மும்பை டப்பாவாலாக்கள் விடுப்பு... என்ன காரணம் தெரியுமா?

மும்பையில் டப்பாவாலாக்கள் 6 நாள்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். எரிவாயு தட்டுப்பாடு காரணமா?
dabbawala in mumbai
dabbawala in mumbai wikipedia
Published on

மும்பை டப்பாவாலாக்கள் உழைப்புக்கும், நேர்மைக்கும் நேரம் தவறாமைக்கும் பெயர் போனவர்கள். மும்பையில் பணிபுரியும் லட்சக்கணக்கான அலுவலக ஊழியர்களுக்கு, அவர்களின் வீடுகளிலிருந்து மதிய உணவைச் சேகரித்து மிகச் சரியாகக் கொண்டு சேர்ப்பவர்கள் டப்பாவாலாக்கள். மும்பையில் மட்டும் 5,000 டப்பாவாலாக்கள் பணியில் உள்ளனர். பெரும்பாலும் சைக்கிள்கள் மற்றும் புறநகர் இரயில்களைப் பயன்படுத்தியே இவர்கள் இந்தப் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். 99.9 சதவிகிதம் நேரம் தவறாமல் மதிய உணவை அலுவலகத்தில் சேர்த்து விடுவார்கள். ஒருநாள் கூட, மும்பை அலுவலக ஊழியர்களுக்குத் தாமதமாக இவர்கள் உணவு வழங்கியதில்லை.

'மும்பை டிபன் பாக்ஸ் சப்ளையர்ஸ் அசோசியேஷன்' (MBTSA) என்ற அமைப்பின் கீழ் டப்பாவாலாக்கள் பணி புரிந்து வருகின்றனர். டப்பாக்களின் மீது பூசப்படும் வண்ணம், எண்கள் மற்றும் குறியீடுகள் மூலம் உணவு எந்தப் பகுதியிலிருந்து வருகிறது, எங்கு அனுப்ப வேண்டும், எந்த ரயிலில் ஏற்றப்பட வேண்டும் என்பது தெளிவாகக் குறிக்கப்பட்டிருக்கும். வெயில், மழை, வெள்ளம் என எந்தச் சூழலிலும், வேலைநிறுத்தமின்றி தினசரி சுமார் 80 ஆயித்துக்கும் அதிகமான டிபன்பாக்ஸ்களை இவர்கள் பிரமாண்டமான மும்பையின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு சேர்க்கிறார்கள். சொல்லப்போனால், ஸ்விகி, ஜோமோட்டோவுக்கு இவர்கள்தான் முன்னோடி.

இந்தத் தருணத்தில், டப்பாவாலாக்கள் விடுப்பு எடுப்பார்களா? என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? ஆம்... அவர்களும் விடுப்பு எடுப்பது உண்டு. இந்த ஆண்டு மார்ச் 30 முதல் ஏப்ரல் 4 ம் தேதி வரை அவர்கள் விடுப்பு எடுத்துள்ளனர். ஆனால், எரி வாயு பிரச்னை காரணமாக டப்பாவாலாக்கள் விடுப்பு எடுக்கவில்லை. அதற்கு, வேறு ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

மும்பையில் பணிபுரியும் டப்பாவாலாக்கள் புனே மாவட்டத்திலுளள முல்ஷி, மாவல், ராஜ்குருநகர், அம்பேகான், ஜுன்னார், அகோலே மற்றும் சங்கமநேர் போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமங்களிலும் தங்கள் குல தெய்வ கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்த ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்வது வழக்கமான நிகழ்வகும். குல தெய்வ கோயில்களின் திருவிழவை முன்னிட்டே அவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளனர்.

food box
food box mumbai dubbawala,in

'மும்பை டிபன் பாக்ஸ் சப்ளையர்ஸ் அசோசியேஷ'னின் தலைவர் ராம்தாஸ் பாபன் கர்வாண்டே கூறுகையில், ''இந்த ஆறு நாள்களும் எங்களின் அனைத்துப் பிரிவுகளும் இயங்காது. இந்த ஆறு நாள் விடுப்பு , மகாவீர் ஜெயந்தி, ஹனுமான் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளி உள்ளிட்ட பொது விடுமுறை நாட்களில்தான் வருகிறது. எங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் சேவையை நிறுத்தும் காலம் தெரியும் . இதனால், அதற்கேற்றார் போல உணவை வேறு எங்காவது இருந்து பெற்றுக் கொள்வார்கள். பல டப்பாவாலாக்கள் விவசாயக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். மதக் கடமைகளை நிறைவேற்றுவதும் சொந்த ஊருக்குச் சென்று உறவுகளை சந்திப்பதும் எங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கம்ததான் அவற்றை நிறைவேற்றும் கடமை எங்களுக்கு உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 6ம் தேதி முதல் மீண்டும் டப்பாவாலாக்கள் சேவை தொடங்கவுள்ளது. அன்றைய தினத்தில் வெள்ளை தொப்பிகளும் வண்ணக் குறியிடப்பட்ட பெட்டிகளும் மீண்டும் மும்பையின் உள்ளூர் ரயில்களில் நிரம்பத் தொடங்கும். அதுவரை, மும்பை பொறுமையாக காத்திருக்கும். ஏனென்றால், டப்பாவாலக்கள் மும்பையின் உணர்வுடன் கலந்துவிட்ட அன்னதான மனிதர்கள்!

Puthuyugam
www.puthuyugam.com