பிக்பாஸ் 10 -நாள் 30:  ஜேசனின் மூடர் கூடம் டயலாக்! #BiggBoss10

புதிதாக உள்ளே வந்து லீடராகியிருக்கும் அக்சிதாவுக்கு வீட்டுக்குள்ளே இரண்டு அண்ணன்கள். ஒருவர் உடன்பிறந்த சகோதரர் அவினாஷ், மற்றவர் உடன்பிறவா சகோதரர் ஜேசன்.
BB 10 Tamil Day 30
BB 10 Tamil Day 30Jiohotstar
Published on: 

வாசன் -ஜேசன் மோதிக்கொண்ட நேற்றைய பஞ்சாயத்தின் தொடர்ச்சி இப்போதும் போய்க் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சனைக்கு ஜேசனின் ஆணவமான பேச்சுதான் அடிப்படையான காரணம். இந்த வீட்டில் இத்தனை நாட்களாக தன்னை எதிர்த்து யாராவது பேசினால் அவர்களிடம் எகிறிக்கொண்டு போய் மோசமான உடல் மொழி, ஆணவமான பேச்சு, மாக்கிங் என தடித்தனம் செய்துகொண்டிருப்பது ஜேசன்தான். அவருடைய குரல் மற்றும் தோற்றம் காரணமாக சிலருமே அடங்கிப் போய்விடுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. அதற்கு சவாலாக உள்ளே வந்த வாசனை இதனால்தான் ஜேசனுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் வருகிறது. ஆனால், யாராவது கொஞ்சம் மீறிப்போனால், ”எல்லாம் கேமுக்காகத்தான், மற்றபடி உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று சொல்வது, ”நான் அப்படிப் பேசியதற்கு ஸாரி, இப்படிப் பேசியதற்கு ஸாரி கிடையாது” என்று திருகலாகப் பேசி குழப்பிவிடுவது போன்ற டெக்னிக்கையும் கையாள்கிறார். அதையே வாசன் மீதும் செயல்படுத்துவார் என்றும் நம்பலாம். வாசன் அந்த டெக்னிக்குகளில் மயங்காமல் இருந்தால், உருப்படலாம்.

புதிதாக உள்ளே வந்து லீடராகியிருக்கும் அக்சிதாவுக்கு வீட்டுக்குள்ளே இரண்டு அண்ணன்கள். ஒருவர் உடன்பிறந்த சகோதரர் அவினாஷ், மற்றவர் உடன்பிறவா சகோதரர் ஜேசன். இருவருக்கும் இப்படி ஒரு கஷ்டத்தை இந்தக் கல்நெஞ்சம் கொண்ட போட்டியாளர்கள் கொடுக்கிறார்களே என்பது போல, தான்தான் லீடர் என்பதையும் மறந்து அண்ணன்களுக்காகக் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். முதலில் தன்யா, ’தூக்கியடிப்பேன்’ என்று சொன்னதால்தான் ஜேசன் பதிலுக்குப் பேசிவிட்டார் என்று பச்சையாகப் புளுகினார். அதைக் கேட்டு அன்சாரும் பஞ்சாயத்தை ஒரு நடுநிலையோடு ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்திலேயே, தன்யா உள்ளே வந்ததும், ’தன்யா தூக்கியடிப்பேன் என்று சொன்னதால்தான், பதிலுக்கு ஜேசன் தூக்கியடிப்பேன் என்று சொல்லியிருப்பாரோ என்று நினைத்து முதலில் தன்யா சொல்லியிருப்பாரோ என்று கற்பனை செய்து, நான் அப்படிச் சொல்லவே இல்லை’ என்று சொல்லி அன்சாரை ஜெர்க்கடிக்க வைத்தார் அக்சிதா.

கொஞ்ச நேரத்தில், வாசன் மீண்டும் பிரச்சனைக்குள் வந்தார்.

”அப்படி என்ன நான் மரியாதை இல்லாமல் பேசி விட்டேன்னு சொல்லு” என்று ஜேசனிடம் கேட்டபோது,

”எங்கள் லீடரிடம் நீங்க ரெஸ்பெக்டாகத்தான் பேச வேண்டும். அவரை வாயை மூடு என்று சொல்லி இருக்கக் கூடாது. லீடருக்கென்று ஒரு மரியாதை இல்லையா? எங்கள் லீடருக்கு மரியாதை கிடைக்கவில்லை என்றால் முதல் ஆளாக நான்தான் வருவேன்”

”அப்ப அவர் மட்டும் என்னை வாயை மூடு என்று சொல்லலாமா?”

”லீடர் என்றால் அப்படித்தான் சொல்வார்”

”அப்படின்னா நானும் பதிலுக்கு வாய மூடு என்றுதான் சொல்வேன்”

”தாராளமா சொல்லிக்கோ. உன்னை யாரு வேண்டாம்னு சொன்னது?”

அதே மூடர்கூடம் டெக்னிக்! ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருத்தர் இந்த டெக்னிக்கைத் தூக்கிக்கொண்டு வந்து நம் உயிரை வாங்கிவிடுகிறார்கள். முடியவில்லை! இந்த அழகில் பெண்களின் பாதுகாவலர், லீடரின் பாதுகாவலர் என்ற பில்டப்புகள் வேறு! அடுத்து இந்தப் பிரச்சினையில் தங்களுடன் நிற்காத அன்சாரை தனியே கூப்பிட்டு கொண்டு போய் உட்கார வைத்து, மண்டையை கழுவிக் கொண்டிருந்தார்கள் ஜேசனும் அவிநாஷும். ஆனாலும் அவர் ’இது ஏதோ குரூப்பிசம் மாதிரி போய்க்கொண்டிருக்கிறது. நானெல்லாம் இதற்குள் வர முடியாது’ என்று சொல்லிக் கொண்டு இருந்தார். சரியாகத்தான் மோப்பம் பிடித்திருக்கிறார் அன்சார். ஆனால், அந்த முடிவில் உறுதியாக இருக்கிறாரா என்று பார்க்கலாம்.

BB 10 Tamil Day 30
BB 10 Tamil Day 30Jiohotstar

அடுத்து டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது முனியம்மாவுக்கும் அவிநாஷுக்கும் முட்டிக் கொண்டது. டேபிள் மேட்டை வைத்து ஒரு ஈயை விரட்டினார் முனியம்மா. அதற்கு ஒன்னும் சொல்லாமல் அந்த மேட்டை சரியாக மீண்டும் வைக்கும்படி சொன்னார் அவினாஷ். ஆனால், அவருக்கு மேட்டை வைப்பதை விட இதற்கு முன்னால் நடந்த பிரச்சனையில் தங்கச்சிக்கு எதிராக பேசிய முனியம்மாதான் முக்கியப் பிரச்சனை என்பது நமக்குப் புரிந்தது. இந்தச் சிக்கல் மிகப் பெரியதாக ஆன பிறகு, ”சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஈ ஓட்டுகிறேன் என்று சொல்லி மேட்டை வைத்து உதறிவிட்டார்” என்று பிரச்சினையை திசை திருப்பி விட்டார் அவினாஷ். முனியம்மாவும் ’நான் அப்படித்தான் செய்வேன். உன்னால் ஆனதை பார்த்துக்கொள்’ என்ற அவரது வழக்கமான டயலாக்கைப் பயன்படுத்தி அவிநாஷை வெறுப்பேற்றினார். பதிலாக அவினாஷ், கத்துவது, மேஜையை ஆக்ரோஷமாகத் தட்டுவது என இல்லாத அட்டகாசமெல்லாம் செய்துகொண்டிருந்தார். மீண்டும் தங்கச்சிக்கு, ’இதனால் அண்ணனுக்கு ஒரு கெட்டபெயர் வந்துவிடக்கூடாதே’ எனும் கவலை. ’நீ கத்தாதே அண்ணா, இந்த மண்ணில் நீதிக்கே இடமில்லை, நீ அமைதியாக இரு’ என்று அண்ணனை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். விளங்கின மாதிரிதான்.

அடுத்து, இந்த வார அடிதடி டாஸ்க் ஒன்றை ஆரம்பித்து வைத்தார் பிக்பாஸ். எல்லா சீசனிலும் வரும் அதே கன்வேயர் பெல்ட் டாஸ்க்குதான். வழக்கம் போல இரண்டு மூன்று குழுக்களாகப் பிரியாமல், இரண்டிரண்டு பேராக 9 குழுக்களை உருவாக்கி விளையாட விட்டார்கள். கன்வேயரில் வரும் பிளாக்குகளைச் சேகரித்து, அதன் மூலம் ஒரு பாட்டில் திரவத்தைப் பெற்று மற்ற அணியினரின் பாட்டில்களை நிரப்பி அவர்களை அவுட் ஆக்க வேண்டும். நினைத்தபடியே பல்வேறு குழுக்களும் ஒப்பந்த அடிப்படையில் விளையாட ஆரம்பித்தார்கள். எல்லோரிடமும் உள்ள பாட்டில்கள் ஒவ்வொன்றாக நிரம்பத் தொடங்கின. ஆனால், ஜேசன், முகேஷின் பாட்டில்கள் மட்டும் அப்படியே இருந்தன. ’இவன் மட்டும் என்ன நகாசு வேலை செய்கிறான்?’ என்று கடுப்பான அன்சார், ஜேசனைக் குறிவைத்து ஒரு பாட்டிலை நிரப்பினார். அதற்கு அனைத்து அணியினரிடமிருந்தும் பெரும் ஆதரவு கிடைத்தது. இது சோறு தண்ணி தூக்கமில்லாமல் ஆடும் 24 மணி நேர ஆட்டம். முனியம்மாவுக்கு நேரத்துக்கு சாப்பாடு, தூக்கமில்லாமல் இருக்க முடியாது. பார்ப்போம் என்னவாகிறது என்று.  

Puthuyugam
www.puthuyugam.com