

வெள்ளிக்கிழமை எபிசோடில் வழக்கம் போல உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. டிடிஎஃப் வாசனும் கரிஷ்மாவும் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார்கள். ”நிஜ ஜெயில்லக்கூட என்னை இவ்வளவு நேரம் வைச்சதில்ல, கொஞ்சம் சீக்கிரமாவே விடுதலை பண்ணியிருக்கலாம் பிக்பாஸ்” என்று புலம்பியபடியே வெளியே வந்தார் வாசன். முழு இரவும் அடைத்துப் போட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. இன்னொரு பக்கத்தில் ஜேசனும் சாந்தினியும் தனியே அளவளாவிக் கொண்டிருந்தனர். வீட்டில் இருப்பவர்கள், புதிதாக வந்தவர்கள் என எல்லோரும் சாந்தினியை ’இத்தனை வாரமாகியும் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்’ என்று கழுவி ஊற்றியதில், ஆறுதலுக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார் சாந்தினி. இந்த நிலையில் ஜேசனின் அன்பான வார்த்தைகள் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது போலிருக்கிறது. ஜேசனும் பதிலுக்கு ’உங்கள மாதிரி ஒரு தங்கமானவரை நான் பார்த்ததே இல்லை மேடம்’ என்று ஒரு பெரிய ஐஸைத் தூக்கி சாந்தினி தலையில் வைத்தார். அவ்வளவுதான் சாந்தினி கிளீன் போல்டு!
அதை அத்தோடு முடித்துவிட்டு சனிக்கிழமை நிகழ்ச்சிக்கு வந்தார் விஜய் சேதுபதி. எந்தப் படத்துக்கான டப்பிங்கில் கத்திப்பேசிவிட்டு வந்தாரோ தெரியவில்லை, அவருக்கு நன்றாகத் தொண்டை கட்டியிருந்தது. அதனால், நிகழ்ச்சி முழுவதும் மெதுவாகவும் அமைதியாகவும்தான் பேசிக் கொண்டிருந்தார். முதலாவதாக பிக்பாஸைப் போலவே ’பாட்டில் டாஸ்க்’கை விளையாடிய விதத்துக்காக எல்லோரையும் பாராட்டிவிட்டு வழக்கமான பொழுதுபோக்குக் கேள்விகளை ஆரம்பித்தார். முதல் கேள்வியாக, இந்த ஐந்து வாரங்களில் இதுவரை இல்லாத அளவு யார் மிகச் சிறப்பாக வெளிப்பட்டார்கள் என்று கேட்டார்.
அன்சார், தங்கை வரவுக்குப் பின்னர் அவினாஷின் விளையாட்டில் ஒரு ஆக்ரோசம் தெரிகிறது என்றார். இது உண்மைதான். ஷாதிகா, வினோத், முனியம்மா போன்ற பலரும் முத்தழகியைச் சொன்னார்கள். நாம் முத்தழகியிடம் அப்படியொன்றும் பெரிய வித்தியாசத்தைப் பார்த்ததாகத் தெரியவில்லை. முனியம்மா பேச எழுந்தபோது, ’நாம் நம் மனசு போல விளையாட வேண்டும். முயற்சிதான் நம் கையில் இருக்கிறது, வெற்றியைக் கடவுள் தீர்மானிக்கட்டும்னு பாப்பாகிட்ட சொன்னேன்’ என்று சொன்னார். அப்போது குறுக்கிட்ட விஜய் சேதுபதி,
”முயற்சி மட்டுமல்ல, வெற்றியும் நமது கைகளில்தான் இருக்கிறது. நம்முடைய வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளின் வேலை அல்ல. இரண்டு பேர் எதிரெதிரே விளையாடுகிறார்கள் என்றால், இரண்டு பேருமே உங்கள் கூற்றுப்படி கடவுளின் பிள்ளைகள்தான். ஒருவருக்கு வெற்றியும் ஒருவருக்கு தோல்வியும் என்று கடவுள் தீர்மானித்தால் அது பாரபட்சம் பார்ப்பதாக ஆகிவிடும். அதனால் இனி அப்படிச் சொல்லாதீர்கள். முயற்சி, உழைப்பு, வெற்றி எல்லாமே நம்முடையதுதான்” என்று சொன்னார்.
இது முனியம்மாவுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் சொன்னது பார்வையாளர்களான நமக்கும்தான். அது நமது மனதில் கொஞ்சம் ஏறினால் நல்லது. அடுத்து வாசனை எழுப்பி, ”நீங்க நாலு வாரமா நிகழ்ச்சியைப் பாத்துட்டு வந்திருக்கீங்க. அதில் பார்க்காத அளவுக்கு இப்போது நன்றாக விளையாடுபவர் யார்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார் விசே. உண்மையில் வாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை என்பதுதான் பிரச்சினை. அதனால் அவருக்கு இந்தக் கேள்வியும் புரியவில்லை. ஏற்கனவே நமக்கு ஒன்றும் புரியவில்லை, சந்தேகம் கேட்டுக்கொண்டே இருக்கிறார் என்று கெட்டபெயர் இருக்கிறது, இப்போது இங்கும் இன்னொரு முறை சொல்லுங்கள் என்று கேட்டால் கேலி செய்வார்களோ என்று பயந்துபோய் உங்க வால்யூம் கொஞ்சம் கம்மியாக இருக்கிறது சார் என்று சமாளிக்க முயற்சித்தார். ஆனால், அப்படியும் மாட்டிக்கொண்டார்.
ஹோம் ஒர்க் செய்யாமல் வந்த மாணவனைப்போல, விசேவிடமும், பிக்பாஸிடமும் மாட்டி வாங்கிக் கட்டிக்கொண்டு விழிக்கிறார் வாசன். அது போதாதென அந்தக் கோபத்தை சக மாணவர்களிடம் காட்டும் ரவுடி மாணவனாகவும் இருக்கிறார். அதை நிரூபிப்பது போல தொடர்ந்து விஜய் சேதுபதி வாசனிடம் பிக்பாஸ் பற்றிச் சொல்லுங்கள் என்று இன்னொரு கேள்வியையும் கேட்டார்.
”அவர் என்ன சார்... ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார். நாம் ஏதாவது கேட்டால் பதிலே சொல்வதில்லை. அவர் சொல்வதை மட்டும் நாம் கேட்டு நடக்க வேண்டுமாம்” என்று வருத்தத்தோடு சொன்னார் வாசன்.
10 சீசன்களில் பிக்பாஸைப்பற்றி இப்படிச் சொன்ன முதல் நபர் வாசன்தான். அதைக் கேட்டதும் நமக்கு மட்டுமல்ல, விஜய் சேதுபதிக்குமே சிரிப்பு வந்துவிட்டது. அந்தக் குரல் கமல்ஹாசனிடமே, ”நீங்கள் வரலாம் கமல் சார், நீங்கள் போகலாம் கமல் சார்” என்று அதிகாரத் தொனியில்தான் பேசும். அந்தக் குரலுக்கான மதிப்பே அதுதான். அதற்குப் பதிலாக, ”நான் பிக்பாஸிடம் பேசி இனி இப்படியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது என்று சொல்லி வைக்கிறேன்” என்று கிண்டலாகச் சொன்னார் விஜய் சேதுபதி. ஆனால், அதுவும் வாசனுக்குப் புரிந்திருக்குமா என்பது சந்தேகமே!
அதன் பிறகு கொஞ்ச நேரம் பாட்டில் டாஸ்க்கில் போட்டியாளர்கள் விளையாடிய விதம், ஜேசனின் ’பிளே லைக் எ மேன்’ பஞ்சாயத்து ஆகியவற்றைப் பற்றிப் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார்.