

நேற்று, தோற்றுப் போன அணியின் ஒர்ஸ்ட் பிளேயர்ஸ் யார் என்பதை விசாரித்தது போல, இன்று நிகழ்ச்சி தொடங்கியதுமே வெற்றியடைந்த கௌபாய்ஸ் அணியில் யார் பெரிதான பங்களிப்பைச் செய்யாமல் இருந்தார்கள் என்ற கேள்வியைக் கேட்டார் விசே. ஒரு சிலர் முத்தழகி, அஷ்மிதாவின் பெயரைச் சொன்னாலும், பெரும்பாலானோர் லட்சுமி பிரியாவின் பெயரைச் சொன்னார்கள். ஆண்கள் அவரது பெயரைத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சொல்லிவிட்டாலும், பெண்கள் பயந்துகொண்டே சொன்னார்கள். ஷாதிகா, லட்சுமியின் பெயரைச் சொல்லும்போது, ஒரு படி மேலே போய், கூடவே நானும்தான் ஒர்ஸ்ட் என்று அவரது பெயரையும் சேர்த்துக் கொண்டார். லட்சுமியின் லீலைகள் அப்படியானவை.
நேற்று அக்சிதா வாசனைத் தாக்கிய பஞ்சாயத்துக்குப் பிறகு, அக்சிதா வாங்கிய கொட்டுகளால் மயங்கியெல்லாம் விழுந்து பெர்ஃபார்மன்ஸ் காண்பித்துவிட்டதால், மேற்கொண்டு அவர் பஞ்சாயத்து ஒன்றும் இருக்காது என்று நினைத்தோம். ஆனால், அவிநாஷுக்கும், தன்யாவுக்கும் இடையே நடந்த போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வழக்கு மீண்டும் அக்சிதா மீது பாய்ந்தது.
விஜய் சேதுபதி, ”வேறு ஏதோ பிரச்சனையின் தொடர்ச்சியாக அவினாஷ் கிச்சனுக்குள் வந்து, உங்கள் குழுவைச் சார்ந்த அடுப்பு மற்றும் பாத்திரங்களை எடுத்துப் போக முயற்சி செய்தார். அப்போது தனி ஆளாக தன்யா மட்டுமே அவரைத் தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரைத் தவிர அங்கு இருந்தது நீங்கள் மட்டுமே! நீங்களும் தன்யாவுடன் சேர்ந்து ஏன் அவிநாஷைத் தடுக்கவில்லை?” என்று கேட்டார். அதற்கு முதலில் அண்ணனும் தங்கையும் சேர்ந்து ’அக்சிதா அந்த இடத்திலேயே இல்லை’ என்று சொன்னார்கள். அந்த அந்த சண்டையின் முடிவில், தன்யாவிடம் போய் ”நடந்தது என்ன? நீ எப்படி என் அண்ணனை பார்த்து அப்படிச் சொல்லலாம்? அவன் எவ்வளவு நல்லவன் தெரியுமா?” என்று அண்ணனுக்காக தன்யாவிடம் பெரிய வாக்குவாதம் ஒன்று நடத்தினார் அக்சிதா. அதைக் குறிப்பிட்டு, ”நடந்த நிகழ்ச்சியை நீங்கள் பார்க்கவில்லை என்றால், எப்படி அண்ணனுக்காக போய் வாதாட முடியும்?” என்று லாஜிக்கலாக கேட்டு அவிநாசியையும், அக்சிதாவையும் மடக்கினார் விஜய் சேதுபதி. வசமாக மாட்டிக் கொண்டதால் வேறு வழி இல்லாமல் அக்சிதா திருவாய் திறந்தார்.
”ஏற்கனவே எங்கள் இருவரையும் அண்ணன் தங்கையாக விளையாடுகிறார்கள் என்று சொல்லிப் பழி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் சார். நான் போய் அவிநாஷைத் தடுத்தால், மீண்டும் அப்படிச் சொல்லிவிடுவார்களோ என்று பயந்துதான் போகவில்லை” என்று ஓர் உருட்டு உருட்டினார்.
கடுப்பான விசே, ”யம்மா, இந்த விளையாட்டில் நீங்கள் இருவரும் ஒரே அணியில் இல்லை. நீங்கள் அவரைத் தடுக்காமல் விட்டதால்தான் அண்ணனுக்காக விளையாடுகிறீர்களோ எனும் சந்தேகமும், இந்தக் கேள்வியும் வந்திருக்கிறது. அவரைத் தடுத்திருந்தால் அப்படி யாரும் சொல்லியிருக்கவும் மாட்டார்கள். நானும் இங்கே இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டேன். புரிகிறதா இல்லையா?” என்று புளிபோட்டு விளைக்கினார் விசே. அடுத்த வேறு வழியின்றி, இதற்கு மேலும் நடிக்க முடியாது என்று விசயத்துக்கு வந்தார் அக்சிதா,
’நான் கூர்ந்து பார்த்தவரை அவினாஷுக்கு அந்த இண்டன்ஷன் இல்லை சார். இருந்தாலும், ஒரு ஆணுக்கு எதிராக ஒரு பெண் வுமன் கார்டு எடுப்பது சரியில்லைதானே சார்?”
”அது சரியில்லைதான். ஆனால் அதை நான் தனியாக அவரிடம் கேட்டுக்கொள்கிறேன் இப்போது கேள்வி அதுவல்ல, நீங்கள் ஏன் அவிநாஷைத் தடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை சொல்லுங்கள்” என்று மீண்டும் வேதாளம் போல அதே கேள்வியில் நின்றார். ’ஐயோ எந்த ரூட்ல போனாலும், திசையில போனாலும் விடமாட்டேங்கிறானே’ எனும் அக்சிதாவின் மைண்ட் வாய்ஸ் வெளியே கேட்டது. அதன் பிறகு அவர், ’நான் தடுக்கப் போயிருக்கணும், போகவில்லை. சாரி சார்’ என்று சொன்னதும், அந்தப் பஞ்சாயத்தை முடித்து வைத்தார் விசே.
அதன் பிறகு தன்யாவிடமும், ’உங்கள் நோக்கம் அதுவல்ல என்பது எங்கள் எல்லோருக்கும் தெரிகிறது தன்யா. ஆனாலும், இந்த வீட்டுக்குள் வார்த்தைகளைக் கவனமாகப் பேச வேண்டும்’ என்று சொல்லி உட்கார வைத்தார். நாள் முழுவதும் குத்து வாங்கி விட்டு, தன்யாவுக்கு விஜய் சேதுபதி சொன்ன அந்த ஒரு வரி அறிவுரை என்னவோ அவரது மானத்தையே காப்பாற்றிவிட்டது போல நெகழ்ச்சி அடைவது, கண்ணீர் விடுவது, நன்றி சொல்லி சீன் போடுவது என சற்று பிசியானார் அவினாஷ். அந்த அளவுக்கெல்லாம் அங்கே ஒன்றுமே நடக்கவில்லை, அதோடு தன்யா சொன்னது தவறாகவே இருந்தாலும், அவிநாஷின் நோக்கம் என்பது இப்படி ஏதாவது ஒரு வார்த்தை தவறுதலாக வெளியே வந்தால் அதை விடாமல் பிடித்துத் தொங்கிக் கொண்டு, தேவையான அளவுக்கு விக்டிம் கார்டு எடுத்து தமக்கு வெளிச்சத்தை உண்டாக்கிக்கொள்வது மட்டுமே! இவர்தான் தன்யாவைச் சொல்கிறார் வுமன் கார்டு எடுப்பதாக!
அடுத்தது எவிக்சன்! இந்த வாரம் வீட்டில் இருப்பவர்கள் அத்தனை பேரும் நாமினேஷனில் இருந்ததாலும், நேரம் குறைவாக இருந்ததாலும் அதில் அதிக நேரம் விளையாட்டு காண்பிக்காமல் நேராக விஷயத்துக்கு வந்தார் விசே. முகேஷ், முத்தழகி, கரிஷ்மா தவிர மற்ற அனைவரும் காப்பாற்றப்பட்டுவிட்டீர்கள் என்று சொல்லி இந்த மூவரில் யார் என்று சொல்லுங்கள் எனும் கணிப்பு விளையாட்டுக்கு வந்தார். அதையும் முடித்துவிட்டு வாசன் மற்றும் ஜேசனை எழுப்பி, உங்கள் ’எவிக்சன் ஃப்ரீ பாஸை’ இவர்களில் யாருக்காவது தருகிறீர்களா என்று கேட்டார். இரு வாரங்களுக்கு முன்பு முகேஷைத் தாக்கிய கில்ட்டில் இருந்த வாசன், இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதால் முகேஷைக் காப்பாற்றினார். பார்த்தால் முகேஷ்தான் கடைசியில் இருந்ததாகச் சொல்லி, இது ஒரு நல்ல மூவ் என்று வாசனைப் பாராட்டினார் விசே! அடுத்து முத்தழகி, கரிஷ்மா இருவரில் முத்தழகி வெளியேறுவார் என்று நாம் நினைத்தால், கரிஷ்மாவை வெளியேற்றினார்கள். அவ்வளவுதான் இந்த வாரம்!