பிக்பாஸ் 10 -நாள் 27:  முரண்பாடாகப் பேசும் ஜேசன்! #BiggBoss10

விஜய் சேதுபதி, ஜேசனைப் பார்த்து, ”நானும் பல தடவைகள் நாசூக்காகச் சொல்லி விட்டேன். இனி ஒரு முறை இப்படிச் செய்தால் கடுப்பாயிடுவேன், ஜாக்கிரதை” என்று எச்சரித்து உட்கார வைத்தார்.
BB 10 Tamil Day 27
BB 10 Tamil Day 27
Published on: 

”சென்ற வாரம் வைல்டு கார்டு நுழைவாக உள்ளே வந்த மூன்று போட்டியாளர்களின் கையிலும் ஒரு கயிற்றைக் கொடுத்தோம். ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரோடு கைகளைப் பிணைத்துக்கொண்டு அவரை டார்ச்சர் செய்து வெளியே அனுப்ப முயற்சிக்குமாறு சொன்னோம். இங்கே மேடையில் வீராவேசமாக ’இப்பப் பாருங்க எங்க ஆட்டத்தை’னு சொல்லிட்டு உள்ளே வந்த மூணு பேருமே, உள்ளே போனதுமே பழையபடியே செட்டிலாயிட்டாங்க. ஆட்டமே புஸ்ஸூனு போயிடுச்சு. சரி அதே மாதிரி உங்களுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சா யாரை செலக்ட் பண்ணுவீங்க? அவங்களை எப்படி வெளியே அனுப்ப முயற்சிப்பீங்கனும் சேர்த்துச் சொல்லுங்க பார்ப்போம்” என்று வந்ததுமே விஜய் சேதுபதி, தனது வழக்கமான நேரப்போக்குக் கேள்வியில் ஆரம்பித்தார்.

முதலில் எழுந்த முத்தழகி, ”நான் ராகவண்னாவை செலக்ட் பண்ணுவேன். அவர் இன்னும் ஓபன் அப் ஆகவே இல்லை” என்று வளவளவென்று ஒரு பதிலைச் சொல்ல கடுப்பான விசே, ”எம்மா, கேக்குற கேள்வி உங்களுக்கு புரியுதா இல்லையா” என்று திட்டி உட்காரவைத்துவிட்டு மற்றவர்களைக் எழுப்பினார். அடுத்த எழுந்த அவினாஷ், ஜேசனை பற்றி ஏதோ சொல்ல முயற்சிக்கும் போது, ஜேசன் இருந்த இடத்திலிருந்தே வழக்கம் போல சைகையில் ஏதோ மாக்கிங் செய்ய ஆரம்பித்தார். அதைப் பார்த்த விஜய் சேதுபதி, ஜேசனைப் பார்த்து, ”நானும் பல தடவைகள் நாசூக்காகச் சொல்லி விட்டேன். இனி ஒரு முறை இப்படிச் செய்தால் கடுப்பாயிடுவேன், ஜாக்கிரதை” என்று எச்சரித்து உட்கார வைத்தார். ஜேசனின் இந்த சைகை விளையாட்டுகள் நமக்குமே வெகுவாக எரிச்சலை கிளப்புகின்றன. அந்த வகையில் விசே இப்படி ஒரு குட்டு வைத்ததில் நமக்கு மகிழ்ச்சிதான்.

’சாப்பிடுவது, தூங்குவது போன்ற விசயங்களில் ஒத்துழைக்காமல் எரிச்சலை ஏற்படுத்துவேன், வேறேதும் தனிப்பட்ட வீக்னஸ் இருந்தால் அதைக் குறிப்பிட்டுச் சொல்லி அதன் மூலம் கடுப்பேற்றுவேன்’ என்பது போன்ற பதில்களை விசே எதிர்பார்த்திருக்கிறார் போலிருக்கிறது. ஜேசன், விக்னேஷ், முனியம்மா போன்ற ஒரு சிலர் மட்டுமே அதையொட்டிப் பதில் சொன்னார்கள். மற்றவர்கள் முத்தழகியைப் போலவே இந்தக் கேள்வியின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் வளவளவென்று பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். லட்சுமிக்கும், விக்னேஷுக்கும் இடையே ஒரு பெரிய வாய்க்காத் தகராறு இருப்பதைப்போலவே, ஜேசனுக்கும், ஷமாவுக்கும் இடையேயும் பெரிய வன்மம் இருக்கிறது என்பது இந்தக் கேள்வியில் வெளிப்பட்டது.

அதன்பிறகு சென்ற வாரம் உள்ளே போன ஜாவித், லட்சுமி, சவின்யா மூவரையும் எழுப்பி, ’மேடையில் வைத்து நீங்கள் பேசிய வீராவேசம் எல்லாம் எங்கே போனது?’ என்று கேட்டார். மூன்று பேருமே, ’நீங்க உள்ளே வந்து பார்த்தாத் தெரியும்’ என்பது போன்ற மைண்ட் வாய்ஸுடன் தலையைக் குனிந்துகொண்டார்கள். ஜாவித் ஒரு படி மேலே போய் ’என்னால் இன்னொருவரை டார்ச்சர் செய்து விளையாடவெல்லாம் முடியவில்லை’ என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். சவின்யா, ”அரை மணி நேரம் அஷ்மிதாகிட்ட கெஞ்சினா, அப்புறமா அவங்க பாத்ரூம் போக விட்டுருவாங்க. அவங்க பாத்ரூம் போகும் போது என்னை தரதரவென்று இழுத்துக்கொண்டே போயிடுவாங்க. அதனால அவங்க தோத்துட்டாங்க, நான் ஜெயிச்சிட்டேன். அப்படித்தானே சார்?” என்று விசேவைப் பார்த்துக் கேட்டு அவருக்குத் தலைசுற்ற வைத்தார். அஷ்மிதாவைப் பார்த்து ’பாத்ரூம் விசயத்திலாங்க விளையாடுவது’ என்று அவரைத் திட்ட வைத்திருந்த ஒரு பாயிண்டையும் கூட சவின்யா செல்ஃப் கோல் போட்டு இல்லாமல் ஆக்கிவிட்டதால், அடுத்து பேசிய அஷ்மிதா எளிதாக அவரது நியாயங்களை எடுத்து வைத்துவிட்டார்.

BB 10 Tamil Day 27
BB 10 Tamil Day 27Jiohotstar

ஹோட்டல் டாஸ்க்கின் போது, ஒரு முறை உடைந்து போய் அழுதுகொண்டிருந்த தன்யாவை அணைத்துக்கொண்டு பிருத்வி, ”இங்கு யாரும் தனிப்பட்ட முறையில் உன்னைப் பழி வாங்கவில்லை. இது எல்லாமே டாஸ்க்குக்காகத்தான் என்று புரிஞ்சுக்கோ” என்று சமாதானம் செய்து கொண்டிருந்தார். அதற்காக பிருத்வியை எழுப்பி நிற்க வைத்துக் கொண்டு, ”ஏன் அப்படிச் செஞ்சீங்க, அந்த டாஸ்க் இன்னும் முடியவில்லைல்ல? இல்லைன்னா நீங்க அவரோட டீம்ல இருந்தீங்களா, அல்லது உங்களை பிக்பாஸ் கூப்பிட்டு அவரை சமாதானம் செய்யச் சொன்னாரா?” என்று குட்டிவிட்டார். இந்த வீட்டில் ஏற்கனவே ஒருத்தரும், இன்னொருவருக்காக மனமிறங்க மாட்டார்கள்... அப்படி இருக்கும் ஒரு சிலரையும் இப்படி ஆக்கிவிட்டால் விளங்கிடும். ஆட்ட சுவாரசியத்துக்காகவும், ஒரு போட்டியாளருக்கு சுய வலிமை எவ்வளவு முக்கியம் என்பதற்காகவும்தான் அப்படிச் சொல்கிறார் என்பது புரிகிறது. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்!

அடுத்து ஹோட்டல் டாஸ்க் 2.0-வின் மொத்த சொதப்பலுக்கும் மேனேஜராக இருந்த லட்சுமி பிரியாதான் காரணம் என்று சொல்லி அனைவரும் சேர்ந்து லட்சுமியை ஒரு காட்டு காட்டினார்கள். ஆனால், அவருக்கு இதெல்லாம் உறைக்காது. அதற்கடுத்து ஜேசன் எழுந்து ’ஷமாவைத் தவிர நாங்கள் எல்லோரும் சிறப்பாக ஹோட்டல் டாஸ்க்கை நன்றாக விளையாடினோம்’ என்று சொன்னார். கொஞ்சம் முன்னால் இதே ஜேசன்தான், ’ஷமா ஒரு மேனேஜராகப் பட்டைய கிளப்பிவிட்டார் சார்’ என்று சொன்னது. அதைக் குறிப்பிட்டு ’ஏதாவது ஒன்றைச் சொல்லுய்யா, நேரத்துக்கு ஒண்ணைப் பேசிகிட்டு திரியாத’ என்று அவர் மண்டையில் குட்டி உட்காரவைத்தார் விசே.

நாளை ஞாயிற்றுக்கிழமை எபிசோடில், இரண்டு எவிக்ஷன்கள், மூன்று வைல்டு கார்டு நுழைவுகள் ஆகியன இருப்பதால், இன்றைக்கு சனிக்கிழமை எபிசோடை வழக்கமான நேரப் போக்குக் கேள்விகளை வைத்தே ஒப்பேற்றிவிட்டு சீக்கிரமாகக் கிளம்பிவிட்டார் விஜய் சேதுபதி. நாளை என்னவாகிறது என்பதை நாளை பார்ப்போம்!

Puthuyugam
www.puthuyugam.com