

நிகழ்ச்சி தொடங்கியதுமே, ஏற்கனவே பணப்பெட்டி டாஸ்க்கில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியிருந்த குமரனை மேடைக்குக் கூப்பிட்டார் விஜய் சேதுபதி. குமரன் ஓர் அமைதியான, பக்குவமான மனிதராக இருப்பார் போலிருக்கிறது. ’இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை’ என்பது போல அவரெல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கவே கூடாது. அவரிடம் சம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டு அனுப்பிவைத்தார் விசே!
அடுத்து, ”சென்ற வாரம் ஒழுங்காக விளையாடுபவர்களுக்கு மூன்று எவிக்சன் ஃப்ரீ பாஸ் இருக்கிறது என்று சொன்னேனே... யாராவது அதை மனதில் வைத்து ஒழுங்காக விளையாடினீர்களா?” என்று கேட்டார் விசே. கிட்டத்தட்ட எல்லோரும் கையைத் தூக்கினார்கள். ஆனால், அவர்கள் ஹோட்டல் டாஸ்க் விளையாடிய அழகை வைத்துப் பார்த்தால், உண்மையில் அது யாருடைய மனதிலும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.
அதன் பிறகு, கயிறு கட்டி விடப்பட்ட லட்சுமி, ஜாவித், தன்யா, அஷ்மிதா, சவின்யா 5 பேரையும் கூப்பிட்டு இந்த வீட்டில் சிறப்பாக விளையாடும் ஒரு தகுதிவாய்ந்த போட்டியாளரைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள், அவருக்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸைக் கொடுப்போம் என்று சொன்னார்கள். அவர்களும் தனியே போய் கலந்தாலோசித்து, ஷமாவைத் தேர்ந்தெடுத்தார்கள். ஷமாவுக்கு பாஸ் வழங்கப்பட்ட போது எல்லோரும் சகஜமாக இருக்க, ஜேசன் மட்டும் கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு இருந்தார். அதைப் பார்த்து விஜய் சேதுபதிக்கே சிரிப்பு வந்துவிட்டது.
அதன் பிறகு வந்த இடைவேளையின் போது கூட, வினோத்தைப் பிடித்து வைத்துக் கொண்டு, ”இது கொஞ்சமும் சரியில்லாத தேர்வு. ஷமா அப்படி என்ன செய்து விட்டார்? அவருக்கு மேனேஜர் ரோல் கொடுத்ததால்தான் எல்லா அட்டென்ஷனும் அவர் மீது போய்விட்டது. எல்லாம் இந்த பிக்பாஸ் பண்ணிய வேலை” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
அடுத்து, வைல்ட் கார்டு என்ட்ரிக்களான யூடியூபர் டிடிஎஃப் வாசன், உள்ளே இருக்கும் போட்டியாளர் அவினாஷின் தங்கை அக்ஷிதா, காமன் மேன் போட்டியாளர் கரிஷ்மா என மூன்று பேரை ஒருவர் பின் ஒருவராக உள்ளே அனுப்பி வைத்தார்கள். இதில் வாசன் இந்த நிகழ்ச்சியை இதுவரை பார்த்திருக்கவில்லை போலிருக்கிறது. இதை எப்படி விளையாடுவது என்றும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவுதான். ”என்னைப் பற்றி வெளியே பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றுதான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்” என்று சொன்னார். அவரை உள்ளே அனுப்பிய பிறகு, அவருடைய நண்பரும் இதே கருத்தைச் சொன்ன போது, விஜய் சேதுபதி ”நாங்கள் என்ன பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துகிறோமா அல்லது உங்கள் மீது பொது வெளியில் இருக்கும் தவறான அபிப்ராயங்களை மாற்றுவதற்கான சேவை செய்து கொண்டிருக்கிறோமா?” என்று நக்கல் செய்தார். அதுவும் சரிதான். அக்ஷிதாவும், கரிஷ்மாவும் நன்றாகப் பேசினார்கள். இந்த மூன்று பேரில் கரிஷ்மா சிறப்பாக விளையாடுவார் என்று தோன்றுகிறது.
உள்ளே போன மூன்று பேருக்கும், வழக்கம் போல எல்லோரையும் கூட்டி உட்கார வைத்துக்கொண்டு பட்டப்பெயர் கொடுப்பது, கருத்து சொல்வது போன்ற அசிங்கப்படுத்தும் டாஸ்க்கைக் கொடுத்தார் பிக்பாஸ். வாசனுக்கு பஞ்சரான டயர், ஓட்டை சைலன்சர் என்பது போல சீட்டுகள் தரப்பட்டன. அவரும் கூடுமானவரைக்கும் அமைதியாகவே எல்லாவற்றையும் கொடுத்து முடித்தார். ஜேசன் மட்டும் அவர் கொடுத்ததை எழுந்து வந்து வாங்காமல், ’கொண்டு வந்து கொடு’ என்று சொல்ல, இவரும் சீட்டைத் தூக்கிப் போட்டுவிட்டு ’எடுத்துக்கோ’ என்று சொல்லிவிட்டார். எவ்வளவு அசிங்கப்பட்டாலும் இந்த ஜேசன் திருந்துவதாகவே தெரியவில்லை.
அடுத்து கரிஷ்மா வந்த போதும், ஜேசன் கடுப்பாகவே இருந்தார். காமன் மேன் நிகழ்ச்சியில் அவர்களுக்கிடையே ஏதாச்சும் வாய்க்காத் தகராறு இருந்ததா என்று தெரியவில்லை. கரிஷ்மா அவர் பங்குக்கு ஜேசனுக்கு குப்பைத்தொட்டி படத்தைக் கொடுக்க, அதை அலட்சியமாக தூக்கிப் போட்டார் ஜேசன். உடனே பிக்பாஸ் ’எல்லோரும் கொடுக்கப்பட்டதைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு திரியுங்கள்’ என்று சொல்லவும், வேறு வழியில்லாமல் எடுத்து மாட்டிக்கொண்டார். கடைசியாக வந்த அக்ஷிதா, ரேங்கிங் டாஸ்க்கில், ஜேசனுக்கு முதல் இடம் கொடுத்து வயிற்றில் பாலை வார்த்தபோதுதான் மனிதருக்கு கடுப்பு நீங்கி, முகத்தில் சிரிப்பே வந்தது. சாந்தினிக்கு அக்ஷிதா கடைசி இடம் கொடுத்து கடுப்படிக்க, கரிஷ்மாவும் ’நீங்கல்லாம் காமன் மேனுக்கு வந்திருந்தா முதல் ரவுண்டிலேயே வெளியே போயிருப்பீங்க’ என்று அசிங்கப்படுத்திவிட, சாந்தினிக்கு மண்டை காய்ந்து போனது.
இந்த டாஸ்க்குகளில் அன்சாரும் பெரியளவில் அடி வாங்கியதில் குழம்பிப் போய்விட்டார். கரிஷ்மாவைத் தனியே கூட்டிப்போய் விசாரித்துக் கொண்டிருந்தார். என்ன விளக்கம் சொன்னாலும் அவருக்கு மனசு பொறுக்கவில்லை. புலம்பிக் கொண்டே திரிந்தார்.
அடுத்து, கயிறு கட்டப்பட்ட ஜோடிகளான ஜாவித் -தன்யாவை எழுப்பி ஒரு குறும்படம் போட்டு காண்பித்தார் விசே. ஸ்விம்மிங் பூலில் குளிக்கும் போது ஆண்கள் எல்லோரும் சேர்ந்து ஜாவித்தை பிடித்து இழுத்து அமுக்கியதில், ஒரு தடவை ஜாவித்தின் கையில் இருந்து கயிறு அவிழ்ந்துவிட்டதாம். அதை ஒரு பெரிய தெய்வ குத்தமாகச் சொல்லி அவரை எவிக்ட் செய்து வெளியே வரச் சொன்னார். பக்கத்தில் இருந்த அஷ்மிதாவும், சவின்யாவும் எவ்வளவு சின்சியராக விளையாடினார்கள் தெரியுமா என்று அட்வைஸ் வேறு. ஆனால், உண்மையில் அவர்களிருவரும்தான் தொடக்கத்தில் பாத்ரூம் போனபோது கயிற்றை அவிழ்த்து விட்டு போனார்கள். அது விஜய் சேதுபதிக்கு தெரியவில்லை போலிருக்கிறது. இப்படி போங்காட்டம் ஆடியதற்குப் பதிலாக, மக்கள் தீர்ப்பு மூலமாக சவின்யாவை வெளியேற்றியது போலவே ஜாவித்தையும் அனுப்பியிருக்கலாம்.
இந்த வாரம் பல பெரிய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. இதன் விளைவுகள் வரும் வாரத்தில் சூடுபிடிக்கும் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்!