள்ளனர். இவர் களத்தில் காட்டும் ஆட்டத்திறனுக்காக மட்டுமல்லாமல் ஊட்டச்சத்துமிக்க உணவைச் சாப்பிடுவதன் மூலமாகவும் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாகவுள்ளார்.

ஆண்களுக்குத் தினசரி சராசரியாக 2,500 கலோரி உணவு போதுமானது. ஆனால், தினசரி 6,000 கலோரி உணவை ஹாலண்ட் எடுத்துக் கொள்கிறார். உடல்திறன் தேவை காரணமாக, அவரது தினசரி கலோரி உட்கொள்ளல் சராசரி ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாகவுள்ளது.

புரதச்சத்து நிறைந்த உணவு, ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவு மற்றும் தரமான கொழுப்புச் சத்து மிகுந்த உணவினைத் தினமும் எடுத்துக் கொள்கிறார். மீன், முட்டை, தண்ணீர் கலக்காத பால் மற்றும் பசுவின் இதயம் மற்றும் ஈரல் போன்றவை ஹாலண்டின் தினசரி உணவுப்பட்டியலில் உள்ளது. இந்திய உணவுகளையும் ஹாலண்ட் விட்டு வைப்பதில்லை. இந்திய உணவுகளில் 'லேம்ப் சாப்ஸ்' இளம்ஆட்டிறைச்சி மற்றும் 'பட்டர் சிக்கன்' 'கார்லிக் நான்' ஆகியவை ஹாலண்டுக்குப் பிடித்தமானவை.

இவை தவிர, பால், கீரை மற்றும் முட்டைக்கோஸ் கலந்த சூப் ஒன்றையும் தினமும் அருந்துகிறார். இந்த உணவுகள் அனைவருக்கும் பிடித்தமானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், சமச்சீர் உணவின் பகுதியாகச் சேர்க்கப்படும்போது மிகவும் சத்தானதாக மாறி விடுகிறது. உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை ஹாலண்ட் வழக்கமாகக் கொண்டுள்ளார். இது, உடல் வெப்பநிலையைச் சீராக்கவும் செயல்திறனைப் பராமரிக்கவும் உதவிகரமாக அமைகிறது.

யார் இந்த ஹாலண்ட் ?

1997-ம் ஆண்டு காலக்கட்டத்தில், நார்வே அணியின் பின்கள வீரரான ஏல்ஃப் இங்கே ஹாலண்ட் ( Alf-Inge Haaland) ரொனால்டோ, ரொமாரியோ, ரொபெர்டோ கார்லோஸ் .பெபிடோ போன்ற நட்சத்திர வீரர்கள் அடங்கிய பிரேசில் அணியை எதிர்த்து விளையாடியவர். ஏல்ஃப் இங்கே ஹாலண்டுக்கு பிறந்தவர்தான் இந்த எர்லிங் ஹாலண்ட். சிறு வயதில் இருந்தே தந்தையிடம் கால்பந்தின் நுணுக்கங்களைக் கற்றறிந்தார். அப்போதிருந்தே, தொழில்முறை கால்பந்தாட்ட வீரரைப் போலவே உணவு, உறக்கத்தைக் கடைப்பிடிப்பார். கால்பந்துப் பயிற்சியில் முழுக் கட்டுப்பாட்டுடன் ஈடுபட்டார்.

கடந்த 2019ம் ஆண்டு முதல் நார்வே அணிக்காக 62 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 54 கோல்களையும் எர்லிங் ஹாலண்ட் அடித்துள்ளார். உலகக் கோப்பைத் தொடரில் 1998ம் ஆண்டு தந்தை ஆடிய நார்வேயிடமும் பிரேசில் தோற்றது. 2026ம் ஆண்டு தனயன் ஆடிய நார்வேயிடமும் பிரேசில் தோற்றோடியது. நட்பு ஆட்டத்திலும் பிரேசிலிடம் நார்வே தோல்வி கண்டதே கிடையாது. ஐந்து முறை உலகச் சாம்பியனுக்கு நார்வேயிடம் இப்படி ஒரு வரலாறு!

Puthuyugam
www.puthuyugam.com