

நேற்று தொடங்கிய, கன்வேயர் பெல்ட்டில் வரும் பிளாக்குகளை சேகரித்து எதிரணியினரின் பாட்டில்களை நிரப்பும் அடிதடி டாஸ்க்தான் இன்றும் தொடர்ந்துகொண்டிருந்தது. கன்வேயர் பெல்ட்டில் வரும் பிளாக்குகளை பிடிக்க முயற்சிக்கும் போதும், அடுத்தவரிடம் இருக்கும் பிளாக்குகளைப் பிடுங்கும் போதும் கைகலப்பாகி ஒருத்தர் கையை இன்னொருத்தர் பிறாண்டி வைத்து, எல்லோருடைய முழங்கைக்கு கீழே நகக்குறிகளால் காந்தல் ஏற்பட்டிருக்கும் போலிருக்கிறது. எல்லோருமே ஒருவர் மீது ஒருவர் கடுப்பின் உச்சத்தில் இருந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு சமயம் சரியான சாப்பாடு, சரியான தூக்கம் இல்லாததால் எல்லோரும் அவரவர் பாட்டில்களுக்கு பக்கத்தில் ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது எதிர்பாராத விதமாக கன்வேயர் அலாரம் அடித்ததும் ராகவ் எழுந்து முதலாவதாக ஓடி போனார். ஓடும்போதே அவர் கால்களைக் கெந்தியபடி ஓடியதை நாம் பார்த்தோம். முந்தைய ரவுண்டுகளில் காலில் அடிப்பட்டிருக்கிறது போலிருக்கிறது! அதன் பின் சற்று நேரத்தில் முத்தழகி ராகவைப் பார்த்து,
”காலில் அடிபட்டிருக்கிறது என்று சொன்னீர்கள். ஆனால், எல்லோரையும் விட முதல் ஆளாக பிளாக்கைப் பிடிக்க ஓடிக்கொண்டிருக்கிறீர்களே ராகவண்ணா” என்று கேட்டார். அவ்வளவுதான், இந்த வீட்டுக்குள் வந்த இந்த ஒரு மாதத்தில் முதல் முறையாக, கோபம் வந்துவிட்டது ராகவுக்கு.
”என்னம்மா மனசாட்சி இல்லாம இப்படிக் கேக்குறியே... இத்தனை ரவுண்டுகளாக காலை நொண்டிக்கொண்டு முன்னே போக முடியாமல் எல்லோரும் போனதற்கு பிறகுதானே போய் வெற்று கன்வேயரைப் பார்த்துவிட்டு வந்து கொண்டிருக்கிறேன். எல்லோரும் விளையாடி களைத்துப் போயிருக்கும் இந்த சமயத்தில், எப்போதடா அலாரம் அடிக்கும் ஒரு ரவுண்டில்லாவது முன்னே போய் விட மாட்டோமா என்று விழிப்போடு காத்திருந்து, நொண்டிக்கொண்டே ஓடிப்போனதை பார்த்து இப்படி கேட்கிறாயே, உனக்கு இரக்கமே இல்லையா?”
என்று கோபம் ஒரு புறம், அழுகை மறுபுறம் என கொதித்துவிட்டார். ராகவிடமிருந்து இப்படி ஓர் எதிர்வினையை முத்தழகி மட்டுமல்லாமல் வேறு யாருமே எதிர்பார்க்காததால், எல்லோரும் வந்து அவரை சமாதானப்படுத்தினார்கள். கடைசியில் முத்தழகி ராகவ் காலில் விழுந்து, ”எனக்கு ஒரு சொந்த அண்ணா இருந்தால், எப்படி நான் அவன் மீது உரிமையோடு சந்தேகப்பட்டிருப்பேனோ அப்படித்தான் கேட்டேன் அண்ணா. நீங்கள் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று மன்னிப்பு கேட்டதற்குப் பிறகு அந்த பிரச்சினை முடிந்தது.
ஆட்டத்துக்குக் கொஞ்ச நேரம் இடைவேளை விட்டார் பிக்பாஸ். அந்த நேரத்தில் எல்லோரும் எதையாவது இருப்பதைச் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் கட்டையை சாய்க்கலாமா என்று பார்த்துக் கொண்டிருந்தபோது, ஜேசன் மட்டும் ஒவ்வொரு ஆளாகத் தேடிப்போய் முடிந்த அளவுக்கு அவர்களது மண்டையைக் கழுவிக் கொண்டிருந்தார். ’எப்படியாவது தன்யா- கரிஷ்மா ஜோடியை முதலில் அவுட் ஆகிவிட வேண்டும். முதலில் தோற்பவர்களுக்கு பிக்பாஸ் கயிறு கட்டுவது போல ஏதாவது தண்டனை வைத்திருப்பார். இன்னும் இளவரசி மோட்லயே இருக்கும் தன்யாவை அந்த தண்டனைக்கு ஆளாக்க வேண்டும். நன்றாக யோசித்துப் பார். அது ஆடியன்ஸுக்குப் பார்க்க எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்’ என்று முகேஷிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் உண்மையில் ஜேசனுக்கு இந்த வீட்டில் முதல் எதிரி ஷமா. இப்போது இரண்டாவது எதிரி புதிதாக வந்திருக்கும் கரிஷ்மா. அதனால் கரிஷ்மா எப்படியாவது முதலில் அவுட் ஆக வேண்டும் என்பதுதான் அவரது உண்மையான நோக்கம்.
தொடர்ந்து பிருத்வி, முத்தழகி என பலரிடமும் போய் அதையே பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அதற்கு நல்ல பலன் இருந்தது. அடுத்துத் தொடங்கிய ஆட்டமும் அவர் திட்டமிட்டபடியேதான் போய்க்கொண்டிருந்தது. முதலில் தன்யா-கரிஷ்மா, வாசன் -சாந்தினி ஜோடிகள் அவுட் ஆக்கி வெளியேற்றப்பட்டார்கள். எல்லா அணிகளும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தாலும் ஜேசனின் தலையீடுகளை யோசிக்கவே இல்லை. ஒரு கட்டத்தில் வினோத்தும், அன்சாரும் ஜேசனை எதிர்த்து ஒரு சில பாட்டில்களை நிரப்பினாலும், ஆட்டம் தொடர்ந்து ஜேசன் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
அவினாஷுக்கும், ஜேசனுக்கும்கூட ஒரு கட்டத்தில் மோதல் வந்தது. ஆனால், அது அவர்கள் திட்டமிட்டுக் கொண்டதின் ஒரு பகுதியா அல்லது நிஜமான மோதலா என்று தெரியவில்லை. அதில்தான் ’ப்ளே லைக் எ மேன்’ என்றும், ’உன்னை மாதிரி பெண்களிடம் மோசமாக என்னால் விளையாட முடியாது’ என்றும் வார்த்தைகளை விட்டார்.
’ப்ளே லைக் அ மேன்’ என்பது ஜெண்டிலான தன்மையைக் குறிக்கிறது என்றாலும், அங்கே அவர் ஆண் - பெண் வித்தியாசத்தைச் சொல்கிறாரா என்று மற்றவர்களுக்கு சந்தேகம் வந்து அதைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். போலவே பெண்களிடம் ரேஜிங்காக விளையாட முடியாது என்றும், ஜெண்டில்மேனாக விளையாடுங்கள் என்றும் சொல்லும் ஜேசன்தான் சீஸ் வீடு டாஸ்க் உள்ளிட்ட பல இடங்களில் பெண்களிடம் ரேஜிங்காக நடந்துகொண்டார். இதை வீக்கெண்டில் விஜய் சேதுபதிதான் கேட்கவேண்டும். மற்றபடி உண்மையான எதிரியையே சுற்றவிடும் வல்லமை கொண்ட ஜேசன், அவினாஷை எல்லாம் ஆட்டம் முடிந்ததும், மிக எளிதாக மண்டையைக் கழுவிவிடுவார் என்றுதான் தோன்றுகிறது.