

நேற்று தொடங்கிய ரேங்க்கிங் டாஸ்க்கின் முழு பகுதியும் இன்று காண்பிக்கப்பட்டது. முதல் இடத்துக்கான போட்டி வலுவாக இருந்ததோடு மட்டுமல்லாது, மணிக் கணக்காக வேறு இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தது. ஜேசன், வாசன், அவினாஷ், அன்சார், தன்யா என்று பலரும் முதல் இடத்தில் போய் நின்று கொண்டு முரண்டு பிடித்துக் கொண்டிருந்தனர். ’நீங்கள் ஏன் அதற்குப் போட்டி போடவில்லை? உங்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லையா?’ என்று வார இறுதியில் கேள்வி கேட்டு விடுவார்களோ என்ற பயத்திலேயே தன்யாவெல்லாம் நின்று கொண்டிருந்ததாக தோன்றியது நமக்கு.
அங்கே நின்று கொண்டிருந்தவர்களை விலகச் சொன்னால், ”நாங்கள் ஏன் போக வேண்டும்? எங்களுக்கு என்ன தகுதி இல்லை என்று நீங்கள் காரணம் சொல்லுங்கள்” என்று சொல்லச் சொன்னார்கள். ”நீங்கள் ஏன் அங்கு நிற்கிறீர்கள்? உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்” என்று மற்றவர்கள் கேட்டனர். இப்படியே மாற்றி மாற்றி வளவளவென்று கேட்டுக் கொண்டிருந்தார்களே தவிர யாரும் ஒரு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. பலரும் ’முதல் இடத்துக்கு நீங்களே முதல்ல ஒரு முடிவுக்கு வாங்கடா, அப்புறமா மற்றதைப் பார்க்கலாம்’ என்று ஓய்ந்துபோய் உட்கார்ந்துவிட்டார்கள்.
கடைசியாக வாசனும் ஜேசனும் முதலிடத்துக்காக நீண்ட நேரம் விவாதித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு வார இறுதியிலும் வாசனுக்கு பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் பெரும் வரவேற்பை பார்த்த வயிற்றெரிச்சல் ஜேசனுக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போவது கண்கூடாகத் தெரிகிறது. இன்றும் அது வெளிப்பட்டது. ”நான் வைரத் திருட்டு டாஸ்க் மாதிரி டாஸ்க்குகளில் நன்றாக விளையாடினேன்” என்று வாசன் சொன்னால், ”இங்கே டாஸ்க் ஜெயிப்பது எல்லாம் முக்கியமில்லை, சுவாரசியம்தான் முக்கியம். நான்தான் இத்தனை வாரங்களாக இந்த நிகழ்ச்சியை சுவாரசியமாகக் கொண்டு போய்கிட்டிருக்கேன். நான் இல்லைன்னா பிக்பாஸையே இழுத்து மூடிருவாங்க தெரியுமா?” என்றார் ஜேசன். தொடர்ந்து, ”மக்களோட சப்போர்ட் இருக்கிறதால டைட்டில் ஜெயிச்சிடலாம்னு கனவு காணாதே வாசன். இங்கே மக்கள் ஆதரவு முக்கியமே இல்லை” என்று தம் வயித்தெரிச்சல் வார்த்தைகளாக வெளிப்படுகின்றன என்பதையும் அறியாமல் உளறிவிட்டு, அடுத்த நிமிடமே அதைச் சமாளிக்கும்படி, ”நான் ஒரு காமன் மேன், உனக்கு கைதட்டிக் கொண்டிருந்த காமன் மேன் கூட்டத்துலருந்து வந்திருக்கேன். எனக்குத்தான் மாம்பழம். தம்மாத்துண்டு பிளேடு மேல வைச்ச நம்பிக்கையை உன் மேல வையி. பிஆர் டீம் செட் பண்ணிட்டு வந்து டைட்டில் அடிச்சிட்டுப் போயிடலாம்னு கனவு காண்கிறியா? எனக்குத்தாண்டா கப்பு” என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருந்தார்.
பதிலுக்கு வாசனையோ, மற்ற யாரையுமோ பேசவே விடவில்லை. யாராவது வாயைத் திறந்தால், இவர் முந்திக்கொண்டு லபோ திபோவென்று குதித்துக்கொண்டிருந்தார். முனியம்மா மட்டும் வாசனுக்காகப் பேசினார், ’இங்க வீடு பெருக்குறதும், டாஸ்க் ஆடுறதும், சோறு பொங்கித் தின்கிறதும் முக்கியமில்ல. வேறொரு தன்மை இருக்கணும். அது அவன்கிட்டதான் இருக்கிறாப்பல தோணுது. இப்ப குடுக்குற இடம் முக்கியமே இல்லை. இது நாமா குடுத்துக்குறது. நமக்கான உண்மையான இடத்தை மக்கள் தருவாங்க. ஒழுங்கா அவனுக்கு இப்ப இந்த இடத்தைக் குடுத்துடுங்க, இல்லைன்னா அவன்தான் டைட்டில் அடிப்பான். ஜாக்கிரதை’. ஊஹூம், அதையும் எவனும் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை. ஜேசன், ’உனக்கு அஞ்சாறு தெரியுமா?’ என்று அதற்கும் கொதித்துக்கொண்டு வந்தார். கடைசியில் ’இவனுடன் எந்த மடையனாவது பேசமுடியுமா?’ என்று எல்லோரும் ஓய்ந்து போய் விட்டார்கள்.
இறுதியாக வாக்கெடுப்பில் இடங்களை முடிவு செய்யலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள். இதை முதலிலேயே செய்து தொலைத்திருக்கலாம். முதல் இடத்தை ஜேசனுக்குக் கொடுத்து அவர் வாயை மூடிவிட்டு இரண்டாவது இடத்துக்கு, வினோத், அவினாஷ், தன்யா, அன்சார் ஆகியோர் நடந்தார்கள். ஒவ்வொரு இடத்துக்கும் ஒன்றிரண்டு பேர் வாக்களித்து ஒருவரை நிறுத்தியதும், மற்றவர்கள் அடுத்தடுத்த இடத்துக்குப் போனார்கள். இப்படியாக தன்யா ஏழாவது எட்டாவது இடம் வரை நகர்ந்து கொண்டே போனார். எங்கே அப்படியே 14-வது இடத்துக்கே போய்விடுவாரோ என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போது நல்லபடியாக எட்டாவது இடத்தில் நிறுத்தி வைத்தார்கள். கடந்த வாரம் வெளியே போயிருக்க வேண்டிய முகேஷுக்கெல்லாம் நான்காவது இடமாம். நடுவில், இதற்கு மேல் உட்கார்ந்திருந்தால் கேள்வி கேட்பார்கள் என்ற யோசனையில் முனியம்மா, லட்சுமி போன்றோர் நடுவில் எழுந்து வந்து ஏதோ ஓர் இடத்துக்கு போட்டி போடுவது போல பாவ்லா செய்துவிட்டுப் போனார்கள். கடைசியில் மிச்சமிருந்த இரண்டு இடங்களை முனியம்மா, வாசன் எடுத்துக்கொண்டார்கள்.
அவனவன் முதல் இடத்துக்குப் போட்டி போட்டுக் கிடைக்காமல் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால், நள்ளிரவில் ஷாதிகா வெளியே போய் தனியே உட்கார்ந்து தனக்கு ஏன் 5-ம் இடம் கிடைக்கவில்லை என்று புலம்பி அழுதுகொண்டிருந்தது நல்ல காமெடி!
அடுத்து, எல்லா சீசனிலும் வரும் பள்ளிக்கூடம் டாஸ்க்கைக் கொண்டு வந்தார்கள். ஒரு சின்ன மாற்றமாக மாணவர்கள் அனைவரும் வயதான திருடர்கள், அவர்களைத் திருத்தும் பள்ளிக்கூடம் இது என்று சொல்லி, வினோத், அஷ்மிதாவை ஆசிரியர்களாகவும், ஷாதிகா, தன்யாவை உணவுப் பொறுப்பாளர்களாகவும், மற்றவர்களை மாணவர்களாகவும் நியமித்தார் பிக்பாஸ். ஷாதிகா, மீண்டும் கிச்சன் பொறுப்பா என்று கண்ணீர் விட்டுக் கதறினார். வகுப்பை ஆரம்பித்தார்கள். அன்சார் மட்டும் காமெடிக்கு சற்று முயற்சிக்க, மற்றவர்கள் ரொம்பவே போரடித்தார்கள். பார்க்கலாம் வரும் நாட்களில் என்னவாகிறது என்று!