பிக்பாஸ் 10 -நாள் 49: மீண்டும் ஒரு எதிர்பாரா எவிக்‌ஷன் ஷமா! #BiggBoss10

'மக்களின் ஆதரவு எனக்கு இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்’ என்பது போல பேசிவிட்டு அமர்ந்தார். ஆனால் இதே ஜேசன்தான் நேற்று, ’மக்கள் என்ன நினைத்தால் எனக்கென்ன? ஐ டோண்ட் கேர்’ என்று தெனாவெட்டாகப் பேசியவர்.
BB 10 Tamil Day 49
BB 10 Tamil Day 49Jiohotstar
Published on: 

முதலில், இது இந்த சீசனின் ஐம்பதாவது எபிசோடு என்ற முறையில் அனைவருக்கும் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு இந்த 50 நாட்கள் அனுபவம் எப்படி இருந்தது என்று ஆரம்பித்தார் ரம்யா கிருஷ்ணன். ஷமா, கரிஷ்மா இருவரும், ’ஒரு காமன் மேன் போட்டியாளர்களாக எங்களது பயணம் இந்த 50 நாட்கள் மட்டும் அல்ல, அதற்கும் முன்னதாகவே தொடங்கிவிட்டது. வாழ்க்கையையே மாற்றியமைக்கும் பெரிய அனுபவமாக இது இருந்தது’ என்று சொன்னார்கள். முனியம்மா எழுந்து வழக்கம் போல, ’நான் மகிழ்ச்சியாக இருக்கத்தான் இந்த வீட்டுக்கு வந்தேன். அப்படியேதான் இருக்கிறேன்’ என்று அதே பல்லவியைப் பாடினார்.

ஜேசன் எழுந்ததுமே, நேற்று அவரைப் போட்டு புரட்டி எடுத்த சம்பவத்துக்கு ஆறுதல் சொல்லும் விதமாக, ’நீங்கள் ஒரு சிறந்த பிளேயர்தான் ஜேசன். இப்படிப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்காமல், உங்களிடம் இருக்கும் தவறுகளை ஆராய்ந்து திருத்திக் கொண்டால் இன்னும் பலபடிகள் முன்னேற முடியும்’ என்றார் ரம்யா கிருஷ்ணன். அவரும் பதிலுக்கு, ’நான் என்னுடைய பலமாக நினைத்த விஷயங்கள் பலவீனமாகவும், பலவீனமாக நினைத்த விஷயங்களில் அப்படி இல்லை எனவும் இந்த வீடு எனக்குக் காண்பித்திருக்கிறது. மக்களின் ஆதரவு எனக்கு இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்’ என்பது போல பேசிவிட்டு அமர்ந்தார். ஆனால் இதே ஜேசன்தான் நேற்று, ’மக்கள் என்ன நினைத்தால் எனக்கென்ன? ஐ டோண்ட் கேர்’ என்று தெனாவெட்டாகப் பேசியவர்.

வினோத்தை மிமிக்ரி செய்தபடியே கருத்து சொல்லச் சொன்னார் ரம்யா. அவருவுக்கு வினோத்தின் மிமிக்ரி ரொம்பப் பிடித்திருந்தது போலிருக்கிறது. உற்சாகத்துடன் சிரித்தபடியே கேட்டுக்கொண்டார். எல்லோரும் சொல்வதைப்போல மிமிக்ரி செய்யும் போது மட்டும் வினோத் ஜாலியாகவும், சிறப்பாகவும் வெளிப்படுகிறார் என்பது உண்மைதான். வினோத்தாக எந்நேரமும் உர்ரென்றுதான் திரிந்துகொண்டிருக்கிறார். அடுத்த ஆளாளுக்கு எழுந்து வளவளவென்று எதையோ சொல்லிவிட்டு உட்கார்ந்தார்கள்.

அடுத்து அனைவரிடமும் இன்னொரு நேரப்போக்கு+ சிண்டுமுடியும் கேள்வி கேட்கப்பட்டது. ’இந்த வீட்டில் யார் ஓவர் கான்ஃபிடன்ட் ஆக சுற்றிக் கொண்டிருப்பது? இந்த வீட்டில் யார் இன்னும் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பது?’ என்பன அந்தக் கேள்விகள். இருக்கும் இடம் தெரியாமல் இருப்பவராக லட்சுமி, அஷ்மிதா ஆகியோரது பெயர் அடிபட்டாலும் பலரும் முத்தழகியைச் சொன்னார்கள். ஓவர் கான்பிஃடண்டாக அன்சார், அவினாஷ், முனியம்மா பெயர்கள் அடிபட்டாலும், பெருவாரியாக ஜேசனைச் சொன்னார்கள்.

வாசன், ஓவர் கான்ஃபிடன்ட் என்று அவினாஷின் பெயரைச் சொன்னபோது அதற்கான காரணத்தை கேட்டார் ரம்யா. அதற்கு வாசன், ’அவர் ஓவர் கான்ஃபிடண்டாக இருக்கிறார். அதனால் அவர் ஓவர் கான்ஃபிடண்ட் என்று சொன்னேன்’ என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தார். ’என்ன விளையாடுறீங்களா, காரணம் சொல்லச் சொன்னா கேள்வியவே பதிலாக எழுதி வைக்கிற ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி பதில் சொல்றீங்க?’ என்று சிரித்துக் கொண்டே ரம்யா கேட்க,

அதற்குப் பதிலாக வாசனும், ’நானும் அந்த மாதிரி கேள்வியவே பதிலாக எழுதி வைக்கும் ஸ்டூடண்ட்தான் மேடம்!’ என்று சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தது நல்ல டைமிங்!

அடுத்து அவினாஷ் தோசைக் கல்லை தூக்கிப் போட்டு உடைத்ததையும், வாசன் ஏறத்தாழ முகேஷைத் தாக்கியதையும் சாதாரண குற்றங்களாக அறிவித்து, இன்னொரு முறை இப்படி நடக்கக்கூடாது என்று எச்சரிக்கையுடன், பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

BB 10 Tamil Day 49
BB 10 Tamil Day 49Jiohotstar

அடுத்து நிகழ்ச்சியின் முக்கிய கட்டமான எவிக்சனுக்கு வந்தார்கள். இறுதி இருக்கைகளில் ஷமா, முத்தழகி, அக்சிதா, அஷ்மிதா ஆகியோர் அமர்ந்திருந்தனர். முத்தழகிக்கும் அஷ்மிதாவுக்கும் இது வழக்கமான சம்பிரதாயம்தான். அவர்கள் எல்லா வாரங்களிலும் நாமினேஷனில் இடம்பெற்று இந்த இடத்துக்கு அடிக்கடி வந்து கொண்டிருப்பவர்கள். அண்டர் பெர்ஃபார்மர்ஸ் என்று அடிக்கடிச் சொல்லப்பட்டு மனதளவில் வெளியேறவும்கூட தயாராகத்தான் இருப்பார்கள். இம்முறையும் இவர்களில் ஒருவர்தான் வெளியேறுவார்கள் என்று போட்டியாளர்களைப் போலவே நாமும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அக்சிதாவின் முகத்தில்தான் மரணபீதி வெளிப்படையாகத் தெரிந்தது. வைல்ட்கார்டில் உள்ளே வந்துவிட்டு எல்லோரையும் நக்கல் விட்டுக்கொண்டு திரிந்தோமே, உண்மையில் நாம்தான் வீக்கான போட்டியாளரோ எனும் பயம் அது! ஷமாதான் நாம் வெளியே போக வாய்ப்பேயில்லை எனும் நினைப்பில் சிரித்தபடி அமர்ந்திருந்தார்.

ஜேசனையும், வாசனையும் அவர்களிடமிருந்த எவின்ஷன் ஃப்ரீ பாஸை யாருக்காவது கொடுத்து காப்பாற்ற விரும்புகிறீர்களா என்று கேட்டபோது மறுத்துவிட்டார்கள். ’உங்கள் பாஸை, உங்களுக்காகப் பயன்படுத்தப் போகிறீர்களா?’ என்று ஷமாவைக் கேட்டபோது அவரும், ’இன்னொரு ரிஸ்க்கான வாரத்துக்கு அதைப் பயன்படுத்திக் கொள்கிறேன்’ என்று சொல்லி மறுத்துவிட்டார். ஆனால், அந்த ஓவர் கான்ஃபிடண்ட் வேலைக்கு ஆகவில்லை, ஷமா வெளியேற்றப்பட்டுவிட்டார். ஷமா எந்த சந்தர்ப்பத்திலும் வுமன் கார்டைத் தூக்காத நல்ல ஸ்போர்டிவான பிளேயராக இருந்தார் என்பது உண்மைதான் என்றாலும் அவரும் வெளியே போக வேண்டிய நபர்தான். கடைசி இரண்டு வாரங்களாக அவர் நடந்துகொண்ட விதம் எல்லாமே டாக்சிக்காகத்தான் இருந்தது. ஷமா உட்பட யாருமே இதை எதிர்பாராததால், எல்லோருமே அதிர்ச்சியானார்கள். அவருக்கு நல்ல நண்பராக இருந்த பிருத்வி, இதனால் சற்று கலங்கிப்போனதைப் பார்க்க முடிந்தது. அடுத்து சில செண்டிமெண்ட் காட்சிகளுடன் ஷமா வெளியேற்றப்பட்டார். 

BB 10 Tamil Day 49
பிக்பாஸ் 10 -நாள் 44:  முனியம்மாவின் சுயரூபம்! #BiggBoss10