பிக்பாஸ் 10 -நாள் 39: விசாரணையில் தப்பிய குற்றவாளிகள்! #BiggBoss10

’இதெல்லாம் செட் பிராப்பர்டி. அதான் ஒன்றைப் பாத்தாச்சே, இன்னொன்றிலும் இருக்காது’ என்று பதில் சொன்னார். பிருத்வியின் புத்திசாலித்தனத்தால் வைரம் ஜஸ்ட்டில் எஸ்கேப்பானது.
BB 10 Tamil Day 39
BB 10 Tamil Day 39Jiohotstar
Published on: 

இரண்டு வைரங்களும் காணாமல் போனதும், பிற்பாடு அதையொட்டி நடந்த பரபரப்பான தேடல்களும், யார் யாரோடு கூட்டணியில் இருக்கிறார்கள் என்ற குழப்படியான விஷயங்களும்தான் இன்றைக்கு நாள் முழுவதும் நடந்துகொண்டிருந்தன. வாசன் வைரத்தை எடுப்பதற்கு உதவி செய்த அவினாஷ், இன்றைக்கு தொடக்கத்தில் இருந்தே வாசனின் பின்னாலேயே சுற்றிக்கொண்டு திரிந்தார்.

”வைரத்தை எடுத்தாயா இல்லையா? அது உன்னிடம் இருக்கிறதா இல்லையா? நாம் இரண்டு பேரும்தான் குழுவாக வேலை செய்தோமா இல்லையா? வைரத்தை எடுத்த உடனேயே அஷ்மிதாவிடம் கொடுக்கச் சொன்னேனே... ஏன் கொடுக்கவில்லை?”

என்று கேள்விகளால் அவரை டார்ச்சர் செய்து கொண்டிருந்தார். ”கொஞ்ச நேரம் அமைதியா இருடா, நேரம் வரட்டும் சொல்லுகிறேன்” என்று சொன்னாலும் கேட்கவில்லை. ”வைரம் எங்கே இருக்கிறது என்றாவது சொல்லித்தான் ஆகவேண்டும்” என்று அவினாஷ் பிடிவாதம் பிடித்தார். அதற்கு வாசன், ”நாம் டீல் பேசி வைத்திருந்தால், நீ அதை அஷ்மிதாவிடம் போய் சொல்லியிருக்கிறாய். உன்னை நம்ப முடியாது, பொறுமையாக இரு” என்று சொன்னதற்குக் கோபமாகி, வாசன் அவரை நம்ப முடியாது என்று சொன்னது சரிதான் என்று நிரூபிக்கும்படி எல்லோரையும் கூப்பிட்டு, ”நான்தான் வாசன் வைரத்தை எடுக்க உதவினேன். அவன்தான் எடுத்தான். எங்கே வைத்தான் என்றுதான் தெரியவில்லை” என்று போட்டுக் கொடுத்துவிட்டார். இவரிடமெல்லாம் எந்த நம்பிக்கையில் உண்மையைச் சொல்வது? வாசன் செய்தது சரிதான் போலிருக்கிறது.

அதன் பிறகு மீண்டும் ஒரு தடவை எல்லோரும் வீட்டையே கவிழ்த்துப் போட்டுத் தேடினார்கள். பிருத்வி, வாசன் வைரத்தை வைத்த ஏசி வெண்டுக்கு அருகிலிருந்த இன்னொரு வெண்டைக்கூட நோண்டிப் பார்த்தார். அவருடைய துரதிருஷ்டம், சரியான வெண்டில் கை வைக்கவில்லை. பக்கத்தில் இருந்த அக்சிதா, ’அந்தப் பக்கத்து வெண்ட் வித்தியாசமாக இருக்கிறது. அதையும் பார்த்துவிடு’ என்று சொன்னபிறகும் கூட, ’இதெல்லாம் செட் பிராப்பர்டி. அதான் ஒன்றைப் பாத்தாச்சே, இன்னொன்றிலும் இருக்காது’ என்று பதில் சொன்னார். பிருத்வியின் புத்திசாலித்தனத்தால் வைரம் ஜஸ்ட்டில் எஸ்கேப்பானது.

ஒரிஜினல் வைரத்துக்கு இந்தப்பாடு இங்கே நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நான்கைந்து பெண்கள் சேர்ந்து எடுத்து டான்ஸ் மராத்தான் மேடைக்கடியில் ஒளித்து வைத்திருந்த போலி வைரத்தை, கரிஷ்மாவும் சாந்தினியும் மட்டும் போய் மீண்டும் எடுத்து வைத்துக் கொண்டார்கள். இந்தப் பெண்கள் குழுவிலும் யாரும் யாரையும் நம்பவில்லை, யார் யாருடன் கூட்டணியில் இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. ஒருவருக்கொருவர் துரோகமும் செய்து கொண்டார்கள்.

அடுத்து ஆட்டத்துக்குள் பிக்பாஸ் நுழைந்தார். ”இரண்டு வைரங்களும் திருட்டுப் போய்விட்டன. நீங்கள் யாரையும் கண்டுபிடிக்கவில்லை. அதனால் விளையாட்டின் அடுத்தக் கட்டத்துக்குப் போவோம். யார் மீது உங்கள் எல்லோருக்கும் அதிகபட்ச சந்தேகம் இருக்கிறதோ அப்படி மூன்று பேரைத் தேர்ந்தெடுங்கள். அதன் பிறகு அவர்களை விசாரிக்க மூன்று விசாரணை அதிகாரிகளைத் தேர்ந்தெடுங்க. அந்த மூன்று பேரும் சேர்ந்து, இந்த மூன்று பேரையும் விசாரித்து உண்மையை வரவழைக்கட்டும்” என்று சொன்னார். அதைப்போலவே, கரிஷ்மா, தன்யா, வாசன் மூன்று பேரும் சந்தேகத்துக்கு உரியவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவினாஷ், வினோத், ஜேசன் மூன்று பேரும் விசாரணை அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

BB 10 Tamil Day 39
BB 10 Tamil Day 39Jiohotstar

தனியறையில் விசாரணை செட்டப் போடப்பட்டிருந்தது. அந்த விசாரணையை மற்ற எல்லா போட்டியாளர்களும் பார்வையாளர்கள் போல அமர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவரை விசாரிக்கும் போது மற்ற இரண்டு சந்தேகத்திற்குரியவர்களும் வெளியே வெளியே காத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. கரிஷ்மாவும் வாசனும் வெளியே காத்திருக்க, முதல் ஆளாக தன்யா விசாரணைக்குப் போனார். வெளியே இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று, கரிஷ்மாவுக்கு தெரியாமல் வாசன் மீண்டும் பாத்ரூம் சென்று சரியாக மூடப்படாமல் இருந்த ஏசி வெண்டை ஸ்க்ரூவைப் போட்டு மூடுவதற்குப் படாதபாடுபட்டார். ஆனாலும் செய்து முடித்து விட்டார். இதற்கிடையே கரிஷ்மா அவரிடம் இருந்த போலி வைரத்தை எங்கே வைக்கலாம் என்று பரிதவித்துக்கொண்டு திரிந்தார்.

உள்ளே தன்யா, டான்ஸ் கேரக்டரில் இருந்தபடியே அழுது நடித்து ஒப்பேற்றி விசாரணையை முடித்துவிட்டு வர, அடுத்து கரிஷ்மா போய்விட்டு வந்தார். மூன்றாவதாக வாசன் உள்ளே போக, தன்யா உதவியுடன், கரிஷ்மா ஒரு நீல நிற சோஃபாவைப் போட்டு பிறாண்டத் தொடங்கினார். காரணம், கொஞ்சம் முன்னதாக கரிஷ்மாவின் கவனம் பாத்ரூமுக்குப் போய்விடக்கூடாது என்பதற்காக வாசன், அந்த சோஃபாவுக்கு பின்புறம் எதையோ ஒளித்து வைப்பது போல நடித்துவிட்டுப் போயிருந்தார். அதன் பலனாக அந்த சோஃபாவையே கரிஷ்மா பிய்த்து எறிந்ததுதான் மிச்சம்.

உள்ளே ஜேசன், கரிஷ்மாவும், தன்யாவும் ஒப்புக்கொண்டுவிட்டதாக பொய் சொல்லிக் கேள்வி கேட்டாலும், தான் கண்ணால் பாத்ததைச் சொல்லி அவினாஷ் கேள்வி கேட்டாலும் தயங்காமல் பிடித்த பிடியில் நின்று, தான் எடுக்கவே இல்லை என்று சொல்லி விசாரணை அதிகாரிகளுக்கு விபூதி அடித்துவிட்டார் வாசன். ஆட்டத்தின் முடிவு என்னவாயிற்று என்பதை நாளை காண்போம்.