வாய்க்கு டேஸ்ட்; சூழுலுக்கு கேடு... வடபாவ்-க்கு வந்த சிக்கல்?

நம்ம ஊரில் தெருவோர இட்லிக்கடைகள் போல, அங்கே வடபாவ் கடைகள் சாலையோரங்களில் மலிந்து கிடக்கும்.
மும்பை மக்களின் பிடித்த உணவு வடபாவ்
மும்பை மக்களின் பிடித்த உணவு வடபாவ்
Published on

பிரிக்க முடியாதது எதுவென்று கேட்டால் மும்பை மக்களையும் வடபாவையும் என்று தாராளமாக சொல்லலாம். மகாரஷ்டிராவின் பிரபலமான சிற்றுண்டியான வடபாவ், மும்பை மக்களின் உணவு கலாசாரத்துடன் இணைந்தது. இதற்கு, 'மும்பை பர்கர்' என்ற செல்லப் பெயரும் உண்டு. கடந்த 1966ம் ஆண்டு வாக்கில் தாதர் ரயில் நிலையத்தின் அருகே, வட பாவ் கடை முதன்முதலாக திறக்கப்பட்டதாக சொல்கிறார்கள். மும்பையில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வடபாவ் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

நம்ம ஊரில் தெருவோர இட்லிக்கடைகள் போல, அங்கே வடபாவ் கடைகள் சாலையோரங்களில் மலிந்து கிடக்கும். பாவ் பாஜி, மிசல் பாவ், ஆம்லெட் பாவ் என பல வகைகளிலும் இது கிடைக்கிறது. அவசரகதியில் வாழும் மும்பை மக்களுக்கு வடபாப்தான் பல நேரங்களில் உணவாக கிடைக்கும். வாங்கி விட்டு சாப்பிட்டுக் கொண்டே நடந்து செல்லலாம். ரயில் பயணத்தின் போது சாப்பிடலாம். எப்படி வேண்டுமென்றாலும் எங்கே வேண்டுமானாலும் எளிதாக இதை சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்து விட்டால், பசி அடங்கி வயிறு அமைதியாகி விடும். சாலையோரங்களிலும், சிறிய மற்றும் பெரிய உணவகங்களிலும் காலை முதல் இரவு வரை வடா பாவ் கிடைக்கும். ஒரு வடா பாவ் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னை போன்ற நகரங்களிலும் வடபாவ் கிடைக்கிறது.

வடபாவ்
வடபாவ்

தவாவில் வெண்ணையில் டோஸ்ட் செய்த ரொட்டியை இரண்டாக வெட்டி உருளைக்கிழங்கு போண்டாவை மத்தியில் வைத்து, புதினா சட்னி மற்றும் எண்ணெயில் பொரித்தெடுத்த முழு பச்சைமிளகாயுடன் சாப்பிடுவதே வடபாவ். பாவ் என்பது ஒரு வகையான சாதாரண ரொட்டிதான்.மென்மையாக இந்த ரொட்டிக்கு என்று தனியாக எந்த சுவையும் இல்லை. இந்த ரொட்டி பாரம்பரியமாக மரத்தால் எரியும் அடுப்புகளில் சுட்டு எடுக்கப்படுகிறது. இதை தயாரிக்க மும்பையில் ஆயிரக்கணக்கான பேக்கரிகள் செயல்படுகின்றன. தற்போது, இந்த ரொட்டியை தயாரிக்கும் பேக்கரிகளுக்குதான் சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற பெயரில் சிக்கல் உருவாகியுள்ளது.

கடந்த ஆண்டு, மும்பையைச் சேர்ந்த பம்பாய் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு, விறகு அடுப்புகளை எரிப்பதால் நகரத்தில் காற்று மாசு அதிகமாகிறது என்பதை கண்டுபிடித்தது. மும்பை நகரின் சுற்றுச்சூழல் பாதிப்பில் பாவ் தயாரிக்கும் பேக்கரிகளின் பங்களிப்பு 5 சதவிகிதமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. விறகுகளை எரிப்பதால் உருவாகும் புகையைத் தவிர,பிற நச்சு சேர்மங்களையும் வெளியிடுவதாக சொல்லப்படுகிறது. .இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதத்தில் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு பெஞ்ச், பேக்கரிகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் காற்று மாசு ஏற்படுத்தப்படாத எரிசக்திக்கு மாற வேண்டுமென உத்தரவிட்டது

மும்பை மாநகராட்சி
மும்பை மாநகராட்சி

தொடர்ந்து, மும்பை மாநகராட்சி (BMC) பேக்கரிகளை மின்சாரம், LPG, CNG அல்லது PNG அடுப்புகளுக்கு மாறும்படி அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், பாரம்பரிய அடுப்புகளை தவிர்த்து விட்டு மாற்று எரிசக்திக்கு மாறுவது சிறிய அளவில் பாவ் தயாரிப்பவர்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. பெரிய அளவில் பாவ்களை தயாரிக்கும் பேக்கரிகள் எளிதாக மாற்று எரிசக்திக்கு மாறி விட்டார்கள். ஆனால், சிறிய அளவிலான பேக்கரிகள் மாற்று எரிசக்திக்கு மாற முடியாமல் தவித்து வருகின்றன. பாவ் தயாரிப்பதற்கான செட்டப்களை மாற்ற ஏராளமான பணமும் தேவையாக உள்ளது. அதோடு, புதிய முறையில் தயாரிக்கப்படும்போது, பாவ் இத்தகைய மென்மையாக வருமா என்கிற கேள்வியும் எழுகிறது.

இதனால், மும்பையில் ஏராளமான பாவ் தயாரிக்கும் பேக்கரிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், மாற்று எரிபொருளுக்கு மாறாத பேக்கரிகளுக்கு பாவ் தயாரிக்க தடை விதிக்கும் முடிவில் மும்பை மாநகராட்சி உள்ளது. மும்பையில் மட்டும் பாவ்களை தயாரிக்கும் பணியில் தினமும் 1,000 பேக்கரிகள் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து இந்திய பேக்கரிகள் சங்க தலைவர் கோடாதாத் இரானி கூறுகையில், 'PNG அடிப்படையிலான அடுப்புகளை அமைப்பது மரம் மற்றும் நிலக்கரி அடுப்பை விட மூன்று முதல் நான்கு மடங்கு செலவு அதிகமாகும். இது பேக்கரிகளுக்கு மிகப்பெரிய செலவாகும். இதனால், பாவ் உற்பத்தியை நிறுத்தும் அபாயமும் ஏற்பட்டுள்ளது 'என்கிறார்.

சுற்றுச்சூழல் மிக மிக முக்கியமான பிரச்னையாக மாறிவரும் சூழலில், அதனையும் பாதிக்காமல் தங்கள் பிரிய ஸ்நாக்ஸ் ஆன வடபாவுக்கு சிக்கல் வராமலும் இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்பதே உணவுப்பிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Puthuyugam
www.puthuyugam.com