

ஹோட்டல் டாஸ்க்கில், ஊழியர் அணியில் 12 பேரும், கெஸ்ட் அணியில் 6 பேரும் இருந்தார்கள். மேலும் அந்த 6 பேரும் இந்த வார நாமினேஷனில் வேறு இருந்ததால் ரோல் ஸ்வாப்பிங் நடக்காது என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் ரோல் ஸ்வாப்பிங் செய்து விட்டார் பிக்பாஸ். 6 பேரை 12 பேர் சேர்ந்து கவனித்துக் கொள்வது எப்படி? 6 பேர் 12 பேரை கவனித்துக் கொள்வது எப்படி? ரொம்பவே சிரமமான காரியம்தான். ஆனால், இப்படி எல்லாம் ஸ்வாப்பிங் நடக்கும் என்று தெரிந்திருந்தால் கெஸ்டுகளும் அத்தனை ஆட்டம் போட்டிருக்க மாட்டார்கள்.
நடந்தது நடந்துவிட்டது, இரண்டு பேர் சேர்ந்து 12 பேருக்கு கேட்டதையெல்லாம் சமைத்து போடுவது மிகவும் சிரமமான காரியம்தான் என்பதைப் புரிந்து கொண்டு மற்ற போட்டியாளர்களாவது கொஞ்சம் விட்டுக்கொடுத்து போயிருக்கலாம். ஆனால், அதற்கு யாரும் தயாராக இல்லை. அந்த அளவுக்கு தன்யாவும், லட்சுமியும் கடந்த 3 நாட்களாக ஆட்டம் போட்டிருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அனைவரும் சேர்ந்து தன்யாவை ’கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச?’ எனும் மோடுக்குப் போய் வைத்துச் செய்து விட்டார்கள். ஒரு நபர் எவ்வளவு தவறு செய்தாலும் எல்லோரும் சேர்ந்து அவரை டார்கெட் செய்தால், தன்னிச்சையாக பார்வையாளர்களிடமிருந்து அந்த நபர் மீது சிம்பதி உருவாகிவிடும். அந்தப் புரிதல் இல்லாமல் எல்லாரும் தன்யாவை இயன்றவரை டார்ச்சர் செய்து கொண்டிருந்தார்கள்.
ஆடை மாற்றிக் கொண்டு வந்ததுமே, ரொம்ப சின்சியராக ஜாவித்தும், தன்யாவும் ரொம்ப எல்லோரிடமும் போய் உணவுக்கான ஆர்டர் எடுக்க ஆரம்பித்தார்கள். ஒருவர் ’பேன் கேக் வித் சாக்லெட் சாஸ்’ என்கிறார். இன்னொருவர் ’ஆனியன் போடாத பனீர் ஃப்ரை’ என்கிறார். இப்படி வரிசையாக, ப்ரான் தவா ஃப்ரை, ஃபிஷ் ஃப்ரை, கார்னிஷ்டு எக் ஆம்லெட், டொமேட்டோ ரைஸ், மட்டன் கோலா உருண்டை, சாஸேஜ் என விதம் விதமாக அடுக்கிக் கொண்டே போனார்கள். உண்மையில், இத்தனை பேர் இத்தனை விதமாகக் கேட்பதை இரண்டு பேர் செய்து கொடுக்க வாய்ப்பே இல்லை. ஒழுக்கமாக வழக்கமாக சமைப்பதைப் போல, மதிய உணவை எல்லோருக்கும் தேவையான அளவு மொத்தமாக சமைத்து வைக்கலாம். அதை முதலில் செய்துவிட்டு பசிப்பவர்கள் இதை சாப்பிட்டுக் கொள்ளுங்கள், மற்றபடி நீங்கள் கேட்பதையெல்லாம் இந்த உணவுக்கு பின் ஒவ்வொருவருக்காக, வரிசைப்படி செய்து கொடுக்கிறோம் என்று சொல்லி இருக்கலாம். இது ஆர்டர் எடுக்கும் தன்யாவுக்கும் தெரியவில்லை. ஆர்டர் கொடுக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் தெரியவில்லை. தன்யா ஒரு படி மேலே போய் உங்களுக்கு முதலில் நான் வெல்கம் ட்ரிங்க்ஸ் கொண்டு வருகிறேன், அதன் பிறகு கேட்பதையெல்லாம் சமைத்து தருகிறேன் என்று வேறு சொல்லிக் கொண்டிருந்தார்.
முகேஷ் மட்டும்தான் இதை ஓரளவுக்குப் புரிந்து கொண்டு, ’இவர்கள் எடுக்கும் ஆர்டர் எதையுமே, இவர்களால் சமைத்துக் கொடுக்கவே முடியாது. நடக்கிற வேலையை முதலில் பாருங்கள்’ என்று சொன்னார். அவர் சொன்னது போலவே ஆர்டர் எடுத்த தன்யாவும், ஜாவித்தும் ஒரு காபி கூட போட்டுக்கொடுக்காமல், இருவருமாகப் போய் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சமையல் வேலையும் நடக்கவில்லை. சாப்பிடும் நேரமும் கடந்து கொண்டிருந்தது. நேரமாக நேரமாக எல்லோருக்கும் அடிப்படையாகச் சாப்பிடுவதற்குக் கூட எதுவுமில்லாமல் பசியில் எரிச்சலடைந்து கொண்டிருந்தார்கள்.
அப்படி இருந்தாலும் ஷாதிகா, அவிநாஷ் போன்றோர், ’நம்மை மட்டும் அந்தப் பாடு படுத்தினார்கள் அல்லவா? நாம் கேட்பதைச் செய்து கொடுத்துதான் ஆக வேண்டும் அல்லது ஆட்டத்தில் இருந்து வெளியே போகட்டும்’ என்று பழிவாங்கும் நோக்கத்திலேயே இருந்துகொண்டிருந்தார்கள். ஆட்டத்தில் இருந்து வெளியே போனால், அவர்களுக்குத்தான் அது நல்லது. மீண்டும் இவர்கள்தான் இருப்பதைச் சமைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். பசியில் ஒரு பிரட் ஆம்லெட்டாவது கொடு, ஒரு காபியாவது கொடு, ஒரு ஆப்பிளாவது கொடு, பழைய சோறாவது கொடு என்று ஆங்காங்கே குரல்கள் கேட்க ஆரம்பித்தன. ஆனால், அப்போதுதான் ஜாவித்தும், தன்யாவும் எடுத்த ஆர்டர் பேப்பரை ஓரமாக வைத்துவிட்டு, அடுப்பில் உலையை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.
முனியம்மா பசி தாங்க முடியாமல், கொஞ்சம் பழைய சோற்றை தட்டில் போட்டுக்கொண்டு, ஊறுகாய் எடுக்கப்போன போது, ’கிச்சனுக்குள் வரக்கூடாது மேடம்’ என்று தடுக்க முயன்ற லட்சுமியின் கை பட்டு அந்தப் பழைய சோறுக் கீழே விழுந்து அதனால் ஒரு தகராறு வேறு நடந்தது.
’நாம் ஆட்டம் போட்டது தவறு’ என்று தன்யாவுக்குள் குற்றவுணர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் ஏதாவது ஒன்றை ஒழுங்காகச் செய்துகொடுக்க வேண்டும் என்று முயலாமல், எல்லாவற்றையும் செய்து கொடுக்க வேண்டும் எனும் நினைப்பில் எதையுமே செய்யாமல், திணறிக் கொண்டிருந்தார். சாப்பிட ஒன்றும் கிடைக்காத ஆத்திரத்தில், அனைவரும் அருகே வந்து, ’நீ மட்டும் மூக்கு முட்டத் தின்னீல்ல, உனக்கு மூணு லேயர்ல ஐஸ்கிரீம், அதுவும் வாயில கொண்டு வந்து ஊட்டிவிடச் சொன்னீல்ல, இப்ப சமைக்கிற கஷ்டம் தெரியுதா? ஒழுங்கா பண்ணு. இல்லைன்னா கயித்தைக் கட் பண்ணிட்டு வீட்டை விட்டு வெளியே போ’ என்று இறங்கி அடித்தார்கள். சாப்பிட்ட உணவைச் சொல்லிக் காண்பிப்பது, உனக்குத் தகுதியில்லை, வீட்டை விட்டு வெளியே போ என்றெல்லாம் சொல்வதைப் பொறுக்க முடியாமல், பொங்கும் கண்ணீர் அடக்கிக் கொண்டு சமைக்க முயற்சி செய்துகொண்டிருந்தார் தன்யா. இரண்டு புறமும் தவறுகள் இருக்கின்றன. நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை!
இன்னொரு புறம், லட்சுமியையும் முடிந்தவரை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஜேசனிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கிக் கொண்டிருந்தார் லட்சுமி. கடைசியில் எப்படியோ ஒப்பேற்றி சோறு, தக்காளிக் குழம்பு என்று ஏதோ ஒன்றைச் சமைத்துக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதிலும் சோறு அனைவருக்கும் போதாமல் ஆகிவிட, நைஸாக ஒரு தட்டில் மட்டும் பழைய சோற்றைப் போட்டுக் கொண்டு வந்தார்கள். அந்தத் தட்டு வினோத்துக்குப் போனது. அவர் தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று கடவுளை நொந்து கொண்டிருந்தார். தன்யவைக் கூப்பிட்டு ’எனக்கு சோறு எங்கே?’ என்று கேட்க, ’இப்போதான் அடுப்பில் மறு உலை ஏற்றியிருக்கிறோம்’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் தன்யா.